ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட மாநிலம்


ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட மாநிலம்
x

இந்தியாவில் ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட மாநிலம் மிசோரம்.

உலகின் மிகப்பெரிய ரெயில்வே வழித்தடங்கள் கொண்ட நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். பயணிகளை கையாள்வதற்கு வசதியாக பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ரெயில் நிலையங்கள் உள்ளன.

ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரெயில் நிலையம் மட்டுமே உள்ள மாநிலமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த மாநிலத்தின் பெயர் மிசோரம். அங்குள்ள பைராபி என்ற நகரில் அந்த ரெயில் நிலையம் அமைந்திருக்கிறது.

மிசோரமில் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ரெயில் பயணத்தை விரும்பினால் பைராபிக்குத்தான் செல்ல வேண்டும். நாட்டின் வேறு பகுதியில் ரெயில் நிலையம் இல்லாததால் பைராபிக்கு சென்று ரெயிலை பிடிப்பதற்குள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

பைராபி ரெயில் நிலையத்தில் வசதிகளும் குறைவு. மொத்தமே 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளன. ரெயில்கள் வந்து செல்வதற்கு நான்கு ரெயில் பாதைகள் உள்ளன.

2016-ம் ஆண்டு வரை இந்த வசதிகள் கூட இல்லாமல் சிறிய ரெயில் நிலையமாகத்தான் இருந்தது. அதற்கு பிறகுதான் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பைராபி ரெயில் நிலையம் 84 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசாமின் கடகால் சந்திப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மிசோரமில் மற்றொரு ரெயில் நிலையம் அமைப்பதற்கு இந்திய ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது. பைராபி ரெயில் நிலையத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கான செயல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக பைராபி-சாய்ராங் ரெயில் பாதை திட்ட பணிகள் (51.38 கிலோமீட்டர்) நிறைவடைய உள்ளது.

இந்தியாவில் ரெயில் நிலையமே இல்லாத மாநிலமும் இருக்கிறது. அது சிக்கிம். இந்த வடகிழக்கு மாநிலத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் என்.எச் 10 தேசிய நெடுஞ்சாலை இணைக்கிறது. சிக்கிமிற்கு அருகிலுள்ள ரெயில் நிலையங்கள்: சிலிகுரி, நியூ ஜல்பைகுரி.


Next Story