'ஸ்டார்ட்-அப்' முயற்சியில் வெற்றிபெறுவது எப்படி..?
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை உருவாக்கி, அதில் வெற்றிபெற்றிருக்கிறார் பிச்சுமணி.
எல்லோர் மனதிலும், சொந்த தொழில் தொடங்கும் 'ஸ்டார்ட் அப்' ஆசை இருக்கும். ஆனால் அதேசமயம், கொஞ்சம் பயமும் இருக்கும். ஏனெனில் மாதந்தோறும் கிடைத்துவிடும், சம்பள பணத்தை விட்டுவிட்டு சொந்த தொழிலை நம்பி அதில் இறங்கலாமா?, அதில் கிடைக்கும் லாபத்தை நம்பி வாழ்க்கையை நகர்த்த முடியுமா..? போன்ற கேள்விகளும் எழும். இதுபோன்ற பல கேள்விகள் பிச்சுமணி மனதிலும் எழுந்தன. ஆனால் அதையும் மீறி, சொந்தமாக 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை உருவாக்கி, அதில் வெற்றிபெற்றிருக்கிறார். அவரது முயற்சிக்கு தொழில் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், சமீபத்தில் நடந்த 'டைம்ஸ் பிசினஸ் அவர்ட்' நிகழ்ச்சியில், சிறந்த 'ஸ்டார்ட்-அப்' நிறுவனத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது.
சென்னையை சேர்ந்தவரான இவர், பிரபல ஐ.டி. நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக பணியாற்றிவிட்டு, பின்னர் மனித வள துறை அடிப்படையிலான 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை தொடங்கி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். 'ஸ்டார்ட்-அப்' முறையில் தைரியமாக களமிறங்கி, அதில் வெற்றி கண்டிருக்கும் இவரிடம் ஸ்டார்ட்-அப் தொடர்பான பல கேள்விகளை முன்வைக்க, பொறுப்பாக பதிலளித்தார்.
* 'ஸ்டார்ட்-அப்' முயற்சியின் வெற்றி பார்முலா என்ன?
தொழில் சிந்தனை (ஐடியா), கவனம் (போகஸ்), செயல்முறைப்படுத்துதல் (எக்ஸிகியூஷன்), முதலீடு (இன்வெஸ்ட்மெண்ட்), பொறுமை (பேஷன்ஸ்)... இவை ஐந்தும்தான் வெற்றி பார்முலா. நீங்கள் தொடங்கும் தொழில் முயற்சியின் 'ஐடியா' வித்தியாசமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு தேவை மிகுந்ததாகவும் இருக்கவேண்டும். நம்முடைய தொழில் யோசனையில் முழு கவனத்துடன் இருந்து, நினைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு சிறு முதலீடும், நிறைய பொறுமையும் அவசியம். அதேபோல, உங்களுடைய தொழில் முயற்சி சம்பந்தமாக பிறர் கூறும் (பீட் பேக்) கருத்துகளை உள்வாங்கும் மனபக்குவமும் அவசியம்.
* யாரெல்லாம் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனம் தொடங்கலாம்?
ஸ்டார்ட் அப் தொடங்க, வயது தடையில்லை. யார் வேண்டுமானாலும் 'ஸ்டார்ட்-அப்' தொடங்கலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரு கல்லூரி மாணவர்கள் தொடங்கிய 'செப்டோ' என்ற ஸ்டார்ட் அப் முயற்சி, இன்று கோடிக்கணக்கான வர்த்தகமாக மாறியிருக்கிறது. அதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், குடும்ப தலைவிகள், பணியில் இருப்பவர்கள் என யார்வேண்டுமானலும் தொடங்கலாம். ஆனால் நீங்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் சேவை, வாடிக்கையாளர்களுக்கு தேவையானதாகவும், நடப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
* 'ஸ்டார்ட் அப்' முயற்சி எந்தெந்த துறையினருக்கு ஏற்றது?
உணவு துறை, உற்பத்தி துறை, மென்பொருள் தயாரிப்பு, சேவை தொடர்பானவை... இப்படி எல்லா துறைகளிலும் 'ஸ்டார்ட்-அப்' தொடங்கலாம்.
* 'ஸ்டார்ட்-அப்' தொடங்க, பெரிய முதலீடு தேவைப்படுமே?
'ஸ்டார்ட்-அப்' என்பதே, சிறிய முதலீட்டில் தொழில் முயற்சியை முயன்று பார்ப்பதுதான். ஆனால் பெரிய முதலீட்டில் தொழில் தொடங்குபவர்களும் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், நிறைய பண்டிங் (funding) முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரவுட் பண்டிங் (crowd funding), ஏஞ்சல் பண்டிங் (angel funding), கேபிடல் வென்சர் பண்டிங் (capital venture funding)... இப்படி நிறைய முதலீட்டு உதவிகள் நடைமுறையில் உள்ளன. அதனால் உங்களது தொழில் சிந்தனை புதிதாக இருக்கும்பட்சத்தில் 10 லட்சம் தொடங்கி சில கோடிகள் வரை பண்டிங் முறையிலேயே நிதி திரட்டி, தொழில் தொடங்கலாம்.
* 'ஸ்டார்ட்-அப்' முயற்சியில், எதில் கவனமாக இருக்க வேண்டும்?
என்ன பொருள் தயாரிக்கிறோம், யாருக்காக தயாரிக்கிறோம், எவ்வளவு விலையில் கொடுக்கிறோம், என்ன லாபம் கிடைக்கும், நம்முடைய சந்தை கிராமமா, இல்லை நகரமா, நமக்கும் மற்ற போட்டியாளர்களுக்குமான வித்தியாசம் என்ன?, மார்க்கெட் தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறோமா?, பல்வேறு போட்டி களுக்கு இடையே நிலைத்து நிற்க முடியுமா..?, நம்முடைய பொருள் வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதா?... இப்படி நம்முடைய 'ஸ்டார்ட்-அப்' பற்றிய 'மார்க்கெட் பிராடெக்ட் வேலிடேஷன்' சர்வே விஷயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, தொழில் பார்முலாக்களையும் மாற்றியமைக்க வேண்டும்.
* 'ஸ்டார்ட்-அப்' முயற்சி, சம்பள பணிகளை விட லாபம் நிறைந்ததா?
ஆரம்பத்தில் லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது. அந்தசமயத்தில் சம்பள பணிகளே சிறப்பானதாக தோன்றும். ஆனால் உங்களது தொழில் சூடுபிடிக்கும்போது, எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்போது, பல மடங்கு சம்பளம் கிடைத்ததுபோல உணர்வீர்கள். அப்போது, 'ஸ்டார்ட்-அப்' மன நிறைவான முயற்சியாக தோன்றும்.
* அரசு வழியில் உதவிகள் கிடைக் குமா?
தனியார் மட்டுமின்றி அரசு வழிகளிலும் உதவிகள் உண்டு. மத்திய-மாநில கல்வி நிறுவனங்களில் `இங்குபேஷன்' மையங் கள் இயங்குகின்றன. அங்கு உங்களது சிந்தனைகளை காட்சிப் படுத்துவதன் மூலம் அரசு சார்பிலும் உதவி பெறலாம். 'ஸ்டார்ட்-அப்' தொடங்கலாம்.
* 'ஸ்டார்ட்-அப்' முயற்சிக்கு சிறந்த குழு அவசியமா?
நிச்சயமாக. நம்பக தன்மை கொண்ட குழு நிச்சயம் அவசியம். அப்போதுதான், உங்களது கனவுகளை, நினைவாக்க முடியும்.