தவளை ஆராய்ச்சியாளர்


தவளை ஆராய்ச்சியாளர்
x

தவளைகளை அதிகம் தேடி, ஆராய்வதுடன் அதன் புது வகைகளை கண்டறிந்து அடையாளப்படுத்துவார். இதனால் ‘உலகின் தவளை மனிதர்’ என இவரை அழைக்கிறார்கள்.

''செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்று அவசரக் குடுக்கைகளாக நாம் ஆராயத் தொடங்கிவிட்டோம். இன்னும் நம் ஊரிலேயே மலையடிவாரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் உலகம் கண்டறியாத பல அதிசய உயிரினங்கள் உள்ளன...!'' என்கிறார் பேராசிரியர் எஸ்.டி.பிஜூ.

கேரளாவில் பிறந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர், உலகின் தலைசிறந்த உயிரியலாளர்களில் ஒருவர். நிறைய உயிரினங்களை ஆராய்ந்திருக்கிறார். பல காடு மலைகள் அலைந்து, புதுப்புது உயிரினங்களை உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார். குறிப்பாக, தவளைகளை அதிகம் தேடி, ஆராய்வதுடன் அதன் புது வகைகளை கண்டறிந்து அடையாளப்படுத்துவார். இதனால் 'உலகின் தவளை மனிதர்' என இவரை அழைக்கிறார்கள். இவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரத்தவளை, அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறதென்றால் பாருங்களேன்...! தான் கண்டுபிடித்த சில முக்கிய உயிரினங்கள், மற்றும் அவற்றின் தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

''பன்றி மூக்கு தவளை, மினிமஸ், நிக்டிபட்ராசஸ் பூச்சா, சிக்கிலிடே ஆகிய நான்கு தவளை இனங்களை, உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதில் பன்றி மூக்கு தவளை, மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக்காட்டை ஒட்டிய பகுதியில் 2003-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆமை போன்ற அகலமான வடிவத்தில் காணப்படும். சிறிய தவளைகள் கருப்பும். சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தாலும், வளர்ந்த பின் அவை சிவந்த ஊதா நிறத்தைப் பெறும். இவை பெரும்பாலும் மண்ணுக்குள்ளேயே வாழும். மண்ணுக்குள் வாழும் பிற தவளை இனங்கள் இரை தேடுவதற்காக வெளியே வரும். ஆனால், இந்தத் தவளைகள் மண்ணுக்குள் இருக்கும் புழுக்கள் மற்றும் கரையான் போன்ற பூச்சிகளை உணவாக்கிக் கொள்வதால், இனப்பெருக்கத்துக்காக மட்டுமே வெளியே வரும். அந்த வகையில் வருடத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே இதனை மண்ணுக்கு வெளியே பார்க்க முடியும்.

கோழி கொக்கரிப்பது போன்ற ஒரு ஒலியை இது எழுப்பும். இந்த குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் ஆப்பிரிக்காவிலும், மடகாஸ்கர் தீவிலும் காணப்படுவதால் ஒரு காலத்தில் இந்தியாவும், ஆப்பிரிக்கக் கண்டமும் ஒன்றாக இணைந்திருந்தது என்ற கருத்துக்கு இது வலுசேர்க்கிறது.

அடுத்ததாக 'மினிமஸ்' என அழைக்கப்படும் இரவில் மட்டுமே வெளிப்படும் தவளையை மேற்குத்தொடர்ச்சி மலையின் வயநாடு பகுதியில் கண்டறிந்தேன். பெயருக்கு ஏற்றபடியே சிறிய அளவில் இருக்கும் இந்தத் தவளைதான் இந்தியாவின் மிகச் சிறிய தவளை. இது அதிகபட்சம் 1 செ.மீ. அளவு மட்டுமே வளரும்.

பூனை போல் சத்தம் எழுப்பக் கூடிய, நிக்டிபட்ராசஸ் பூச்சா என்ற தவளை கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைதான் வாழிடம். மலையாளத்தில் பூச்சா என்றால் பூனை. எனவேதான் இது இந்தப் பெயர் பெற்றிருக்கிறது. 4 செ.மீ. அளவு வரை வளரக் கூடிய இதுவும், இரவுத் தவளைதான். ஆணும், பெண்ணும் தொட்டுக் கொள்ளாமலேயே இனப்பெருக்கம் செய்யக் கூடிய திறன் இவற்றுக்கு உண்டு. இவை உயிரணுக்களை பரிமாறிக் கொள்கின்றன.

சிக்கிலிடே தவளை, கண்ணும் காலும் இல்லாமல், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். பார்க்க மண்புழு போல் இருந்தாலும் இது புழுவும் அல்லாத பாம்பும் அல்லாத... ஒரு புத்தம் புது வகை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சிக்கிலிடே, 4 சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது. கண்கள் இல்லை என்றாலும் நிலத்தில் ஏற்படும் சின்ன அதிர்வுகளைக் கூட உணர்ந்து சட்டென்று இவை மண்ணுக்குள் பதுங்கிக் கொள்கின்றன. மண்ணை விரைவாகத் துளைக்கக் கூடிய உறுதியான மண்டை ஓடு இவற்றுக்கு உண்டு'' என்றவர், இப்போதும் இதுபோன்ற புதுமைகளை தேடி இந்திய காடு-மலைகளில் வலம் வருகிறார். அதுவே அவருக்கு ரொம்பவும் பிடித்தமான வேலையாம்...!


Next Story