பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசு
மற்ற எந்த விழாக்களுக்கும் இல்லாத சிறப்பு தீபாவளிக்கு உண்டு. அதுதான் பட்டாசு. மகிழ்ச்சிக்கு அணைபோட்ட மனக்கவலை சுவருக்கு, வெடி வைத்து தகர்க்கும் தீபாவளி திருநாள். பட்டாசு செலவு பற்றி துளியும் கவலை இன்றி கொளுத்தும் குழந்தையின் மகிழ்ச்சி பெரியவர்களையும் தொற்றிக்கொள்ளும். பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசை பாதுகாப்பாக கொளுத்தும் வழி முறைகளை பற்றி பார்ப்போம்.
தீபாவளி கொண்டாட உணவு சமைக்க வேண்டும்; வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க வேண்டும்; இதற்கிடையில் குழந்தைகள் பட்டாசு வெடிப்பதையும் கவனிக்கவேண்டும்.பெற்றோர்களுக்கு இது மிகவும் சிக்கலான காரியம் தான். அனைத்தையும் விட குழந்தைகள் பாதுகாப்பு தான் முதன்மையானது. எனவே வீட்டில் உள்ள பெரியவர்களில் ஒருவர் குழந்தைகளை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் தான் அனைத்து பட்டாசுகளும் இருக்கவேண்டும். குழந்தைகள் வெடிக்க விரும்பும் பட்டாசை அவரிடம் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டில் உள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ள இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது. தெருவில் வெடிக்க நேர்ந்தால் ஆள் நடமாட்டம் இல்லாத போது பட்டாசு வெடியுங்கள். பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு வாளி தண்ணீர் அல்லது மணல் மற்றும் ஈரமான சாக்கு துணி இருக்கவேண்டும். காரணம் கம்பி மத்தாப்பு கொளுத்தி முடித்ததும் கம்பியில் சூடு மிகுதியாக இருக்கும். குழந்தைகளுக்கு தெரியாது அவர்கள் அதை எங்காவது .வீசி .விடுவார்கள். அதை யாராவது மிதித்து விட்டால் தீக்காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அப்படி செய்யாமல் வாளியில் உள்ள நீரில் போடும் படி குழந்தைகளுக்கு சொல்லவேண்டும். வெடிக்காத பட்டாசுகளை செயல் இழக்க செய்ய ஈர சாக்கு பயன்படும். பட்டாசு கொழுத்த ஊதுவத்தி பயன்டுத்துவார்கள். அந்த ஊதுவத்தி கொளுத்த விளக்கு பயன்படுத்துவார்கள். அந்த விளக்கும் பட்டாசுக்கும் நீண்ட இடைவெளியில் இருக்க வேண்டும். பட்டாசுகளை கொளுத்த பயன்படுத்தும் ஊதுவத்தி மிக நீளமானதாக இருக்க வேண்டும். அப்போது தான் பட்டாசுக்கும் அதை கொளுத்தும் .குழந்தைக்கும் நிறைய இடைவெளி இருக்கும். சில பூவானங்கள் கொளுத்தும் போது வெடித்துவிடும் வாய்ப்பு உண்டு. ஊதுவத்தி சிறியதாக இருந்தால் குழந்தைக்கும் பட்டாசுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருக்கும், தீக்காயம் ஏற்படும்.
பெண் குழந்தைகள் பட்டாசு கொளுத்தும் போது துப்பட்டா, பாவாடை போன்ற ஆடைகளை தளர்வாக விடக்கூடாது. இதை கண்காணிப்பவர் தான் கவனித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பட்டாசு வெடிப்பதில் தான் கவனம் இருக்கும். தீ விபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.
சில குழந்தைகள் சிறு வெடிகளை கையில் பிடித்து கொளுத்தி வீசுவார்கள். இது தவறு; தீக்காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் ஆட்டோபாம் வெடிக்கும் போது காலி டப்பாக்களை வெடி மீது கவிழ்த்து வைப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது. இதை அனுமதிக்கக் கூடாது. உங்கள் வீட்டின் அருகில் ஓலை குடிசைகள் இருந்தால் ராக்கெட் விடுவதை தவிர்த்து விடுங்கள். காரணம் அது எந்த திசை நோக்கி பறக்கும் என்று கணிப்பது கடினம். தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் வெடிக்கு, தீ வைத்திருக்கும் தெருவில், யாரவது வர நேர்ந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் பதற்றம் ஆகாமல் இருப்பார்கள்.
மேலே சொன்ன கருத்துக்களை கவனத்தில் கொண்டு குழந்தைகளோடு பெரியவர்களும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியாக தீபாவளி விழாவை கொண்டாடுங்கள்.