சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்: உயிரிழந்த ராணுவ அதிகாரியின் மனைவி ராணுவ பயிற்சியை நிறைவு செய்த காட்சி!
அவரது கணவர் 2019இல் ராணுவ பணியின்போது வீரமரணம் அடைந்தார். அப்போது ஹர்வீன் கவுர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
சென்னை,
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் ராணுவ பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான இறுதிநாள் அணிவகுப்பு நேற்று நடந்தது.
ராணுவ பயிற்சியை நிறைவு செய்து பட்டம் பெற்ற 186 இந்திய வீரர்களும் இறுதிநாள் அணிவகுப்பு நடத்தினர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பப்படுவார்கள்.சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நமது அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு மற்றும் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டை சேர்ந்த 36 வெளிநாட்டு வீரர்களும் ராணுவ பயிற்சியை நிறைவுசெய்தனர்.
இந்த நிலையில், பயிற்சி அகாடமியில் நேற்று பயிற்சியை நிறைவுசெய்த ஹர்வீன் கவுர் கஹ்லோன் என்ற பெண்மணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
28 வயதான ஹர்வீன் கவுர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அம்மாநிலத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்தார்.இவர் வீரமரணம் அடைந்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி ஆவார்.
அவரது கணவர் மேஜர் கஹ்லோன் 2019இல் ராணுவ பணியின்போது வீரமரணம் அடைந்தார். அவரது கணவர் உயிரிழந்தபோது ஹர்வீன் கவுர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இப்போது ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில், ஹர்வீன் கவுர் கஹ்லோன் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நேற்று பயிற்சியை நிறைவு செய்தார். 11 மாத பயிற்சியை நிறைவு செய்து ராணுவத்தில் இணைந்து தாய்நாட்டுக்காக சேவை புரிய உள்ளார்.
அப்போது, நீண்ட நாட்களுக்கு பின் தனது தாயாரை ஆசையாய் காண வந்த தனது பிஞ்சு குழந்தையை, அவர் தூக்கி கொஞ்சிய காட்சி வைரலாகி வருகிறது.
அவரை போலவே, வீரமரணம் அடைந்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி ரிக்சின் கோரோல்(32) என்பவரும் நேற்று பயிற்சியை நிறைவுசெய்தார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். மேலும், அவர் லடாக்கின் முதல் பெண் ராணுவ அதிகாரி ஆவார்.
இது குறித்து ஹர்வீன் கவுர் கூறுகையில், "இன்று நான் என்னை நினைத்து பெருமை அடைகிறேன். எனது கணவர் எங்கிருந்தாலும், என்னை நினைத்து பெருமை அடைவார் என்று எனக்கு தெரியும்.
நான் ராணுவ உடையை அணியும்போது தேசபக்தியை தவிர வேறு எதுவும் எனக்கு முன்னிலையில் இருக்காது. அதன்பின்னரே தாய்மை பொறுப்பு பற்றி எண்ணுவேன்.
அகாடமியில் என் மகனிடமிருந்து விலகி இருந்த நாட்கள் கடினமாக இருந்தது.எனது கணவர் உயிரிழந்தபோது நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தேன். ஆகவே எனது மகன் அவனது தந்தையை பார்த்ததில்லை. ஆனால் அவனது ரத்தத்தில் ராணுவ உணர்வு கலந்துள்ளது.
'எனது தந்தை உயிருடன் இருந்தால் இதுபோன்று தான் இருந்திருப்பார்' என்பதை எனது மகன் உணர்ந்துகொள்ளும் வகையில் நான் இருப்பேன்" என்று கூறினார்.
தீபாவளியன்று கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, 'இந்திய ராணுவத்தில் பெண்களின் வருகையால் நமது பலம் அதிகரிக்கப் போகிறது, சக்தி பெருகும்' என்று கூறியதை முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி ஹர்வீன் கவுர் கஹ்லோன் நிரூபித்து உள்ளார்.