கால்களால் சுவையை உணரும் வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணத்துப்பூச்சி தன் கால்களால் ருசியை உணர்கிறது. மலரிலிருந்து தேனை எடுத்துத்தான் பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் உண்கின்றன.
வண்ணத்துப்பூச்சிகள் பூச்சி வகையை சேர்ந்தவை. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை நான்கு பருவங்களை கொண்டது. முட்டைப்பருவம், இளம்புழு பருவம், கூட்டுப்புழு பருவம், வண்ணத்துப்பூச்சி பருவம். பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் தன் முட்டைகளை, உடலில் இருந்து வெளிவரும் பசையால் செடிகளில் ஒட்டச் செய்யும். புழுவாக இருக்கும்போதே தாவரங்களைச் சாப்பிடும்.
முழுமையாக வளர்ந்த புழு, தனது மேல் தோலை உரிக்கும் முன்பு மரக்கிளை அல்லது இலையில் ஒட்டி வாழும். மேல் தோல் உரிந்த நிலையில் அதற்குப்பெயர் 'பொற்புழு'.
பொற்புழு நிலையிலிருந்தே வண்ணத்துப்பூச்சி உருவாகும். வண்ணத்துப்பூச்சி தனது சிறகை முதல் தடவை விரிப்பதற்கு சில மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும். உடலுக்குள் ரத்தம் பாய்வதற்கும், இறக்கை உலர்வதற்கும்தான் அந்த அவகாசம்.
வண்ணத்துப்பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. பொதுவாக வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் வெளிர் நிறத்தில் இருக்கும். சிறு சிறு வடிவமைப்புகளில் வண்ணம் மாறுபடும். மலரிலிருந்து தேனை எடுத்துத்தான் பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் உண்கின்றன. வண்ணத்துப்பூச்சி தன் கால்களால் ருசியை உணர்கிறது. உலகில் இதுவரை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 'மொனார்க்' எனப்படும் வண்ணத்துப்பூச்சி இனங்கள், நீண்ட தூரம் பறந்து இடம் பெயரக்கூடியவை. 4 ஆயிரம் கிலோமீட்டர் வரைகூடச் செல்லும்.