புதுப்புது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோட்டக்கலை
மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் பெரும்பாலும் தோட்டக்கலை, அலங்கார மலர் தோட்டப் பராமரிப்பு... போன்ற படிப்புகள் மீது நாட்டம் செலுத்துவதில்லை. இயற்கையோடு ஒன்றியிருக்கும் இதில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது, என உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார், வெங்கடேசன்.
ஓசூர் காளிங்காவரம் பகுதியை சேர்ந்தவரான இவர் அலங்கார மலர்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தென்னிந்திய சீதோஷண நிலைக்கு ஏற்ற மலர் செடிகளை ஆராய்வது, அதை பல்வேறு கட்ட சீதோஷண நிலையில் வளர்ப்பது, அப்படி வளரும் செடிகளில் பூக்கும் மலர்களை ஆய்விற்கு உட்படுத்தி குறிப்பெடுப்பது, மலர் செடிகளின் தன்மைகளை ஆராய்வது என... மலர்களுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இவர், தோட்டக்கலை சம்பந்தமான படிப்புகளை பற்றியும், தனது மலர் ஆராய்ச்சி பற்றியும் விளக்குகிறார்.
''பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை, பி.எஸ்., விவசாய மேலாண்மை, பி.எஸ்சி.வனவியல், பி.எஸ்சி. பட்டுப்புழுவியல் இவற்றுடன், பி.டெக்., தோட்டக்கலை, பி.டெக்., வேளாண் பொறியியல், பி.டெக்., சுற்றுச்சூழல் என்ஜினீயரிங் இதுபோன்ற பொறியியல் படிப்புகளும் இருக்கிறது. இதன் மூலம் இயற்கை சூழ்ந்த பணியிடங்களில் வேலை பார்க்கலாம். ஒருசில படிப்புகள் மூலமாக, நீங்களே சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகளும் இருக்கிறது'' என்று விவசாய துறை மீது இளைஞர்களுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சும் வெங்கடேஷன், பள்ளிப்படிப்பிற்கு பிறகு இயற்கை சார்ந்த வேளாண்ஆராய்ச்சியிலும் படிப்பிலுமே கவனம் செலுத்தியிருக்கிறார். குறிப்பாக, அலங்கார மலர்கள் மற்றும் செடிகள் பற்றி நிறைய ஆராய்ந்திருக்கிறார்.
''தோட்டக்கலையை கொண்டாடும் படிப்புகள் இப்போது நிறைய வந்துவிட்டன. இருப்பினும் மாணவர்கள் அதுபற்றிய புரிதல் இன்றி, இருப்பது வேதனைக்குரியது. வருங்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, தாவரங்களும், இலை-செடி கொடிகளுமே மாற இருக்கிறது. அதற்கான ஆராய்ச்சிகள் புதுவேகம் எடுத்திருக்கின்றன. அப்படி ஒரு சூழல் உருவானால், தோட்டக்கலை மற்றும் விவசாய துறையினருக்கே அதீத வேலைவாய்ப்பு உருவாகும்'' என்று புதுநம்பிக்கை கொடுப்பவர், இலைகளையும், மலர்களையும் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை முயற்சித்து பார்க்கிறார். குறிப்பாக அலங்காரம் என்ற பெயரில், நுழைந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும், பிளாஸ்டிக் மலர்களுக்கும் மாற்றாக விலை மலிவான இயற்கை பொருட்களை ஆராய்ந்து வருகிறார்.
''இயற்கை மலர்கள் அலங்காரத்திற்கு இணையாக, இப்போது செயற்கை மலர்கள் அதாவது பிளாஸ்டிக் பூக்கள் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. மலர்களின் விலையேற்றம் ஒருபக்கம் இருந்தாலும், அறியாமை மிக முக்கிய காரணமாகிறது. ஆம்..! அலங்கார கலைஞர்களுக்கு இயற்கை மலர்களை எப்படி கையாள்வது என்பது தெரிவதில்லை. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, பத்திரப்படுத்தி அலங்கரிக்கின்றனர்'' என்று ஆதங்கப்படுபவர், அதை இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தெளிவு படுத்துகிறார்.
''ஆர்கிட், லில்லியம்ஸ், அந்தூரியம், ஜெர்பரா, ஒயிட் ஸ்னோ பால், டெய்சி, செர்ரிசாந்திமம், டச் ரோஸ், கார்நேஷன்... இவை அனைத்தும் நம் ஊரில் வளரக்கூடியவை.
இந்த மலர்களை எல்லா காலநிலையிலும் வளர்ப்பது எப்படி?, இந்த மலர்களை அலங்காரத்திற்கு முறையாக பயன்படுத்துவது எப்படி?, எந்தெந்த மலர்கள் எத்தனை நாட்கள் வாடாமல் இருக்கும்?, 10 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் மலர்களை எப்படி கையாள்வது?, விலை உயர்ந்த மலர்களோடு எந்தெந்த செடி-இலைகளை இணைக்க முடியும்?... இப்படி மலர் பற்றிய பல விஷயங்களை விளக்கி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்திருக்கிறேன். மேலும் பிளாஸ்டிக் பூக்களுக்கு நிகரான, 10 நாட்கள் வாடாமல் இருக்கும் மலர்களையும் நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு வளர்த்து வருகிறேன்'' என்பவர், தமிழகத்தின் பல பகுதிகளில் இயற்கை மலர்கள் குறித்த இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு மலர்கள் பற்றிய தகவல்களும், அதன் பயன்பாடுகளும் விரிவாக விளக்கப்படுகிறது.
''தோட்டக்கலை படிப்புகளின் மூலம் சுற்றுச்சூழல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை முன்னெடுக்கலாம். ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றலாம். ஏன்...? சொந்தமாக மலர் மற்றும் செடி தோட்டங்களை உருவாக்கி, மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். மேலும் இயற்கைக்கு உங்களால் முடிந்த நன்மைகளையும் செய்யலாம். மலர் ஆராய்ச்சிக்கு பிறகு, தாவரங்களின் இலைகளை பேக்கிங் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியை முன்னெடுக்க இருக்கிறேன். இதன்மூலம் மலர், செடி... வளர்ப்பிலும் கூடுதல் லாபம் பார்க்கமுடியும்'' என்பவர், கல்லூரி மாணவர்களுக்கு தோட்டக்கலை சம்பந்தமான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.