துரத்தி, துரத்தி காதல் செய்...! ஒரு தலைக்காதல் கொலைகளுக்கு சினிமா தான் காரணமா....!
சகிப்புத்தன்மை குறைந்துவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணமாகும்.
சகிப்புத்தன்மை குறைந்துவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணமாகும். இதுதொடர்பாக மனநல ஆலோசகர், எழுத்தாளர், பெற்றோர், கல்லூரி மாணவிகள் என பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். தான் விரும்பிய பெண்ணை கொலையும் செய்யத் துணிவது காதலா, இனக்கவர்ச்சியா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காதலுக்கு மரியாதை
மனித உணர்வுகளில் உன்னதமானது, உயர்வானது, காதல். முந்தைய காலங்களில் காதல் என்பது அரிதாக இருந்தது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால், காதலித்து திருமணம் செய்வது என்பது அரிதாகவே இருந்தது.
பஞ்சாங்கம் பார்த்து, நாள் குறித்து பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே பெரும்பாலும் அரங்கேறின. காதலிக்கும் பெண்ணை வாழ்க்கைத்துணையாக மாற்றிக்கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியவர்கள்கூட, அந்தப் பெண் எங்கிருந்தாலும் வாழ்க என மனதார வாழ்த்தினர்.
மனம் கவர்ந்த ஆணை மணக்கமுடியாமல் போன பெண்களும், தன்னைப் போல அன்பான ஒரு பெண் அவருக்கு மனைவியாய் அமையட்டும் என்று பிரார்த்தித்தனர். புதுவாழ்வை தொடங்கினர். இப்படி ஆண், பெண் இருதரப்புமே தங்களின் உண்மை காதலுக்கு உரிய மரியாதை கொடுத்தனர்.
ஒருதலைக்காதல்
கால மாற்றம், காதலிலும் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது. கண்களால் பேசி, இதயத்தில் வளர்ந்த காதல் இப்போது மாறிவிட்டது. செல்போன், சமூக வலைதளங்கள் மூலமாக, நேரடியாக பார்க்காமலேயும் காதல் வளர்கிறது. இவ்வாறு படிக்கும் வயதிலும், பருவம் எட்டாத வயதிலும் 'காதல்' என்ற எண்ணத்தில் விழுந்து, வாழ்க்கைப் பாதை பயணத்தில் தடுமாறி விழுவோர் ஏராளம். ஒருதலைக்காதலாய் ஒருவரை விரும்பி, அதற்கு அவர் உடன்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாய் உள்ளது. மாற்றுத்தரப்பின் உணர்வை, உள்ளத்தை புரிந்துகொள்ள முற்படுவது இல்லை.
அதிலும் மூர்க்கமாய் காதலுக்காக மல்லுக்கட்டும் போக்கு ஆண்களிடம்தான் காணப்படுகிறது. அதுவே பல விபரீதங்களுக்கு வித்திடுகிறது.
2016-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி, விழுப்புரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி நவீனா, கரூரைச் சேர்ந்த சோனாலி, தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா, கோவை அன்னனூரில் தான்யா, வேளச்சேரியில் இந்துஜா, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சித்ராதேவி, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அஸ்வினி, குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவேதா, இப்போது பரங்கிமலையில் சத்தியா என காதலின் பெயரில் கசக்கிப் போடப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறது.
சகிப்புத்தன்மை
எந்த தகுதியுமின்றி பெண்ணை விரட்டி விரட்டி காதலித்தால் விழுந்துவிடுவார், தனக்கு கிடைக்காத பெண்ணை எதுவும் செய்யலாம் என்று சித்தரிக்கும் நெடுந்தொடர்கள் போன்றவையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஒருவகையில் காரணமாகின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சகிப்புத்தன்மை குறைந்துவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணமாகும். இதுதொடர்பாக மனநல ஆலோசகர், எழுத்தாளர், பெற்றோர், கல்லூரி மாணவிகள் என பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
எதிர்காலம் எப்படி இருக்குமோ?
