பழமை மாறாமல் உயர்ந்து நிற்கும் 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்'


பழமை மாறாமல் உயர்ந்து நிற்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம்
x

நியூயார்க் மாகாணத்துக்கு ‘எம்பயர் ஸ்டேட்’ என்ற புனைப்பெயர் உண்டு. மிக பழமையான கட்டிடம் என்று தேடினால், அது அமெரிக்காவின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தையே அடையாளப்படுத்தும்.

இன்று பல நாடுகளில், மிக உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் மிக பழமையான கட்டிடம் என்று தேடினால், அது அமெரிக்காவின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டிடத்தையே அடையாளப்படுத்தும். ஆம்..., அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பழமை மாறாமல் மிக உயரமாக நிற்கிறது 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்' (Empire State Building).

கட்டமைப்பு

நியூயார்க் மாகாணத்துக்கு 'எம்பயர் ஸ்டேட்' என்ற புனைப்பெயர் உண்டு. அதையே இக்கட்டிடத்துக்கு சூட்டினர். இந்தக் கட்டிடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் கார் கம்பெனி உரிமையாளர் ஜான் ரெஸ்காப் என்பவர் தன்னுடைய பணக்கார நண்பர்கள் உதவியுடன் கட்ட முடிவு செய்தார். அந்தக் கட்டிடம் கட்டும் முன் அங்கே அஸ்டோரியா என்றொரு ஓட்டல் இருந்தது. அந்த ஓட்டலை விலைக்கு வாங்கி அதை இடித்துத் தள்ளிவிட்டு ஜான் ரெஸ்காப் தனது பிரமாண்ட கனவைக் கட்டத் துவங்கினார்.

இந்தக் கட்டிடத்திற்கு 57 ஆயிரம் டன் இரும்புக்கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. 73 லிப்ட்டுகளுடன் 102 மாடிகள் கட்டப்பட்டன. இதன் உயரம் 390 மீட்டர். பரப்பளவு 27 லட்சத்து 68 ஆயிரத்து 591 சதுர அடி. இதில் 1872 படிகள் உள்ளன. கட்டுமானப்பணியில் 3,400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதைக் கட்டிய என்ஜீனியர் பெயர் ஆலன் லேம்ப்.

1930-ம் ஆண்டு கட்டத் தொடங்கிய இந்தக் கட்டிடம் 1931-ம் வருடம் ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதே வருடம் மே 1-ம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி ஹெப்பர்ட் ஹீவரால் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.

பலரிடம் கைமாறியது

கட்டிடத்தைக் கட்டி முடித்தபோது அமெரிக்காவை மாபெரும் பொருளாதார மந்தநிலை தாக்கியது. ஜான் ரெஸ்காப், எதிர்பார்த்த அளவுக்கு அப்போது கடைகள், அலுவலகங்களிலிருந்து வாடகை கிடைக்காததால் அந்தக் கட்டிடத்தை விற்றுவிட முடிவு செய்தார். 34 மில்லியன் டாலருக்கு 1951-ம் வருடம் ரோஜர் ஸ்டீவன்சன் என்பவர் தலைமையில் இயங்கிய ஒரு குழுவிற்கு விற்றுவிட்டார். அவர்கள் வாங்கியவுடன், அப்போது பிரபலமாக இருந்த ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி அவர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.

1954-ம் வருடம் சிகாகோ நகரின் மிகப்பெரிய தொழில் அதிபர்கள் கிரவுன் என்பவர் தலைமையில் இக்கட்டிடத்தை 51 மில்லியன் டாலருக்கு வாங்கினர். ஆனால் 1961-ம் ஆண்டு மீண்டும் இக்கட்டிடம் விலை பேசப்பட்டு, 65 மில்லியன் டாலருக்கு லாரன்ஸ் என்பவர் தனது சகாக்களோடு வாங்கினார். இத்தனை பேரிடம் இக்கட்டிடம் கை மாறினாலும் மிகப் பெரிய கட்டிடம் என்னும் சிறப்பை இன்னும் பெற்றிருப்பது இதன் சிறப்பு.

