விஷமாகி வரும் நிலத்தடி நீர்..! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்


விஷமாகி வரும் நிலத்தடி நீர்..! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்
x

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், நிலத்தடி நீரில் நச்சு உலோகங்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், நிலத்தடி நீரில் நச்சு உலோகங்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆவணத்தின்படி, நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நிலத்தடியிலிருந்து தண்ணீரைப் பெறுகின்றனர்.

நாட்டில் நீரின் தரம் மோசமடைந்து வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பது மட்டுமின்றி, அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும், நிலத்தடி நீரில் அதிகப்படியான நச்சு உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

தண்ணீர் மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது, எனவே மக்களுக்கு குடிநீர் வழங்குவது மாநிலங்களின் பொறுப்பு என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீரில் உள்ள அபாயகரமான உலோகங்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், தண்ணீர் 'விஷமாக' மாறுகிறது என்று அர்த்தம்.

நகரங்களை விட கிராமங்களில் இந்த பிரச்சனை தீவிரமானது. இங்கு குடிநீரின் முக்கிய ஆதாரங்கள் கை பம்புகள், கிணறுகள், ஆறுகள் அல்லது குளங்கள். இங்கு நிலத்தில் இருந்து நேரடியாக தண்ணீர் வருகிறது.

இது தவிர கிராமங்களில் இந்த தண்ணீரை சுத்தப்படுத்துவது வழக்கமாக நடைபெறுவதில்லை. இதனால், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விஷ நீரைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரம்:

மாநிலங்களவையில், குடிநீர் ஆதாரங்கள் மாசுபட்ட குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கையையும் அரசு அளித்துள்ளது.

இதன்படி, 671 பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் புளோரைடாலும், 814 பகுதிகள் ஆர்சனிக், 14,079 பகுதிகள் இரும்பு, 9,930 பகுதிகள் உப்புத்தன்மை, 517 பகுதிகள் நைட்ரேட் மற்றும் 111 பகுதிகள் கன உலோகங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

25 மாநிலங்களில் உள்ள 209 மாவட்டங்களில் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் உள்ள ஆர்சனிக் அளவு லிட்டருக்கு 0.01 மி.கி.க்கும் அதிகமாக உள்ளது.

29 மாநிலங்களில் உள்ள 491 மாவட்டங்களில் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் இரும்புச்சத்து லிட்டருக்கு 1 மி.கி.க்கும் அதிகமாக உள்ளது.11 மாநிலங்களில் உள்ள 29 மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் உள்ள காட்மியத்தின் அளவு லிட்டருக்கு 0.003 மி.கி.க்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

16 மாநிலங்களின் 62 மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் குரோமியத்தின் அளவு லிட்டருக்கு 0.05 மி.கி.க்கும் அதிகமாக உள்ளது.18 மாநிலங்களில் உள்ள 152 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஒரு லிட்டருக்கு 0.03 மி.கிக்கு மேல் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உடல்பாதிப்பு:

நிலத்தடி நீரில் உள்ள ஆர்சனிக், இரும்பு, ஈயம், காட்மியம், குரோமியம் மற்றும் யுரேனியம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது நமது ஆரோக்கியத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது.

குடிநீரில் அதிக அளவு யுரேனியம் இருப்பதால் சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது.

அதிகப்படியான ஆர்சனிக் தோல் நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.அதிகப்படியான இரும்பு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு மண்டலம் தொடர்பான நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

தண்ணீரில் அதிக அளவு ஈயம் நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.அதிக அளவு காட்மியம் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.அதிக அளவு குரோமியம் சிறுகுடலில் பரவக்கூடிய ஹைப்பர் பிளாசியாவை ஏற்படுத்தும், இது கட்டிகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

மத்திய அரசால் ஜல் ஜீவன் மிஷன் ஆகஸ்ட் 2019 இல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதுவரை, நாட்டில் உள்ள 19.15 கோடி கிராமப்புற குடும்பங்களில், 9.81 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்படுகிறது.

அம்ருத் 2.0 திட்டம் 2021 அக்டோபரில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2026க்குள் அனைத்து நகரங்களுக்கும் குழாய் நீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story