பிளாஸ்டிக் கொடுத்தால், உணவு இலவசம்..!
குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள டீக்கடையில் இந்த வித்தியாசமான அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர். ‘பிளாஸ்டிக்கை கொடுத்துவிட்டு உணவை இலவசமாக பெற்றுச் செல்லுங்கள்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள டீக்கடையில் இந்த வித்தியாசமான அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர். அதாவது 'பிளாஸ்டிக்கை கொடுத்துவிட்டு உணவை இலவசமாக பெற்றுச் செல்லுங்கள்' என்ற தனித்துவமான அறிவிப்பை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
'நேச்சுரல் பிளாஸ்டிக் கபே' என்ற பெயரில் சமீபத்தில்தான் இந்த டீக்கடை திறக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த டீக்கடை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், ரசாயன கலப்பு இல்லாத பொருட்களை கொண்டு உணவு சமைக்கிறது. இந்நிலையில்தான், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு என்ற அறிவிப்பை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.
''கடந்த 8 நாட்களில் இந்த டீக்கடை 190 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துள்ளது. இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் வீசப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தப்படுவதை ஓரளவு தடுத்து நிறுத்திய திருப்தி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது'' என்கிறார்கள் இந்த டீக்கடையை நிர்வகிக்கும் பெண்கள்.
இதற்கு முன்பாக ஜுனாகத் மாவட்ட ஆட்சியர் ராசித் ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், 'பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு கொண்டுவந்து என் வீட்டில் கொடுத்தால், உணவு இலவசம்' என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆட்சியரின் அறிவிப்பை தொடர்ந்தே இந்த டீக்கடையும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.