செல்போன் பார்த்து பார்வை இழந்த பெண் -டாக்டரின் 'வைரல்' பதிவு


செல்போன் பார்த்து பார்வை இழந்த பெண் -டாக்டரின் வைரல் பதிவு
x

ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுதிர் குமார், ‘அதிக நேரம் செல்போன் பார்த்ததால் ஒரு பெண் பார்வையை இழந்தது’ குறித்து டுவிட்டரில் பகிர்ந்திருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

30 வயதாகும் அந்த பெண்ணின் பெயர் மஞ்சு. ஐதராபாத்தை சேர்ந்தவர். சுமார் 18 மாதங்களாக அவரிடம் பார்வை குறைபாட்டுக்கான அறிகுறிகள் தெரிந்தன. அவர் இரவில் தூங்குவதற்கு விளக்கை அணைத்த பிறகு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் பார்க்கும் வழக்கத்தை பின்பற்றி இருக்கிறார்.

பகலிலும் அதிக நேரம் செல்போனில் பொழுதை போக்கி இருக்கிறார். இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து கழிப்பறைக்கு செல்லும்போது சில வினாடிகள் எதையும் பார்க்க முடியாமல் கண்களில் இருள் சூழ்ந்து தடுமாறி இருக்கிறார். இதே நிலை பல இரவுகள் நீடித்திருக்கிறது. இரவில் திடீரென்று சில விநாடிகள் பார்வையை இழந்ததால் பதறிப்போய் மருத்துவரை நாடி இருக்கிறார்.

மருத்துவர் பரிசோதித்தபோது அவருக்கு, ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்னும் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இது கணினிகள், ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகள் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பாகும். கண்களின் பார்வையை முடக்கிவிடும் சக்தி இதற்கு உண்டு. கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்,டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஒரு மாத பரிசோதனைக்கு பிறகு இரவில் சில விநாடிகள் பார்வை இழப்பு ஏற்படுவது முற்றிலும் நீங்கி விட்டது. 18 மாதங்கள் மஞ்சு இந்த நோய் அறிகுறியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இப்போது நலமாக இருக்கிறார் என்று டாக்டர் சுதிர் குமார் குறிப்பிட்டுள்ளார்.


Next Story