திருமணத்துக்கு பிறகும் காதலை கட்டமைக்கலாம்
காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தங்கள் காதலை உயிர்ப்புடன் பின் தொடர்வதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என எதிர்கொள்ளும் வாழ்க்கை மாற்றங்கள் காதல் தீயை கட்டுப்படுத்தக்கூடும்.
வேலைக்கு செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் என ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு மாறக்கூடும். அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழகிவிடும்போது ஒருவித சலிப்பு எட்டிப்பார்க்கும். காதலிக்கும்போது தன்னிடம் காண்பித்த அன்பை இப்போது வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணம் துணையிடம் குடிகொண்டுவிடும். சின்னச் சின்ன விஷயங் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும். அதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
வாரத்திற்கு ஒருமுறை, இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாவது வெளி இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவை ஷாப்பிங், சுற்றுலா, கடற்கரை, பூங்கா, காபி ஷாப் என எந்த இடமாகவும் இருக்கலாம். அங்கு குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள். காதலித்த நாட்களை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாட்களை மீண்டும் அன்றாட வாழ்வில் நினைவுபடுத்தும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல், அன்பு, அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மாதம் ஒருமுறையேனும் துணைக்கு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பரிசு வழங்குவது, திடீரென சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுப்பது என `சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதத்தில் செயல்படுங்கள். அவை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.
விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். இந்த செயல் அவரின் வேலையை எளிமைப்படுத்தும். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்கும். குழந்தைகள், குடும்பத்தினருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குழுவாக நடனம் ஆடலாம். அவை உடல் மற்றும் மன ரீதியாக உற்சாகத்தை வழங்கும். உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவும் வழிவகுக்கும்.
காதலித்த சமயத்தில் நடை, உடை, அழகை பராமரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினீர்களோ அதனையே இப்போதும் பின் தொடருங்கள். மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கவும் அவை உதவும். துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவியுங்கள். அவை கடந்த கால காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க பக்கபலமாக அமைந்திருக்கும்.