ஆங்கிலேயரை தூக்கிலிட்ட எத்தலப்பர்
ஆங்கிலேயருக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிய இந்தியர்கள் பலரும் தூக்கிலிடப்பட்ட காலம் அது. அப்போது ஒரு ஆங்கிலேயனைத் தூக்கிலிட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றவர் மாவீரன் எத்தலப்பர்.
கி.பி. 1800-களில் தென் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்ட பழநி, விருப்பாச்சி, ஆயக்குடி, இடையகோட்டை, ஊத்துக்குளி, தளி ஆகிய 6 பகுதிகளில் பாளையக்காரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் தளி முதல் தளிஞ்சி வரையிலான பகுதிகளை ஆட்சி செய்த, தென் கொங்கு பாளையங்களின் தலைமை பாளையக்காரர் எத்தலப்பர்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர், அமராவதி வனப்பகுதியில் பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து தற்கொலைப் படையை உருவாக்கியவர். பாஞ்சாலங்குறிச்சி போரில் ஊமைத்துரை சிறைபிடிக்கப்பட்டபோது அவரை மீட்டதில் எத்தலப்பரின் பங்கு பெருமளவு உண்டு. கி.பி. 1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட செய்தி எத்தலப்பருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
விஜயநகர பேரரசு காலத்தில் மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பிறகு, ஆங்கிலேயர்கள் அனைத்துப் பகுதிகளையும் தங்களுடைய ஆதிக்கத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் பாளையங்களுக்கு தூதர்களை அனுப்பினர். அவ்வாறு திருப்பூர் மாவட்டம் தளி பகுதிக்கு அனுப்பப்பட்ட தூதுவர் ஆண்ட்ரு கேதீஸ். தளி பாளையத்தை உளவு பார்த்ததாலும், ஆங்கிலேயருக்கு சவால் விடும் நோக்கத்திலும் இந்த ஆங்கிலேயரை, எத்தலப்பர் உடுமலையை அடுத்த தினைக்குளம் என்ற பகுதியில் தூக்கிலிட்டார். தற்போது அந்த இடம் 'தூக்கு மரத் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள வெள்ளையனின் சமாதியில் இது தொடர்பான வாசகம் தமிழில் இடம்பெற்றுள்ளது.
கட்டபொம்மனின் மறைவுக்கு பிறகு, 2-ம் பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிடுவதற்கு எத்தலப்பர் தனது படைகளை அனுப்பி உதவினார். ஆனால் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஒரே நாளில் தளி கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. எத்தலப்பர் கொல்லப்பட்டதுடன் அவரது அரண்மனையும் சூறையாடப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த எத்தலப்பரின் புகழை பறைசாற்றும் கல்வெட்டுகள் திருமூர்த்திமலையில் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. இருப்பினும் எத்தலப்பருக்கு ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் உடுமலையில் மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது மகிழ்ச்சிக்குரியது.