வித்தியாசமான முறையில் பால்பண்ணை நடத்தும் பட்டதாரி தோழிகள்


வித்தியாசமான முறையில் பால்பண்ணை நடத்தும் பட்டதாரி தோழிகள்
x

24 வயதான ஜனனி, கேரளாவின் திருச்சூரில் உள்ள பால் பண்ணை தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படித்து வருகிறார். இவர் படிப்பை முடிக்கும் முன்பே, பால் பண்ணையைத் தொடங்கி வெற்றி பெற்று, பல இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

இவரது பால் பண்ணை குழிமன்னா பகுதியில் பரபரப்பாக இயங்குகிறது.

''வீட்டிலேயே மாடுகளை வளர்த்த அனுபவம் எனக்கு உண்டு என்பதால், பால் பண்ணை தொடங்கி தொழில் செய்யும் ஆர்வம் மேலோங்கியது. அதனால் பிளஸ்-2 படிப்பை முடித்ததும் கால்நடை பல்கலைக்கழகத்தில் பால் பண்ணை தொடர்பான டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். அதன்பிறகு, வயநாட்டில் உள்ள கால்நடை விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்தேன்.

பால் பண்ணை எப்படி இயங்கும், நிறைய மாடுகளை எப்படி பராமரிப்பது, எப்படி தீவனம் வழங்குவது, மாடுகளின் ஆரோக்கியத்தை எப்படி பேணுவது... என்பது போன்றவற்றை கல்லூரி படிப்பில்தான் தெரிந்து கொண்டேன். அதனை அடிப்படையாக கொண்டு மட்டுமே பால் பண்ணைத் தொழிலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தேன். அதற்காகத்தான் பயிற்சி முறையில், மினி பால் பண்ணையை தொடங்கினேன்'' என்கிறார். மேலும் தொடர்ந்தவர், பால் பண்ணை தொடங்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

''முதலில் 2 மாடுகளுடன் என் கனவுத்திட்டத்தை தொடங்கினேன். விவசாயத்துறை மூலம் கடன் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. அதனால் என் சொந்தப் பணத்திலேயே பால் பண்ணையை ஆரம்பித்தேன். என் குடும்பத்தாரும் ஆதரவாக இருந்தார்கள். அதன்பிறகு, மாடுகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அந்த சமயத்தில் டிப்ளமோ படிப்பையும் முடித்தேன்.

அதன் பிறகு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பால் பண்ணை குறித்து கற்பிக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன். 'பால் பண்ணையை விட்டுவிடு, இந்த தொழில் படிப்பை பாதிக்கும்' என்று பலரும் கூறினர். ஆனால் என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். தேர்விலும் தேர்ச்சி பெற்று பண்ணையையும் சிறப்பாக நடத்தினேன். தற்போது 40 பசு மாடுகள் என் பண்ணையில் இருக்கின்றன. அதில் 25, கறவை மாடுகள். ஹால்ஸ்டின் ப்ரீஷியன், ஜெர்சி மற்றும் கலப்பின மாடுகளும் இதில் அடங்கும்.

சிறு முயற்சியாக ஆரம்பித்த பால் பண்ணையில், தற்போது ஒவ்வொரு மாடும் தினமும் 15 லிட்டர் பால் கறக்கின்றன. இதில் சில மாடுகள் 30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன. சராசரியாக தினமும் 250 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறோம்'' என்றவர், கடந்த ஆண்டிற்கான சிறந்த பால் பண்ணை விவசாயிக்கான விருதை வென்றிருக்கிறார்.

இவரது முயற்சியையும், தொழில் பற்றையும் சக பால் பண்ணை உரிமையாளர்கள் மதிக்கிறார்கள். அதேசமயம் ஜனனிக்கு உதவியாகவும் இருக்கிறார்கள்.

''கல்லூரி காலத்தில், பீகாரை சேர்ந்த ரோஷினியின் அறிமுகம் கிடைத்தது. அவர், என்னுடைய பண்ணையில் உற்பத்தியாகும் பாலை, ஆன்லைனில் விற்பனை செய்ய ஆலோசனை வழங்கினார். அதோடு எளிமையான ஆண்ட்ராய்டு மென்பொருளையும் உருவாக்கி கொடுத்தார். அதை கொண்டு, அக்கம் பக்கத்து ஊர்களின் பால் தேவையை, சுலபமாக நிவர்த்தி செய்கிறேன். காலையில் கறக்கும் பால், மதியத்திற்குள் தீர்ந்து விடும். மாலையில் கிடைக்கும் பால், மிச்சமின்றி இரவிலேயே முடிந்துவிடும். அந்தளவிற்கு, அந்த மென்பொருள் பால் விற்பனையை சுலபமாக்கி விட்டது'' என்று உற்சாகமாக பேசும் ஜனனிக்கு, அவரது தோழி ரோஷினி பக்கபலமாய் இருக்கிறார். இருவரும் இணைந்தே பால் பண்ணை தொழிலை கவனிக்கிறார்கள். இது தவிர பால் பண்ணையையும், மென்பொருளையும் விரிவாக்கம் செய்ய ஆவலாய் இருக்கிறார்கள்.

''சின்ன பொண்ணுங்க, எப்படி பண்ணை நடத்தும் என நிறைய பேர் என் காதுபடவே பேசியிருக்கிறார்கள். ஆனால் பெரியவர்களைவிட, சிறப்பாகவே நாங்கள் நடத்துகிறோம். நேரத்துக்குத் தடுப்பூசி போடுவதோடு, மாடுகள் மீது காப்பீடு செய்துள்ளோம். பண்ணையிலேயே மாட்டுச் சாணத்தை பதப்படுத்தும் பிரிவை ஏற்படுத்தி இருக்கிறோம். கழிவுகளைப் பயன் படுத்தி இயற்கை எரிவாயு தயாரித்து வருகிறோம். மாட்டுச் சாணத்தை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்து கிறோம். கழிவு மேலாண்மை முறையை சிறப்பாக செயல்படுத்துவதால் எங்களது பண்ணைக்கு அரசின் உரிமமும் கிடைத்திருக்கிறது.

பால் பண்ணையைத் தவிர, வாழை, பூசணி, பச்சை மிளகாய் போன்றவற்றையும் பயிரிட்டுள்ளோம். பால் பண்ணைக்கழிவுகளை விவசாயத்துக்கு உரமாகவும், விவசாய கழிவுகளை, பால் பண்ணை தொழிலுக்கும் பயன்படுத்துகிறோம். மாடுகளையும், செடிகளையும் காவல் காக்க, 4 நாய்களை வளர்க்கிறோம்'' என்று பேசி முடிக்கும் ரோஷினியிடம், பால் பண்ணை தொழிலில் லாபம் கிடைக்கிறதா..? என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கும் பொறுப்பாக பதிலளித்தார்.

''பால் பண்ணை தொழிலில் கடந்த 4 ஆண்டுகளில் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளோம். எல்லா செலவும் போக, தினமும் ரூ.4 ஆயிரம் சேமிக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது'' என்று உற்சாகமாக விடை கொடுத்தார்.


Next Story