'லிவிங் டுகெதர்' கலாசார மாற்றமா... சீரழிவா?
திருமணமாகாத மேஜர் இருவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ சட்ட அங்கீகாரம் உள்ளது என்றும், மேஜராகவே இருந்தாலும் திருமணமானவருடன், திருமணமாகாத ஒருவர் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
காதல் என்ற ஒற்றைச் சொல்லை வாழ்வில் கடக்காதவர்கள் வெகு சிலரே. பள்ளிப் பருவத்தில் அரும்பும் இனக்கவர்ச்சி தொடங்கி தங்களது இறுதிக்காலம் வரை காதலை பல்வேறு காலகட்டத்தில் கடந்தே பயணிக்கிறார்கள். காதலும் தன்னை பல்வேறு பரிணாமங்களுக்கு உட்படுத்திக் கொண்டாலும், மனித வாழ்வில் பல்வேறு மகத்துவங்களை நிகழ்த்தியே வருகிறது.
காதலின் பரிணாமம் என்பது சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. சங்க காலத்தில் அரசர்கள் கொண்ட காதலும், காந்தர்வ திருமணமும் எண்ணற்ற இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அரசர்கள் காலம் முடிந்து நமது கருப்பு, வெள்ளை திரைப்பட காலத்தில் காதல் மிகவும் புனிதமானதாக காட்டப்பட்டாலும், நிஜ வாழ்வில் அதை ஏற்றுக் கொண்டவர்களும், காதலில் வெற்றி பெற்றவர்களும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான்.
காரணம், நமது நாடு பன்முக கலாசாரம் கொண்ட நாடாக இருப்பினும், இங்குள்ள ஜாதி, மத கட்டுப்பாடுகள் ஏராளம். நமது திருமண முறையும் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. அந்தந்த ஜாதி, மதம், இனம், மொழி என எத்தனை பிரிவு இருந்தாலும் திருமண சடங்குகள் என்பது மிகவும் தனித்துவமானது.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், பல்வேறு மேற்கத்திய கலாசாரத்தாலும் வாழ்க்கை முறை எவ்வளவோ மாறி இருப்பினும், நமது சமுதாயத்தில் உள்ள திருமண சடங்குகளும், நடைமுறைகளும் இன்றும் பழமை மாறாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் நாம் காதலுக்கு எதிரி என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் அமரத்துவம் பெற்ற லைலா, மஜ்னு முதல் அம்பிகாவதி, அமராவதி வரை காதலர்கள் இங்குதான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அதைவிட உலக அதிசயங்களில் ஒன்றான காதலுக்கான அதிசயம் தாஜ்மஹாலின் அமைவிடமே நமது நாடுதான். அந்த அளவுக்கு கலை மற்றும் கலாசாரம் மட்டுமல்ல, காதலும் பொங்கி வளர்ந்தது இந்த பூமியில் தான். காதலின் மகத்துவத்தை நாம் அறிந்ததால் தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மேன்மைமிகு கலாசாரத்திற்கு சொந்தமான பூமியாக பாரத தேசம் திகழ்கிறது.
காதல் புனிதமானதுதான். ஆனால் நாம் அதை கையாளும் விதம் எப்படி என்பதுதான் அதை நிர்ணயிக்கிறது. சமீப காலங்களில் காதலும், இதைத்தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சம்பவங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளன. நவீன கால மாற்றத்தால் காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பெரிதும் மாறிப் போயுள்ளது. 90-களின் மத்தியில் காதலை வெளிப்படுத்தக் கூட தயங்கிய இளைய சமூகம் இன்று மேற்கத்திய கலாசாரமான 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' வரை வந்து விட்டது என்றால் அது நவீன மாற்றமா அல்லது கலாசார சீரழிவா? என பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு சமூக சூழல் மாறிப் போயுள்ளது.
இன்று கல்வி, வேலைவாய்ப்பிற்காக ஆண், பெண் பேதமின்றி அனைவரும் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். மேற்கத்திய நாடுகளில் நமக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கும் சூழலில், அங்கு செல்லும் நம்மிடம் அவர்களது உணவு, உடை மட்டுமல்ல, கலாசாரமும் தொற்றிக் கொள்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதில் மிக முக்கியமாக நோய் போல் தொற்றி பரவிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பழக்கம் 'லிவிங் டுகெதர்' கலாசாரம்.
மேலை நாடுகளில் மட்டும் கேள்விப்பட்ட இந்த கலாசாரம் இன்று நமது நாட்டிலும் கால் எடுத்து வைத்து இருப்பது தான் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. திருமண பந்தத்தில் இணையும் மணமக்களுக்கு நமது நாட்டில் சமூக அந்தஸ்தும், பாதுகாப்பும், சட்ட உதவிகளும் கிடைக்கிறது. திருமணப் பதிவு சட்டம் கட்டாயம் என்ற அளவுக்கு இன்றைய சட்டமும், சமூகமும் சென்று கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற `லிவிங் டுகெதர்' கலாசாரம் எந்தவிதமான தாக்கத்தை கொண்டு வரப் போகிறதோ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ''மேஜரான ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதை 'லிவிங் டுகெதர்' என்கிறோம். இந்த உறவில் இருந்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகிச் செல்லும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அவ்வாறு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எவ்வித சட்டபூர்வ உரிமையும் இல்லை'' என தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு சட்ட ரீதியில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதே வேளையில், இந்த உறவு முறையை இரண்டாகப் பிரித்து ஏற்கனவே உச்சநீதிமன்றமும் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையின் வரம்பிற்குள் 'லிவிங் டுகெதர்' வருகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணமாகாத மேஜர் இருவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ சட்ட அங்கீகாரம் உள்ளது என்றும், மேஜராகவே இருந்தாலும் திருமணமானவருடன், திருமணமாகாத ஒருவர் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சட்ட அங்கீகாரம் இருந்தாலும் `லிவிங் டுகெதர்' முறைக்கு சமூக அங்கீகாரம் கிடைக்குமா? என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.
''சமூக கட்டுப்பாடுகள் நிறைந்த நமது திருமண சடங்குகள் மூலம் தம்பதிகள் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ வைக்கப்படுகிறார்கள். ஆனால் 'லிவிங் டுகெதர்' போன்ற மேற்கத்திய கலாசார முறைகள் மூலம் எங்கள் உணர்வுகளுக்கு உரிய மதிப்பும், சுதந்திரமும் கிடைக்கிறது'' என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாதமாக உள்ளது. பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர். திருமணச் சடங்கில் இருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு இதில் இல்லாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே பெற்றோரின் கவலை. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தோல்வியில் முடிந்தாலும் அவர்களுக்கு ஜீவனாம்சம், சொத்தில் பங்கு, குழந்தைகளுக்கு சொத்துரிமை போன்ற அடிப்படை சட்டப் பாதுகாப்புகள் ஏராளமாக உள்ளது. எவ்வித சமூக அங்கீகாரமும், சட்டப் பாதுகாப்பும் இல்லாத இந்த வாழ்க்கை முறையால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் பெற்றோர்கள்.
நமது பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என பெற்றோர் கனவு காண்பது மட்டும் அல்ல, அவர்கள் எதை தேர்வு செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணித்து வழிநடத்த வேண்டும். அப்போதுதான் 'லிவிங் டுகெதர்' போன்ற மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையில் இருந்து நமது எதிர்கால சந்ததியை காப்பாற்ற முடியும் என்பதே உண்மையாகும்.
பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர். திருமணச் சடங்கில் இருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு இதில் இல்லாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே பெற்றோரின் கவலை.