காமன்வெல்த் நாயகன் சரத்கமல்


காமன்வெல்த் நாயகன் சரத்கமல்
x

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும், சென்னை இளைஞர் சரத்கமலுடன் சிறுநேர்காணல்...

காமன்வெல்த் போட்டிகளுக்கு எப்படி தயாராகினீர்கள்?

காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், உலக தரவரிசையில் முன்னிலை வகிக்கும் போட்டியாளரிடம் தோல்வியை சந்தித்திருந்தேன். அதற்கும், காமன்வெல்த் போட்டிகளுக்கும் இடையே இருந்த இடைவெளியை சரிவர பயன்படுத்திக் கொண்டேன்.

மனதளவிலும், உடலளவிலும் என்னை வலுப்படுத்திக்கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் (தனி நபர், கலப்பு இரட்டையர்) பங்கேற்க இருந்ததால், நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டி இருந்தது. அதற்காக, உடல் ஆரோக்கியத்திலும், அதீத கவனம் செலுத்தினேன்.

காமன்வெல்த் போட்டியில், 4 பதக்கம் வென்றிருக்கிறீர்கள். இதை எதிர்பார்த்தீர்களா?

வெற்றியை எதிர்பார்த்தேன். ஆனால் 4 பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தனிநபர் விளையாட்டிற்காக, மிக கடினமாக தயாராகி இருந்தேன். அந்தவகையில், தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்வேன் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் குழு விளையாட்டில், அதிகம் பழக்கம் இல்லாத அதேசமயம் ஒருசில போட்டிகளில் மட்டுமே இணைந்து விளையாடிய வீரர்களுடன் ஜோடி சேர்ந்திருந்ததால், எங்களுக்குள்ளான புரிதல் எப்படி இருக்கும்?, எதிரணியினரை வீழ்த்தும் அளவிற்கு நாங்கள் ஒற்றுமையாக, திறம்பட விளையாடுவோமா..? இப்படியான பல கேள்விகள் என் மனதில் இருந்தன. ஆனால் குழு விளையாட்டிலும் நாங்கள் கலக்கினோம். பதக்கம் வென்றோம்.

போட்டி நிறைவு விழாவில் நடந்த அணிவகுப்பில், நீங்கள் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏந்தினீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

இதனால்தான், இந்த காமன்வெல்த் போட்டி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். 4 பதக்கம் வென்றதைவிட, அணிவகுப்பில் இந்திய கொடியை கையில் ஏந்தி, இந்திய அணிக்கு தலைமை தாங்கியதை மிகவும் பெருமையாக உணர்கிறேன்.

முதலில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்குதான், இந்த வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஆனால் அவர் காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறியதாலும், நான் காமன்வெல்த் போட்டியில் நான்கு பதக்கம் வென்றிருந்ததாலும்... இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பினை பெற்றேன்.

இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே, டேபிள் டென்னிஸ் வீரர் ஒருவர், இத்தகைய கவுரவத்தை பெறுவது இதுவே முதல்முறை.

உங்களது அடுத்த இலக்கு எது?

2024-ம் ஆண்டு, பாரீஸ் நகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக, இப்போதிலிருந்து தயாராக திட்டமிட்டிருக்கிறோம்.

தனிநபர் விளையாட்டிலும், குழு விளையாட்டிலும் அதீத கவனம் செலுத்த இருக்கிறோம். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி பெற இருக்கும் எங்களுக்கு, இந்த காமன்வெல்த் வெற்றிகள் புதுநம்பிக்கை கொடுத்திருக்கின்றன.

உங்களது வெற்றியை, உங்களது குடும்பத்தினர் எப்படி கொண்டாடினர்?

குடும்பத்தினரின் வெற்றிக்கொண்டாட்டத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக, எனக்காக அவர்கள் செய்த ஒருசில தியாகங்களையும் பதிவு செய்ய வேண்டும். தொடர் பயிற்சி, பயிற்சி ஆட்டங்கள், தேசிய-சர்வதேச விளையாட்டு போட்டி தொடர்கள்... இதுபோன்ற காரணங்களால் நான் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரம் மிகமிக குறைவு.

இருப்பினும், நான் தோல்வியை தழுவும்போது, என்னை தேற்றி பயிற்சிக்கு அனுப்பி வைப்பார்கள். இப்படி எனக்காக பல விஷயங்களை தியாகம் செய்தவர்கள், என் வெற்றியையும் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குறிப்பாக, நான் இந்திய அணியை வழிநடத்தியதில், அவர்களுக்கு அப்படியொரு பெருமை. அப்படியொரு சந்தோஷம்.

உங்களது தனிப்பட்ட வெற்றியாக எதைக் கருதுகிறீர்கள்?

பிரபலமில்லாத விளையாட்டாக கருதப்படும் டேபிள் டென்னிஸ், சமீபகாலமாக பிரபலமாகி இருக்கிறது. அதிகமானோர் எங்களது விளையாட்டையும் நேரலையில் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

என்னை முன்மாதிரியாக கொண்டு, என்னைப்போலவே தலையில் 'பேண்ட்' அணிந்து, நிறைய குழந்தைகள் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய வெற்றிதான்.

''என்னை முன்மாதிரியாக கொண்டு,

என்னைப்போலவே தலையில் 'பேண்ட்' அணிந்து, நிறைய குழந்தைகள் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய வெற்றிதான்'' -சரத் கமல்


Next Story