அந்தஸ்து

இக்கட்டிடத்தின் 103-வது மாடியில் உள்ள பால்கனி பிரபலங்களின் பார்வைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும். நீண்ட காலமாக அமெரிக்காவின் உயரமான கட்டிடமாகத் திகழ்ந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பல பிரமாண்டமான கட்டிடங்களின் வருகையால் தற்போது அமெரிக்காவின் உயரமான கட்டிடங்களின் வரிசையில் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.

1973-ம் வருடம் உலக வர்த்தக மையக் கட்டிடம் மன்ஹாட்டனில் திறக்கப்பட்டது. உலகில் மிகவும் உயரமான கட்டிடம் என்னும் பெயரை 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்'கிடமிருந்து அது பறித்துக்கொண்டதுதான் அதன் சிறப்பு. என்றாலும் 1986-ம் ஆண்டு அமெரிக்கா இக்கட்டிடத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடமாக அறிவித்தது. இதுதான் எம்பயர் ஸ்டேட் பில்டிங்குக்குக் கிடைத்த பெரிய அந்தஸ்து.

மின்னும் விளக்குகள்

இந்தக் கட்டிடத்தின் முக்கியச் சிறப்புக்குக் காரணமே அதன் வெளித் தோற்றத்தில் பொருத்தப்பட்ட ஒளிரும் மின்சார விளக்குகள்தான். இன்னும் வியப்பு தரக்கூடிய விஷயம் அது. இந்தக் கட்டிடத்தின் 86-வது தளம் வரை சுமார் 1576 படிகள் உள்ளன. கீழிருந்து இந்த 86-வது மாடி வரை படிகளை வேகமாகக் கடக்கும் ஓட்டப் பந்தயம் ஒன்று ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தப் படிகளை 9 நிமிடம் 33 நொடிகளில் கடந்தவர் ஆஸ்திரேலியாவின் பால் கிரேசன் என்னும் ஓட்டப்பந்தய வீரர். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவேயில்லை. 1945-ம் ஆண்டு ஜூலை 28-ந் தேதி குண்டுவீசும் விமானம் ஒன்று இக்கட்டிடத்தில் மோதியதால் 14 பேர் உயிரிழந்துள்ளார்களாம்.

ஆங்கிலப் படங்கள்

இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை மையமாக வைத்துப் பல ஆங்கிலப் படங்கள் உருவாகியுள்ளன. 1970-ம் ஆண்டு வரை உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகக் கருதப்பட்டது. இப்போது இந்தக் கட்டிடத்தைவிடப் பல உயரமான கட்டிடங்கள் வந்துவிட்டன. அதனால் உலகின் 54-வது உயரமான கட்டிடமாக இப்போது இருக்கிறது. இன்றைக்கு உலகின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படுவது துபாயில் உள்ள புர்ஜ் கலீபா எனும் கட்டிடம்தான். அதன் உயரம் 2,722 அடி. இக்கட்டிடம் 2010-ம் ஆண்டுதான் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இதில் 925 குடியிருப்புப் பகுதிகள், 9 பெரிய உணவு விடுதிகள், ஏறக்குறைய 550 மீட்டர் வரை செல்லும் லிப்ட்கள், உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் உள்ள நீச்சல் குளம் என பல சிறப்புகள் இதற்கு உண்டு. இக்கட்டிடத்தில் சுமார் 24 ஆயிரம் ஜன்னல்கள் உள்ளன.

இந்த கட்டிடத்தின் 102-வது மாடியில், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் 'டெலஸ்கோப்' வழியாக நியூயார்க் நகரின் அழகை ரசிக்கலாம்.

கீழிருந்து இந்த 86-வது மாடி வரை படிகளை வேகமாகக் கடக்கும் ஓட்டப் பந்தயம் ஒன்று ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தப் படிகளை 9 நிமிடம் 33 நொடிகளில் கடந்தவர் ஆஸ்திரேலியாவின் பால் கிரேசன் என்னும் ஓட்டப்பந்தய வீரர். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவேயில்லை.


Next Story