28 வயதிற்குள் 9 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி
கோரா டியூக் என்ற பெண்மணி தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
உலகமெங்கும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தால் போதுமானது என்ற மன நிலையில் பெரும்பாலான தம்பதிகள் இருக்கிறார்கள். இந்த நிலைப்பாடு 19-ம் நூற்றாண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனாலும் அதிக குழந்தைகளை பெற்றெடுத்து கொஞ்சி மகிழும் தம்பதியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதற்கு சாட்சியாக இருக்கிறார், கோரா டியூக் என்ற பெண்மணி. இப்போது பல பெண்கள் 28 வயதுக்குள்தான் திருமண பந்தத்துக்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில் இவர் அந்த வயதுக்குள் 9 குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். தற்போது இவருக்கு 39 வயதாகிறது. தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
கோரா டியூக், அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் இருக்கும் லாஸ் வேகாஸ் நகரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் பெயர், ஆண்ட்ரே டியூக். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பை தொடர்ந்திருக்கிறார்கள். காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள்.
கோரா டியூக் 2001-ம் ஆண்டு முதன்முதலில் கர்ப்பம் தரித்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது 17. தான் பெற்றெடுத்த முதல் குழந்தைக்கு எலியா என்று பெயரிட்டிருக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றெடுத்து வந்திருக்கிறார்.
ஆனால் தான் 9 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று ஒருபோதும் திட்டமிடவில்லை என்றும் சொல்கிறார். தாய்மை அடைய வேண்டும் என்பதுதான் தனது ஆசையாக இருந்ததாக சொல்கிறார். 17 வயதில் தொடங்கிய கர்ப்ப காலம் 2012-ம் ஆண்டு வரை நீடித்திருக்கிறது. ஆம்! தனது கடைசி குழந்தையை 2012-ம் ஆண்டு பெற்றெடுத்திருக்கிறார்.
இப்போது, முதல் குழந்தை எலியாவுக்கு 21 வயதாகிறது. அடுத்த மகள் ஷீனாவுக்கு 20 வயது. அதைத்தொடர்ந்து ஜான் (17), கெய்ரோ (15), சயா (14), அவி (13), ரோமானி (12) மற்றும் தாஜ் (10) என மொத்தம் 8 பிள்ளைகள் இருக்கிறார்கள். துரதிருஷ்டமாக ஒரு குழந்தை இறந்துபோய்விட்டது. 2004-ம் ஆண்டு பிறந்த அந்த குழந்தை யூனா, ஒரு வாரத்திற் குள்ளாகவே நோய் பாதிப்புக்குள்ளாகி மரணித்துவிட்டது.
''தாய்மை எனக்கு இயல்பாக வந்தது. என் கணவரின் உதவியால் என்னால் பல தடைகளைத் தாண்டிச் செல்ல முடிந்தது" என்கிறார், கோரா டியூக்.
கடந்த ஆண்டு கோரா டியூக் தனது அனைத்து குழந்தைகளின் புகைப்படங்களையும் அவர்கள் பிறந்த தேதி, ஆண்டு குறிப்பிட்டு சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அது வைரலாகி பலருடைய கவனத்தை ஈர்த்தது. விமர்சனத்துக்கும் உள்ளானது. உங்களால் எப்படி தொடர்ந்து 10 ஆண்டுகள் கர்ப்பிணியாக இருக்க முடிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
''நான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் நான் எதன் மீதும் கவனம் செலுத்தவில்லை. அதனால் என் உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டது. நான் இளமையாக இருந்தேன். அது மட்டுமே எனக்கு ஆறுதல் தந்தது. மன தைரியத்தையும் கொடுத்தது. அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளாவேன். குடும்பத்தினர் ஆதரவாக இருந்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது'' என்கிறார்.
தாஜ் பிறந்த பிறகு, மீண்டும் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்பாததால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டார்.