விழிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம்..!


சாலைகளில் தங்கியிருந்து, யாசகம் கேட்கும் பலரை நாம் பார்த்திருப்போம். அவர்களை எளிதாக கடந்து சென்றிருப்போம். ஆனால் ‘டேக் கேர்' அமைப்பினரால், அவர்களை அப்படி எளிதாக கடந்து செல்லமுடியவில்லை. அவர்களை வாழ்வாதார ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் மேம்படுத்த நினைத்திருக்கிறார்கள். அழுக்கு பிடித்த நிலையில், கிழிந்த ஆடையுடன்... யாசகம் கேட்கும் பலரை, சுத்தப்படுத்தி, புத்தாடை அணிவித்து, அவரவர் குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதுடன், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.

சமீபத்தில்கூட, சென்னை எழும்பூர் பகுதியில் இருந்த பலரை, சமூக அடையாளம் கொண்ட மனிதர்களாக மாற்றியிருக்கின்றனர். இதுகுறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது இப்ராகிம் பகிர்ந்து கொள்கிறார்.

''சாலையில் யாகசம் கேட்கும் மனிதர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. சிலர் குடும்ப பிரச்சினையால் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, சாலையில் தங்கி இருக்கிறார்கள். சிலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல், யாசகம் கேட்டே பிழைப்பை நடத்துகிறார்கள். இவர்களை எல்லாம் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான், எங்களது லட்சியம். இதற்காக, பல சமூக அமைப்புகளுடன் சேர்ந்து களப்பணியாற்றுகிறோம்'' என்றவர், சென்னை சாலைகளில் யாசகம் கேட்பவர்களுக்கு, 'ஹோப் பார் ஹோம்லெஸ்' என்ற திட்டத்தின் கீழ் புதுப்புது சமூக அடையாளங்களை உருவாக்கி கொடுக்கிறார்.

''சென்னை எழும்பூர் பகுதியில் யாசகம் கேட்கும் முருகன் என்பவரை சந்திக்க நேரிட்டது. அவருக்கு யாசக வாழ்க்கையை விடுத்து தொழில் செய்ய ஆசைதான். ஆனால் அதற்கான வழிகாட்டுதல் இன்றி இருப்பதை உணர்ந்து கொண்டோம். அவரை யாசக வாழ்க்கையில் இருந்து மீட்டெடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப செய்தோம். சிகை அலங்காரம், உடை அலங்காரம் என்பதுடன் நிறுத்திவிடாமல், அவர் சமூகத்தோடு சமூகமாக இருப்பதை உறுதி செய்ய, அவருக்கு என சிறு தொழில் ஆதாரத்தை உருவாக்கினோம்'' என்றவர், மிதிவண்டியில் சாண்ட்விச் கடை இருப்பதுபோல ஒன்றை உருவாக்கி, அதை முருகனுக்கு பரிசளித்திருக்கிறார். முருகன் மட்டுமின்றி, இவரை போல பல சென்னை யாசகர்கள் புதுப்புது தொழில் அடையாளம் பெற்றிருக்கிறார்கள்.

''தொழில் ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் எங்களது வேலை முடிந்துவிடுவதில்லை. அவருக்கு சாண்ட்விச் செய்ய கற்றுக்கொடுப்பது, அதை மக்கள் நடமாடும் பகுதிகளில் விற்பனை செய்ய வழிகாட்டுவது, சமூகத்தோடு ஒன்றியிருக்க செய்வது... போன்ற அடுத்தடுத்த பணிகளிலும், கவனம் செலுத்துகிறோம்'' என்றவர், ''யாசகர்களில் பெரும்பாலானோர், உழைத்து வாழும் புது வாழ்க்கையையே விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழிகாட்டுதல் அவர்களுக்கு கிடைப்ப தில்லை. அதை நாங்கள் மெதுவாக மாற்றத்தொடங்கி இருக்கிறோம். வெகுவிரைவிலேயே யாசகர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்'' என்ற இறுதி கருத்துடன் விடைபெற்றார்.


Next Story