ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போன 114 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம்


ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போன 114 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம்
x

நிலம்பூரில் இருக்கும் தேக்கு மரத்தோட்டம் உலகின் மிக பழமையான தேக்கு மர தோட்டங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

மர வகைகளில் தேக்கு மரத்திற்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. கதவு, ஜன்னல், கட்டில், மேஜை, அலமாரி உள்பட பல்வேறு வகைகளில் மறு உருவம் பெறும் அவை மற்ற மரங்களை காட்டிலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. அதனால் அதன் விலை அதிகம். அதிலும் மிகவும் பழமையான தேக்கு மரங்களை வாங்குவதற்கு மர வியாபாரிகள் போட்டா போட்டி போடுவதுண்டு.

அப்படி நடந்த ஏலத்தில் 114 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் ஒன்று 39 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த தேக்கு மரம் கேரள மாநிலம் நிலம்பூரில் உள்ள தேக்கு தோட்டத்தில் 1909-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நடப்பட்டது.

அதனை வனத்துறையினர் நீண்ட காலமாக தனி கவனம் செலுத்தி பராமரித்து வந்தனர். எனினும் அந்த மரம் முதிர்ச்சி தன்மை அடைந்து பட்டுபோய் விட்டது. வேர்கள் வலுவிழந்து தானாகவே மரம் சாய்ந்து விழுந்துவிட்டது. அதனை நெடுங்காயம் வன கிடங்குக்கு கொண்டு வந்து ஏலம் விட முடிவு செய்தனர்.

ஆனால் மரத்தை அப்புறப்படுத்துவதே வனத்துறைக்கு சவாலான விஷயமாகிவிட்டது. சுமார் 8 கன மீட்டர் தடிமன் கொண்ட அந்த மரத்தை மூன்று துண்டுகளாக வெட்டினார்கள். அப்படி இருந்தும் ஒவ்வொரு மர துண்டும் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்டிருந்தது. ஒரு மரத்துண்டு மட்டும் 3 மீட்டருக்கும் மேல் நீளமாக இருந்ததோடு தடிமனிலும், தோற்றத்திலும் பிரமாண்டமாக மிளிர்ந்தது.

அந்த மரத்துண்டை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் அது 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மற்ற இரு மரத்துண்டுகளில் ஒன்று ரூ.11 லட்சத்துக்கும், மற்றொன்று ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தமாக அந்த தேக்கு மரம் ரூ.39 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடுமையான ஏலப் போட்டிக்கு இடையே திருவனந்தபுரத்தை சேர்ந்த டிம்பர்ஸ் உரிமையாளர் அஜீஷ்குமார் அதனை தன்வசப்படுத்தினார்.

இவர் ஏலத்தில் தொடர்ந்து பங்கேற்பவர், தரமான மரங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர் என்று நெடுங்காயம் வன அதிகாரி ஷெரீப் கூறினார். ''இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தேக்கு மரத்தில் 3 மீட்டருக்கு மேல் அளவுள்ள ஒரு துண்டு கிடைப்பது அரிதானது. அதனால் இந்த தேக்குமரம் அதிக விலைக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவிற்கு விலை போகும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார்.

வரலாறு காணாத அளவுக்கு அதிக விலைக்கு விற்பனையான இந்த அரிய தேக்கு மரத் துண்டுகள் லாரியில் ஏற்றி செல்லப்பட்டதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். நிலம்பூரில் இருக்கும் இந்த தேக்கு மரத்தோட்டம் உலகின் மிக பழமையான தேக்கு மர தோட்டங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இது மலபார் மாவட்ட முன்னாள் பிரிட்டிஷ் கலெக்டராக இருந்த கொனோலியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு தேக்கு மர அருங்காட்சியகமும் உள்ளது. அதில் உலகின் பழமையான தேக்கு மரத்துண்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story