கடிகார மனிதருக்கு கிடைத்த 'கின்னஸ்' அங்கீகாரம்..!
பழமையான கடிகாரங்களைக் கடந்த 40 ஆண்டுகளாகச் சேகரித்து வரும் ராபர்ட் கென்னடியை, கின்னஸ் சாதனை நிறுவனம் அங்கீகரித்துச் சாதனை சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளது, ராபர்ட் கென்னடியின் வீடு. வாசல் கதவைத் திறந்த அடுத்த நிமிடம் ஆச்சரியத்தில் மெய்மறக்கிறோம். காரணம், சுவர் முழுக்கப் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடிகாரங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காண்பிக்கின்றன; ஒவ்வொரு கண்டத்தின், நாட்டின் காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை அனைத்தையும் தன் குழந்தைப் போல் பராமரிக்கிறார், ராபர்ட் கென்னடி. அதற்காகவே, கின்னஸிலும் இடம் பிடித்திருக்கிறார். ஆம்...! பழமையான கடிகாரங்களைக் கடந்த 40 ஆண்டுகளாகச் சேகரித்து வரும் ராபர்ட் கென்னடியை, கின்னஸ் சாதனை நிறுவனம் அங்கீகரித்துச் சாதனை சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
கம்ப்யூட்டர் சார்ந்த தொழிலைச் செய்து வரும் இவர், அடிப்படையில் பழமை விரும்பி, கடிகாரச் சேகரிப்பாளர். இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா... என பல நாடுகளைச் சேர்ந்த பழங்கால கடிகாரங்களைத் தேடித் தேடி சேகரிக்கிறார்.
அனைத்தும் சாவி கொடுத்தால் மட்டுமே இயங்கக் கூடியவை. பேட்டரியால் இயங்கக் கூடிய எலக்ட்ரானிக் கடிகாரங்கள் ஒன்று கூட இல்லை. மட்டுமல்ல, ஒவ்வொரு கடிகாரமும் குறைந்தது 150 ஆண்டுகளுக்கு முந்தையவை!
''எனது பூர்வீகம் நாகர்கோவில். எங்கள் வீட்டில் பழங்கால பெண்டுலம் கடிகாரம் இருந்தது. அப்பா தினமும் அதைத் துடைத்து சாவி கொடுப்பார். ஒவ்வொரு முறைச் சாவி கொடுக்கும்போதும், 'இது தாத்தாவோடது' என்பார். 1910-ல் மூணார் எஸ்டேட்டில் முதன்மைக் கிளர்க்காக தாத்தா பணியாற்றினார். அவர் சேவையைப் பாராட்டி வெள்ளைக்காரர் ஒரு காரும், கடிகாரமும் பரிசாகக் கொடுத்தார். அதனாலேயே, 'துரை கொடுத்தது' என அப்பா அடிக்கடி சொல்வார்.
அப்போது எனக்கு 15 வயதிருக்கும். துபாயில் இருந்து வந்த அப்பாவின் நண்பர் ஒரு பேட்டரி கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தார். 'சாவி போட வேண்டாம். பேட்டரியிலும் ஓடும்' எனச் சொன்னார். அப்பாவுக்கு ஒரே ஆச்சரியம். தாத்தா கடிகாரம் இருந்த இடத்தில் புது கடிகாரத்தை மாட்டிவிட்டார். அப்படி ஓரங்கட்டப்பட்ட தாத்தா கடிகாரத்தைத் தூக்கிப் போட மனமில்லாமல் அதை என் அறையில் மாட்டினேன். அதுதான் என் சேகரிப்பில் முதல் கடிகாரம். அதற்குப் பிறகுதான் நிறைய கடிகாரங்களைச் சேகரிக்க வேண்டும் எனத் தோன்றியது'' என்றவர், இன்று வீடு முழுக்கப் பழமையான கடிகாரங்களைச் சேகரித்திருக்கிறார்.
