மக்களுக்காக ஒரு நடை பயணம் - அசுதோஷ் ஜோதி


மக்களுக்காக ஒரு நடை பயணம் - அசுதோஷ் ஜோதி
x

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு, விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு போன்ற பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடை பயணம் மேற்கொண்டிருக்கிறார், அசுதோஷ் ஜோதி.

25 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள நர்வன் கிராமத்தை சேர்ந்தவர். அங்கிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தொடங்கிய இவரது நடை பயணம் மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா என மாநிலங்கள் கடந்து நீண்டிருக்கிறது. தான் செல்லும் வழியில் சந்திக்கும் மக்களிடம் தற்போதைய சூழலில் நிகழும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்கிறார்.

ஒடிசாவுக்கு செல்லும் வழியில் புவி வெப்பமயமாதல், வறட்சி, விளை பொருட்கள் உற்பத்தி செய்வதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மகசூல் குறைவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகளுடன் விவாதித்திருக்கிறார். மேலும் இவை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடத்தில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஏற்படுத்தும் வகையில் கூட்டங்களையும் நடத்தி இருக்கிறார்.

ஜோஷி, ஒடிசா மாநிலத்தை சென்றடைவதற்கு முன்பு சோலாப்பூர், பந்தர்பூர், சந்திராபூர் மற்றும் லத்தூர் போன்ற பகுதிகளை பார்வையிட்டிருக்கிறார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்களை தனித்தனியாக சந்தித்து தனது பயண நோக்கம் குறித்து விவரித்திருக்கிறார்.

அதற்கான காரணத்தை கூறுபவர், ''நான் சமூகத்தை மாற்ற விரும்பவில்லை. தனி நபர்களிடத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். தனி நபரிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே போதுமானது. அப்படி ஒவ்வொரு தனி மனிதரிடத்திலும் விழிப்புணர்வும், மாற்றமும் ஏற்படும்போது அது சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே தனி மனிதர்கள்தான் என் இலக்கு. அவர்கள் மாற்றத்தை விரும்புவதையும் கண்கூடாக பார்த்துவிட்டேன். அவர்களிடத்தில் என் நடை பயணத்தின் நோக்கத்தை விளக்கி கூறி அவர்கள் மூலம் மாற்றத்தை தொடங்கி இருக்கிறேன்'' என்கிறார்.

அசுதோஷ் ஜோஷி மும்பை தாதர் மற்றும் புனேவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தனது படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். பின்னர், இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் நுண்கலை படிப்பை தொடர்ந்திருக்கிறார். அப்போது இங்கிலாந்து மட்டுமின்றி ஸ்பெயின் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று இயற்கை சூழ்ந்த பகுதிகளை படம் பிடிப்பதற்கு ஆர்வம் காட்டி இருக்கிறார்.

படிப்பை முடித்ததும் இந்தியா திரும்பியவர் விழிப்புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி விட்டார். அதற்கான காரணத்தை விவரிப்பவர், ''நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு சமூகத்தில் நிலவும் சீரழிவுகளை ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டேன். இங்கிலாந்தை ஒப்பிடும்போது இந்தியாவில் நிலைமை மோசமாக இருக்கிறது. மக்கள் பலர் யதார்த்த வாழ்வியலில் இருந்து விலகி இருப்பதை புரிந்து கொண்டேன். நாட்டையும், மக்களையும் புரிந்து கொள்ள நடை பயணம் செய்வது சரியானது என்று முடிவு செய்தேன். எனவே நடக்க ஆரம்பித்து விட்டேன்'' என்கிறார்.

அசுதோஷ் ஜோஷி 1,800 கிமீ நடைபயணம் மேற்கொண்டு நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story