ராணுவத்தின் முதல் பெண் 'ஸ்கை டைவர்'
மஞ்சு, இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் காலடி எடுத்து வைத்துவிட்டாலும் உயர் பதவிகளையும், உயரிய அந்தஸ்தையும் அடைந்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. முக்கிய துறைகள் பலவற்றிலும் ஆண்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட துறைகளுள் ஒன்றாக விளங்கும் இந்திய ராணுவத்தில் தற்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் அங்கும் பெண்கள் முத்திரை பதிக்கும் விஷயங்கள் அரிதாகவே அரங்கேறுகின்றன. இந்த நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஸ்கை டைவிங் சாகசம் புரிந்து அசத்தி இருக்கிறார். இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.
அவரது பெயர் மஞ்சு. கிழக்கு கமாண்ட் பிரிவின் ராணுவ காவல் துறையில் பணி புரிந்து வருகிறார். அவர் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டரில் (துருவ்) 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவை கிழக்கு கமாண்ட் ராணுவ படை வெளியிட்டுள்ளது.
அதில், மஞ்சு, ஸ்கை டைவிங் சாகசக் குழுவின ருடன் ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பின்பு இரு சாகசக் குழுவினரின் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி சாகசத்தில் ஈடுபடுகிறார். ''இந்திய ராணுவத்தின் முதல் பெண் சிப்பாய் ஸ்கை டைவர் மஞ்சு, 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தார். அவரது செயல் ராணுவத்தில் பணிபுரியும் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்'' என்று ராணுவ படை சார்பில் டுவிட் பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் ஸ்கை டைவிங் பயிற்சி குழுவினரிடம் மஞ்சு பயிற்சி பெற்று, இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.