''1987-ல் பி.எஸ்சி இயற்பியல் படித்துவிட்டு முதுகலைப் படிப்பிற்காக சென்னை வந்தேன். வீட்டில் செலவுக்கு என மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புவார்கள். அதில் மிச்சம் பிடித்த பணத்தில் கடிகாரங்கள் வாங்க ஆரம்பித்தேன். அந்த வகையில், படிப்பை முடித்தபோது 14 கடிகாரங்களைச் சேர்த்துவிட்டேன். இதற்கு இடையில் புதுச்சேரியில் வேலை கிடைத்தது. கடிகாரப் பொக்கிஷங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன். புதுச்சேரி கடற்கரைச் சாலை ஓரங்களில் நிறைய பிரெஞ்சு உணவகங்கள் இருக்கும். பிரெஞ்சு காலனி என்பதால் பழங்காலக் கடிகாரங்கள் அங்கு அதிகமாக இருக்கும். அவர்களிடம் நட்பாகப் பழகி அந்தக் கடிகாரங்களை வாங்கினேன். அடுத்து சென்னைக்கு மாற்றம். பொக்கிஷங்களைத் தூக்கிக் கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்...'' என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, திருமணத்துக்குப் பின் கடிகாரங்களை வைப்பதற்காகவே தனி வீடு வாங்கியுள்ளார்!
''1993-ல் கல்யாணமானது. வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தேன். கூடவே, கடிகாரங்களைத் தேடி அலைந்தேன். இதனாலேயே என் மனைவிக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வந்தது. ஒருமுறை மகள்களுக்குப் பள்ளி கட்டணம் செலுத்தவேண்டிய பணத்தில் கடிகாரம் வாங்கிட்டேன். பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. அப்பாதான் சமாதானம் செய்தார். என்னுடைய ஆர்வத்தை வீட்டினர் எல்லோரும் புரிந்து கொள்ள சில காலமானது. இணையம் பரவலான பிறகுதான் என்னுடைய சேகரிப்பின் மதிப்பு அவர்களுக்குத் தெரிந்தது. சர்வதேச அளவில் கடிகார அருங்காட்சியகங்கள் இருப்பதையும், பழைய கடிகாரங்களுக்கான மவுசையும் உணர்ந்து கொண்டார்கள்'' என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, தன்னிடமுள்ள பெரும்பாலான கடிகாரங்களைப் பழைய பேப்பர்-இரும்புக் கடைகளில்தான் வாங்கியுள்ளார்.
''என்னிடம் இருக்கும் ஒவ்வொரு கடிகாரங்களும் பல லட்சங்கள் மதிப்புடையது. ஆனால், அவ்வளவு விலை கொடுத்து எல்லாம் எதையும் நான் வாங்கவில்லை. நாடு நாடாகவும் அலையவில்லை. என்னிடம் இருக்கும் 2800 கடிகாரங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டின் பழைய பேப்பர் கடைகளில் வாங்கியதுதான். அவை பெரும்பாலும் உடைந்த நிலையில் இருக்கும். கண்டிப்பாக யாரும் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். சிலவற்றில் மோட்டார் இருக்காது. இன்னும் சிலவற்றில் கதவு இருக்காது. முட்கள் சுற்ற சக்கரம் இருக்காது. இதையெல்லாம் வாங்கிச் சரி செய்வேன். கடிகாரச் சக்கரத்தில் இருக்கிற பற்களை, கைகளால்தான் தயாரிப்போம். முதலில் 82 கட் வருவது போல சக்கரம் தயாரிப்போம். அது வேகமாக ஓடும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீராக்குவோம். இந்த சக்கரங்களை சரிசெய்யவே 20 நாட்களுக்கு மேல் ஆகும். எல்லாக் கடிகாரங்களும் குறைந்தது இருநூறு வருட பழமையானது. அதனால் அதற்கான மாற்றுப்பொருளோ, உதிரிபாகங்களோ இப்போது மார்க்கெட்டில் கிடைக்காது. எல்லா கோளாறுகளையும், நாம்தான் ஆராய்ந்து, உதிரிபாகங்களைத் தயாரித்து இயங்க வைக்க வேண்டும். இதற்கு என பிரத்யேக நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் மோட்டார் தொடங்கி நான் கேட்கும் சிறுசிறு பாகங்களையும் செய்து கொடுப்பார்கள்.
