மண்வளத்தை மீட்பது எப்படி?


மண்வளத்தை மீட்பது எப்படி?
x

மண் வளம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அங்கு மண்புழுக்கள் உயிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் 'மண்புழு மண்ணுக்கு உயிர்நாடி' என்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் உடனே புலி, யானை போன்ற பெரிய உயிரினங்களை பாதுகாப்பதுதான் என்று தவறாக நினைத்துக்கொள்ளும் நிலையே இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உயிரினங்களை தனித்தனியாக பிரித்துப்பார்க்கும் ஒரு சிந்தனை மக்களிடையே தோன்றி இருக்கிறது. ஆனால் உண்மை அப்படியில்லை. காடுகள், மண் வளம், நீர் வளம், பறவைகள், பூச்சிகள், பருவநிலை, தாவரங்கள், விலங்குகள் என அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.

உதாரணத்துக்கு புலியை எடுத்துக்கொள்வோம். அது ஒரு பெரிய மானை அடித்தால், குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு அதன் இறைச்சியை பத்திரப்படுத்தி தின்னும் வழக்கம் கொண்டது. அப்படியென்றால் ஓர் ஆண்டுக்கு 52 மான்கள் தேவைப்படும். ஒரு காட்டில் குறைந்தபட்சம் 520 மான்கள் இருந்தால்தான் புலிக்குத் தொடர்ந்து இரை கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த அளவுக்கு மான்கள் இருக்க வேண்டும் என்றால், அங்கு தாவரங்கள் செழிப்புடன் இருக்க வேண்டும். வளமான தாவரவியல் பன்மை இருக்க வேண்டுமென்றால், அங்கு மண் வளம் நன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் எல்லா வளத்தையும் தரும் மண்ணை 'தாய்மண்' என்று அழைக்கிறோம். அந்த மண் நல்ல வளத்துடன் இருக்க வேண்டும் என்றால், அங்கு மண்புழுக்கள் உயிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் 'மண்புழு மண்ணுக்கு உயிர்நாடி' என்கிறோம்.

மண்ணிலும் பல வகை உண்டு. இடத்துக்கு ஏற்றதுபோல், இதில் அடங்கி இருக்கும் விகிதாசாரம் மாறலாம். இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்கவே மண் வளம் சீரழிந்து வருகிறது. மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்துவருகிறது. இந்திய மண்ணில் 'கரிமச் சேர்மங்கள் உள்ளடக்கம்' என்பது 4 முதல் 5 சதவீதம்வரை இருந்தால் நல்லது. ஆனால், தற்போது அதன் தேசிய சராசரியே 0.5 சதவீதம்தான். இதை அதிகரிக்கச்செய்ய மண்புழு உரத்தால் முடியும். தவிர, நீர் அதிகம் தேவைப்படாத சிறுதானியங்களை விளைவிப்பதன் மூலமும் மண்வளத்தை மீட்டெடுக்கலாம், என்கிறார்கள் வேளாண்துறை வல்லுனா்கள்.


Next Story