லீலாவை மிஞ்சும் கதாபாத்திரம் எனக்குத் தேவை - காந்தாரா நாயகி சப்தமி கவுடா
‘காந்தாரா’ லீலாவைத் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரமாக ‘யுவா’ படத்தின் என்னுடைய கதாபாத்திரம் இருக்கும் என்று நம்புவதாக காந்தாரா நாயகி சப்தமி கவுடா கூறினார்.
சினிமா தயாரிப்பில் 2014-ம் ஆண்டு நுழைந்த ஹாம்பாலே பிக்சர்ஸ், இதுவரை 7 கன்னடப் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அவற்றில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய, 'கே.ஜி.எப்.1', 'கே.ஜி.எப்.2', 'காந்தாரா' ஆகிய படங்களும் அடக்கம்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது, 'சலார்' என்ற திரைப்படத்திற்காகத்தான்.
இந்தப் படத்தை 'கே.ஜி.எப்.' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். ரூ.200 கோடியில் தயாராகும் இந்தப் படத்தில் 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நாயகனாகவும், மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படம் இந்த ஆண்டு (2023) செப்டம்பர் 28-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹாம்பாலே பிக்சர்ஸ் தயாரிப்பில் 'யுவா' என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலமாக யுவகிருஷ்ணா ராஜ்குமார், நடிகராக அறிமுகம் ஆகிறார். இவர் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் ராஜ்குமாரின் 2-வது மகனும், நடிகருமான ராகவேந்திரா ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார்.
படம் தொடங்கும் போதே இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் படம் இந்த ஆண்டு (2023) டிசம்பர் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணி, சமீபத்தில் நடைபெற்றது. பல நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அந்த நாயகிகளில் 'காந்தாரா' படத்தில் நாயகியாக நடித்த சப்தமி கவுடாவும் இருந்தார்.
அவரை போட்டோ ஷூட்டுக்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்தபோது, அவர் சினிமா நடிகர்களுக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் கன்னட சினிமா அணியை உற்சாகப்படுத்துவதற்காக கிரிக்கெட் மைதானத்தில் இருந்தார். தனக்கு அழைப்பு வந்ததும், கிரிக்கெட் டீசர்ட்டுடன் போட்டோ ஷூட் நடந்த இடத்திற்குச் சென்று, அந்த டீசர்ட்டுடனேயே போட்டோ ஷூட்டிலும் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
பின்னர் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு அவர் வந்து சேர்ந்த நேரத்தில், அவர் 'யுவா' படத்தில் நடிக்க தேர்வாகி இருப்பதாக தயாரிப்பு நிர்வாகத்தில் இருந்து கூறியிருக்கிறார்கள். இதனால் சப்தமி கவுடா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
'காந்தாரா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் 'யுவா' பட வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி சப்தமி கவுடா கூறும்போது, "நான் எதிர்பார்த்ததை விட, காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தப் படத்தின் மூலமாக இந்திய அளவில் எனக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஆனால் நான் நீண்ட நாட்களுக்கு 'காந்தாரா' படத்தில் வந்த லீலாவின் கதாபாத்திரத்தையே சுமந்து கொண்டு இருக்க முடியாது.
நான் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும், என்னுள் ஒளிந்திருக்கும் பல கதாபாத்திரங்களை வெளிப்படுத்தவும் எனக்கு மேலும் பல படங்கள் தேவை. 'காந்தாரா' லீலாவைத் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரமாக 'யுவா' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
2020-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'பாப்கான் மங்கி டைகர்' என்ற படத்தின் மூலமாக சினிமாத் துறைக்குள் அறிமுகமான சப்தமி கவுடாவிற்கு, இரண்டாவது படமான 'காந்தாரா' மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் படவாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்யும் சப்தமி கவுடா, எத்தகைய உச்சத்தை தொடுவார் என்பது அவரது திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.
நான் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும், என்னுள் ஒளிந்திருக்கும் பல கதாபாத்திரங்களை வெளிப்படுத்தவும் எனக்கு மேலும் பல படங்கள் தேவை. 'காந்தாரா' லீலாவைத் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரமாக 'யுவா' படத்தின் என்னுடைய கதாபாத்திரம் இருக்கும் என்று நம்புகிறேன்