பேரிடர் மேலாண்மை படிப்புகள்..!
பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சொல்லித்தருவதுதான் பேரிடர் மேலாண்மை படிப்பாகும்.
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதியுற்றபோது, அவர்களை மீட்க பல நாடுகளில் இருந்து பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன. இயற்கை பேரழிவுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பது, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, உணவு கொடுப்பது என... பலவிதமான உயிர் காக்கும் பணிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்படுவது உண்டு. இத்தகைய பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொள்வதற்கு சேவை உள்ளமும், பேரிடர் தொடர்பான படிப்பினையும் அவசியம். அதுபற்றி தெரிந்து கொள்வோமா...!
* இயற்கை பேரழிவு
வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், வறட்சி, பயங்கரவாதத் தாக்குதல், அணுக்கதிர் வீச்சு உள்ளிட்ட பேரழிவுகளால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30 லட்சம் பேர் பலியாகிவிட்டார்கள். 80 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா.வின் ஆய்வறிக்கை. எதிர்பாராத நேரத்தில் சில மணி நேரங்களில் நம் வாழ்வை சூறையாடும் இயற்கைச் சீற்றங்களும் பேரிடர்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து மீளப் பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. ஆனால் ஒன்றை யோசிக்க வேண்டியிருக்கிறது. பேரழிவுகள் நிகழ்வதை நம்மால் முழுவதுமாகத் தடுக்க முடியாது என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுப்பதன் மூலம் கூடுமானவரை அவை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
* தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
இந்தியாவில் ஏற்படக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல் உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம், பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பேரழிவுகளைச் சமாளிக்க உருவாக்கப்பட்டதுதான் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். 2001-ல் குஜராத் பூகம்பத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் தேவை மேலும் தீவிரமாக உணரப்பட்டது. அதன்படி 2005-ம் ஆண்டு டிசம்பர் 25-ல் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது.
அதுமட்டுமல்ல, பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பேரிடர் காலங்களில் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர்.
* பேரிடர் மேலாண்மை
இப்படி, இயற்கைப் பேரழிவு காலங்களில், மக்களை பாதுகாக்கவும், அவர்களை மீட்கவும் பிரத்யேக படிப்பு இருக்கிறது. இயற்கைச் சீற்றங்களையும், பேரழிவுகளையும் எதிர்கொள்ளவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சொல்லித்தருவதுதான் பேரிடர் மேலாண்மை (Disaster Management) படிப்பாகும்.
பேரழிவுகள் ஏன் நிகழ்கின்றன, அவை ஏற்படுத்தும் பாதிப்புகளின் தீவிரத்தை எப்படிக் குறைப்பது, பேரிடரில் சிக்கிக்கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து, நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை எப்போது, எப்படி வழங்குவது உள்ளிட்டவை பேரிடர் மேலாண்மையில் விரிவாகக் கற்றுத்தரப்படுகின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டமாகவும் இந்தப் படிப்பு இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
* கல்வி நிறுவனங்கள்
சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் அப் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (புனே), தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம், (புதுடெல்லி), டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (மும்பை), ஜம்செட்ஜி டாடா சென்டர் பார் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட், இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (புது டெல்லி), டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் (போபால்), அண்ணாமலை பல்கலைக்கழகம் (சிதம்பரம்).... இவற்றை தவிரவும் மேலும் பல நிறுவனங்களில் பேரிடர் மேலாண்மை கற்றுத்தரப்படுகிறது.
* அடிப்படைத் தகுதி
இளங்கலை பட்டப்படிப்பாக வழங்கப்படும் பேரிடர் மேலாண்மையில் சேர பிளஸ்-2 வில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். கலை, வணிகவியல், கணிதம், கணினி, அறிவியல் இப்படி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் இதைப் படிக்கலாம். முதுகலைப் பட்டமாகப் படிக்க ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதை அடுத்து ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.
* வேலை வாய்ப்பு
பேரிடர் மேலாண்மையை முறையாகப் படித்தவர்கள் சமூகச் செயற்பாட்டாளர், பொறியாளர், மருத்துவ நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர், மறுசீரமைப்பு பணியாளர் உள்ளிட்ட பொறுப்புகளை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் வகிக்க முடியும். தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சர்வதேச மையங்கள், துணை ராணுவத் துறை, பேரிடரைக் கண்காணிக்கும் துறை போன்றவைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்திய அரசாங்க துறைகளான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்புத் துறை, வறட்சி மேலாண்மை மையங்கள், காப்பீடு நிறுவனங்கள், சட்டம், அமலாக்கத் துறை, ரசாயனத் துறை, சுரங்கப் பணி, பெட்ரோல் தயாரிக்கும் துறை ஆகியவற்றிலும் அதிகமாக வேலை வாய்ப்புகள் உள்ளன. இதேபோல உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை, ஆக்ஸ்பாம், கேர் உள்ளிட்ட நிறுவனங்களும் வேலை கொடுக்கக் காத்திருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, பேரிடர் மேலாண்மை என்பது சேவைக்கான படிப்பும், வேலையும் ஆகும். அதை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மனிதநேயமும், பேராபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமும், துணிச்சலும் அவசியம்.
இயற்கைப் பேரழிவு காலங்களில், மக்களை பாதுகாக்கவும், அவர்களை மீட்கவும் பிரத்யேக படிப்பு இருக்கிறது.
கலை, வணிகவியல், கணிதம், கணினி, அறிவியல் இப்படி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் இதை படிக்கலாம்.