வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி...! காதலர்கள் குஷி...!
தொலைதூர உறவில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக முத்தமிடும் கருவியை சீனாவை சேர்ந்த ஜியாங் ஜாங்லி கண்டுபிடித்துள்ளார்.
பீஜீங்:
சீனாவின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியும்.
இதற்காக செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த ஆப் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் காதலி, அல்லது காதலனை தொடர்பு கொள்ள வேண்டும். அவரும் இணைப்பில் வந்ததும் இருவரும் நிஜத்தில் முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுத்து கொள்ளலாம்.
இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரம் இதற்கு இளம்ஜோடிகள் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் இந்த கருவியை ஒருபுறம் புகழ்ந்தாலும், மற்றொரு புறம் கிண்டல் செய்தும் வருகின்றனர். சிலர் முத்தத்தை வாயில் மட்டும் தான் கொடுப்பார்களா என்ன? என கிண்டலடித்து வருகின்றனர். முத்தங்களுக்காக கருவி செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டில், மலேசியா, இமேஜினியரிங் நிறுவனம், தொடு உணர் சிலிக்கான் பேட் வடிவத்தில் 'கிஸ்ஸிங்கர்' எனும் முத்த கருவியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் சான்சோவில் உள்ள சாங்சூ தொழிற்கல்வி நிறுவனம் மெகாட்ரானிக் டெக்னாலஜி இக்கருவிக்கு காப்புரிமை (Copyrights) வாங்கியுள்ளது. முத்த கருவியை ரிமோட் கிஸ் எனவும் சொல்கின்றனர். இதில் நகரும் வகையிலான சிலிக்கான் உதடுகள் உள்ளனர். இந்த உதடுகள் வாயிலாக பிடித்த நபருக்கு முத்தத்தை அப்லோட் செய்துவிடலாம். அவர்களிடம் இருந்தும் நமக்கான முத்தத்தைப் பெறலாம். இந்த முத்தத்தை ருசிக்க இருவரிடமும் அந்த கருவியும் (kissing kit) செயலியும் (app) இருக்க வேண்டும்.
முதலில் காதலர்கள் இருவரும் வீடியோ காலில் இணைய வேண்டும். பின்னர் முத்தங்களை பரிமாறி கொள்ள முடியும். அந்த கருவியில் உள்ள சென்சார் அந்த முத்தத்தை பதிவு செய்து கொள்கிறது. இந்த முத்தம் இணையம் மூலம் உங்கள் துணையிடம் இருக்கும் கருவிக்கும் உடனடியாக அனுப்பப்படுகிறது. உங்களுடைய முத்தம் அவருடைய சிலிகான் உதடுகளில் கிடைக்கும். வெறும் முத்தமாக இல்லாமல், ஒரு நபர் முத்தமிடும் போது அழுத்தம், இயக்கம், வெப்பம் முறையே எல்லாமே இந்த கருவி மூலம் சென்றுவிடும் என்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள முத்த கருவியின் விலை 288 யுவான் அதாவது ரூ.3,433 தான்.