நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி... யாருக்கு பலன்?


நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி... யாருக்கு பலன்?
x

தேசிய அளவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா' கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன.

லகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 வாக்காளர்கள் ஓட்டுபோடும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த தேர்தலில், தேசிய அளவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை மாறுபடுகின்றன.

39 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இங்கு அந்த கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. அந்த கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கடந்த (2019) நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தனது கூட்டணி வியூகத்தை இதேபோலத்தான் அமைந்திருந்தாலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போதைய நிலையைவிட வலுவாக இருந்தது. அப்போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில்தான் இடம்பெற்றிருந்தது.

ஆனாலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனது தலைமையில் தனியாக கூட்டணியை அமைத்துக்கொண்டு களம் காண்கிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படித்தான் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி கணக்குகள் மாறிக்கொண்டே வருகின்றன. ஆனால், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் தனித்தே களம் காண்கிறது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி, தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்து என 4 முனைப் போட்டி நிலவுகிறது. இது யாருக்கு பலத்தை கொடுக்கும்?, யாருக்கு பலகீனத்தை கொடுக்கும்? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்தில் 'இந்தியா' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி. ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி அசத்தியது.

அந்த தேர்தலில், தி.மு.க. 32.76 சதவீத வாக்குகளை பெற்றது. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் 12.76, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40, இந்திய கம்யூனிஸ்டு 2.43, விடுதலை சிறுத்தைகள் 1.17, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீத வாக்குகளை பெற்றன.

இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பது, 'இந்தியா' கூட்டணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்பலாம். கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 3.68 சதவீத வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யமும் இப்போது இந்த கூட்டணியில் இணைந்திருப்பது மேலும் வலிமை சேர்க்கும். தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 20 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 19 பேர் புதியவர்கள்.

வெற்றி வாய்ப்பு எப்படி?

தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குறைவாக தெரிந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. அதை தூக்கி நிறுத்துவதால், இங்கு அதன் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதற்கு நேர்மாறாக, இந்திய அளவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக தெரிகின்ற போதிலும், தமிழகத்தில் பலகீனமாக இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் 3.66 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. தற்போது, அதே கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. கடந்த தேர்தலில் 5.42 சதவீத வாக்குகளையும், அ.ம.மு.க. 5.3 சதவீத வாக்குகளையும், த.மா.கா. 0.51 சதவீத வாக்குகளையும் பெற்றன.

பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம், அண்ணாமலையின் யாத்திரை ஆகியவை பா.ஜனதாவுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது.தற்போது, பா.ஜனதா தேர்தல் அறிக்கையும் கடைசி நேரத்தில் வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது. எனவே, இந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதாவின் வாக்கு சதவீதம் உயர்வது போல் தெரிந்தாலும், அது வெற்றி வாய்ப்பை கொடுக்குமா? என்பதை வாக்காளர்களின் எண்ண ஓட்டமே முடிவு செய்யும்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் (தேனி) மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் 18.48 சதவீத வாக்குகளை பெற்றது. பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது என்று கடந்த (2021) சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருத்து கூறியதால், இந்த தேர்தலில் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க. கடந்த தேர்தலில் 2.19 சதவீத வாக்குகளே பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மறைவும் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் பிரசார யுக்தியும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் ஓரளவு கைகொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு, குடும்ப அரசியல் போன்ற பிரசாரங்கள் மக்கள் மத்தியில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. இதனால், அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் உயருமா?, வெற்றி வாய்ப்பை கொடுக்குமா? என்பது போக போகத்தான் தெரியும்.

கட்சி தொடங்கியது முதல் தனித்தே தேர்தலை சந்தித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, இந்த முறையும் தனி ஒருவனாகவே களம் காண்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது. சமூக வலைதளங்களிலும் நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் முன்னணி வகிக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3.88 சதவீத ஓட்டுகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறது. எனவே, இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெறும் வெற்றி என்பது, அக்கட்சி பெறும் வாக்கு சதவீதத்தின் வளர்ச்சியை பொறுத்தே இருக்கிறது.


Next Story