இதையெல்லாம் பாலீஷ் செய்து அதன் பழமையைக் கெடுக்க விரும்பவில்லை. அவைப் பழமை மாறாமல் இருப்பதுதான் அழகு...'' என்றவர் தன் சேகரிப்புக்காகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பழைய பேப்பர் கடைகளில் பலநாட்கள் தவம் இருந்திருக்கிறார்.
''பொதுவாக பழைய பேப்பர் கடை வியாபாரிகள் கொஞ்சம் கறாராக இருப்பார்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன். சரியாகப் பேச மாட்டார்கள். பழக மாட்டார்கள். அவங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதும்தான் கடைக்குள்ளேயே நம்மை அனுமதிப்பார்கள். மாயவரத்தில் ஒரு கடையில் 20 கடிகாரங்கள் வரை இருப்பதாக கேள்விப்பட்டுப் போனேன். கடைக்காரர் நிறைய கேள்வி கேட்டார். ஆனால், கடைசி வரை காண்பிக்கவே இல்லை. தோல்வியோடு திரும்பினேன்.
20 நாட்கள் கழித்து இனிப்புகளோடு அவரை சந்திக்க சென்றேன். முதலில் உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை... அவரது மனைவியைக் கூப்பிட்டு கடிகாரங்களைக் காட்டச் சொன்னார். எல்லாமே சூப்பர்க் கடிகாரங்கள்! அப்படியே அவர் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன்...'' என்ற ராபர்ட் கென்னடி, ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது என்கிறார்.
''சில கடிகாரத்தில் மூன்று சாவி கொடுக்கும் துவாரம் இருக்கும். பொதுவாக அரை மணி, ஒரு மணிக்கு ஒருமுறைதானே மணி அடிக்கும். மூன்று துவாரங்கள் இருக்கும் கடிகாரங்கள் கால் மணிக்கு ஒருமுறை மணி அடிக்கும். அந்தக் கடிகாரங்களும் என்னிடம் இருக்கிறது. பிக் பென், ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான கடிகார நிறுவனம். அலாரம், டவர் கடிகாரங்களுக்கு இவர்கள்தான் பிரபலம். இவர்கள் தயாரித்த அனைத்து ரக அலாரம் கடிகாரங்களும் என்னிடம் இருக்கிறது. அதே போல அமெரிக்காவின் செயிண்ட் தாமஸ் நிறுவனம் பெண்டுலம் மற்றும் டவர் கடிகாரங்களுக்கு புகழ்பெற்றவர்கள். இவர்களின் தயாரிப்பும் என்னிடம் இருக்கிறது..'' என்று மகிழ்கிறார்.
''என்னிடம் இருக்கும் 2200 பெண்டுலம் கடிகாரங்களுமே ஸ்பெஷலானவை தான். 17-ம் நூற்றாண்டில் தொடங்கி, பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பெண்டுலம் கடிகாரங்களும் என்னிடம் இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பெண்டுலம் கடிகாரம் தொடங்கி, (1.5 இன்ச் மட்டுமே) ஆள் உயர பெண்டுலம் கடிகாரம் வரை என்னுடைய கலெக்ஷனில் இருக்கிறது. முதன் முதலில் தயாரிக்கப்பட்ட டைம்பீஸ், சாய்த்து வைத்தாலும் ஓடக்கூடிய, 'மரைன் கிளாக்' எனும் கப்பல் கடிகாரம், ஆண்டுக்கு ஒருமுறைச் சாவி கொடுக்கக் கூடிய, 'பர்த் டே கிளாக்' ஒவ்வொரு கால் மணிக்கும், 'அலாரம்' அடிக்கும் மணிக்கடிகாரம் என, பல்வேறு முதல் தலைமுறை கடிகாரங்கள், என்னிடம் உள்ளன.இதுபோல, பழமையான மற்ற சில பொருட்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன்''
குட்டி 'டைம் பீஸ்' கலெக்ஷன்கள்
''தினமும் குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது கடிகாரங்களோடு செலவிடுகிறேன். சாவி கொடுப்பது, பழுது நீக்குவது என... என்னுடைய வாழ்க்கைக் கடிகாரங்களோடுதான் கழிகிறது''