லிப்ட் குலுங்கினால் அலட்சியம் வேண்டாம்...!


லிப்ட் குலுங்கினால் அலட்சியம் வேண்டாம்...!
x

லிப்ட் இயங்க தொடங்கும்போது வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. லிப்டின் தாங்கும் திறனுக்கு மேல் பளுவை ஏற்றக்கூடாது. இதன் காரணமாக லிப்டின் திறன் பாதிக்கப்படும். ஒவ்வொரு லிப்டிலும் அதில் எவ்வளவு எடை ஏற்றலாம் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த உச்ச வரம்பை பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக அதிகமான அளவில் கனரக பொருட்களை லிப்ட்க்குள் கொண்டுசெல்ல நினைப்பார்கள். இதன் காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.

லிப்ட் இயங்க தொடங்கும்போது வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த லிப்டை உடனடியாக பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். இதுபோன்ற சமயங்களில் லிப்டை தொடர்ந்து இயக்குவது ஆபத்தில் முடியும். லிப்டிற்கு தானியங்கி கதவுகள், கைகளால் திறந்து மூடும் கதவுகள், டிரான்ஸ்பரன்ட் என பல வகையிலும் கதவுகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட கதவுகளாக இருந்தாலும் லிப்டின் கதவுகள் சரியாக மூடாவிட்டால் அதைக்கவனிக்க வேண்டியது அவசியம். கதவுகள் சரியாக மூடாத லிப்டில் செல்வது ஆபத்தானது.

லிப்டின் உள்ளே எச்சரிக்கை மணி, இண்டர்காம் தொலைபேசி போன்றவை சரியாக வேலை செய்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் லிப்ட் பாதியில் நிற்கும்போது இப்படிப்பட்ட சாதனங்களின் துணையோடுதான் நாம் வெளியில் இருப்பவர்களை தொடர்புகொள்ள முடியும்.

மின்தடை ஏற்படும் நேரத்தில் 'இந்த நேரத்தில் லிப்ட் இயங்காது' என்னும் அறிவிப்பை தெளிவாக தெரிவிக்க வேண்டும். லிப்டுகளுக்கு தனி ஜெனரேட்டர் வசதியை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படுத்த வேண்டும். மின்சாரம் நின்றுபோனால் லிப்டின் ஜெனரேட்டர் தானாகவே இயங்கும் ஏற்பாடும் இருக்க வேண்டும்.

லிப்ட் சரியாக இயங்குவதற்கு எந்திரத்தில் எண்ணெயின் அளவு, ஹைட்ராலிக் பம்புகள், கேபிள் இணைப்புகள், பளுவைத் தாங்கும் தாங்கிகள் போன்றவற்றை தகுந்த இடைவெளிகளில் பராமரிக்க வேண்டும்.

சில நேரங்களில் நீங்கள் செல்ல வேண்டிய மாடியில் சரியாக லிப்ட் நிற்காமல், தரை மட்டத்தைவிடச் சற்று உயர்வாகவோ குறைவாகவோ நின்றுவிடும். லிப்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்படலாம். இந்த மாதிரியான சமயங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் அல்லது லிப்ட் பராமரிப்பு நிறுவனத்திலிருந்து தகுந்த ஆட்களின் உதவி கிடைக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். லிப்டின் அடிப்பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பிரிங் குஷன் ஷாக் அப்ஸர்வர்களை தகுந்த கால இடைவெளிகளில் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். குழந்தைகள் தனியாக லிப்டை இயக்க அனுமதிக்கக்கூடாது.


Next Story