கோண்டு ஓவியங்கள்


கோண்டு ஓவியங்கள்
x

இந்தியாவின் மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட பழங்குடி இனம் கோண்டு. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் கோண்டி என்னும் மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

தொன்மையான இந்தப் பழங்குடி மக்கள் வளர்த்த கோண்டு ஓவியக் கலை பிரசித்தி பெற்றது. இவர்கள் வட இந்தியாவில் கிழக்கு மராட்டியம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். கோண்டு மக்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தப் பகுதி கோண்ட்வானா நாடு என முன்பு அழைக்கப்பட்டது. இந்தப் பகுதி முகலாய அரசுகளின் படையெடுப்பால் சிதறுண்டு போனது. மராட்டிய மன்னர்கள், முகலாய மன்னர்களின் வீழ்ச்சிக்கு பிறகு கோண்டு மன்னர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்கள். பிறகு மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியின் படையெடுப்பு அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

இந்த பழங்குடி மக்களிடம் அருமையாக ஓவியம் வரையும் திறமை இருக்கிறது. இதனை கோண்டு ஓவியம் என்கிறார்கள். கோண்டு ஓவியம் நூற்றாண்டு பழமையானது. கோண்டு இனம் கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்தபோது பாறைகளில் ஓவியங்கள் வரைந்ததன் தொடர்ச்சிதான் இந்த கோண்டு சுவர் ஓவியங்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இந்த ஓவியங்களில் தங்கள் பகுதிகளின் மலர்கள், மரங்கள், விலங்குகள், பெண் தெய்வங்களின் உருவங்களை வரைகிறார்கள். கோண்டு பழங்குடியினர் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்கின்போதும் திருமணம் போன்ற நிகழ்வின்போதும் வீட்டுச் சுவர்களை ஓவியங்களால் அலங்கரிக்கிறார்கள். ஓவியத்துக்கான வண்ணங்களை கரி, மண், தாவரங்கள், மாட்டுச்சாணம் போன்றவற்றில் இருந்து எடுக்கிறார்கள். ஓவியங்கள், தெய்வ, இயற்கை வழிபாட்டுக்காக வரையப்படுபவை என சொல்லப்படுகிறது. தீய சக்திகளிடமிருந்து ஓவியங்கள் தங்களைக் காக்கும் என்னும் நம்பிகையும் இவர்களுக்கு உண்டு.

இன்றைக்குள்ள கோண்டு ஓவியங்கள் அபராமான கற்பனை சக்தியுடன் வரையப்படுகிறது. மரத்தில் மீன்கள் காய்ப்பது போல, உலக முழுமைக்குமான ஒரு தாயாக ஒரு மானை சித்திரிப்பதுபோலப் பல விதங்களில் வரையப்படுகின்றன. இன்றைக்கு இந்த ஓவியங்கள் கோண்டு பகுதியையும் தாண்டி இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. நவீன கட்டுமானக் கலையில் உள் அலங்காரமாகவும் பயன்படுகிறது. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் எனப் பலமுறை படையெடுப்புக்கு உள்ளாகிய இந்தப் பகுதி மக்கள் வறுமையில் வாடியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் வரி செலுத்த முடியாமல் பட்டபாட்டை நாட்டுப்புறப் பாடலாக இன்றும் பாடி வருகின்றனர். இவ்வளவு நெருக்கடிக்கு பிறகு கோண்டு ஓவியக்கலை மங்காமல் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.


Next Story