பெற்றோர் செந்தில்நாதன்-கலைச்செல்வி:-
இந்த சம்பவத்தை செய்தியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். நிச்சயமாக ஒரு பெற்றோராக இதை தாங்கிக்கொள்ள முடியாது. இப்போது அந்த மாணவியின் தந்தையும் இறந்துவிட்டார். அவர் மனதளவில் எப்படி பாதிக்கப்பட்டிருந்திருப்பார் என்று இதில் தெரிகிறது. பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது வரக்கூடிய காலங்களில் கேள்விக்குறியாகிவிடுமோ என நினைக்கத் தோன்றுகிறது. பெண்குழந்தைகளுக்கு கல்வி அவசியம். அவ்வாறு கல்வி கற்கப்போகும் வழியில் இதுபோன்ற அபாயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இதைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
3-ம் ஆண்டு கிரிமினாலஜி பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவி மோனிஷா:-
கொலை செய்யப்பட்டிருக்கும் மாணவி, அந்த பையனிடம் காதல் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதன் பின்பும் அவரை பின்தொடர்ந்தது சரியல்லை. அந்த மாணவி சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. பொதுவாக பெண்கள் இந்த விஷயத்தில் வேண்டாம் என்று சொன்னால், அதை ஆண்கள் பெரிதாகவே எடுத்துக்கொள்வதில்லை. இப்போது வெளிவரும் சினிமாக்களில்தான் இதை மிகைப்படுத்தி காட்டுகிறார்கள். அதுவும் இந்த சம்பவத்துக்கு ஒரு காரணமாகவே நான் பார்க்கிறேன். பெண்களின் உணர்வுகளை அனைவரும் மதிக்கவேண்டும்.
மறுக்கும் சுதந்திரம் இல்லை
முதுகலை பட்டப்படிப்பு மாணவி மிருதுளா:- ஒரு பெண் காதல் செய்யவில்லை என்றால், அவளை துரத்தி, துரத்தி காதல் செய் என்றுதான் இன்றைய சினிமாக்கள் சொல்கின்றன. இந்த தவறான விஷயம் இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதுதான் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடச் செய்கிறது. தனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அந்த ஆண் நினைத்ததால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெண்களின் உணர்வுகளை யாரும் புரிந்துக்கொள்வது கிடையாது. ஆண்களுக்கு எல்லா சுதந்திரத்தையும் வழங்கும் இந்த சமுதாயத்தில், எனக்கு வேண்டாம் என்று மறுக்கும் சுதந்திரம்கூட அந்த பெண்ணுக்கு இல்லாமல் போயிருக்கிறது.
கவிஞர் தியாரூ:- சென்னை பரங்கிமலையில் நடந்திருக்கும் இந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இது காதலா? புரிதல் இல்லாத முரட்டுத்தனமா? காதல், காமம், வாழ்க்கை என்பதில் புரிந்துகொள்ளுதல் இல்லாததால்தான் இந்தச் சீர்கேடு. தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் வாழ்க்கையை முடிக்க யாருக்கும் உரிமை கிடையாது. பெண் மீது தவறான ஆசைகொள்ளும் ஒருவன், அவனை காதலித்துதான் ஆகவேண்டும் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமற்ற செயல். பெண்களுக்கென்று சுயமரியாதை, சொந்தமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கிறது. இவ்வாறு ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சம்பவத்தில் பெற்றோரின் கனவு, ஆசை, அந்த மாணவியின் எதிர்காலம் ஆகியவற்றை அழிக்க அந்த நபருக்கு என்ன தகுதியிருக்கிறது? இது காதல் அல்ல. அநியாயமான ஆசை. நியாயமற்ற ஆசை வரும்போதுதான், நியாயமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது சமூகத்தின் மீது படிந்திருக்கும் கறை.
தார்மீக சிந்தனைகள்
சட்டக்கல்லூரி மாணவி சிந்தனா ஆண்டவன்:-
இது ஒரு கொடூரமான கொலை. இதை அரிய வழக்குகளில் ஒன்றாக கருதி மரண தண்டனை வழங்கவேண்டும். பெண்களை பின்தொடருவதை இயல்பாக்கும் ஒரு திரைப்படத்தை கொண்டாடுவதற்கு முன் நாம் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். உயர்ந்த சிந்தனைகள் கொண்ட தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது.
மனநல ஆலோசகர் என்ன சொல்கிறார்?
இந்த சம்பவம் குறித்து சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் கூறியதாவது:-
விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும்தான் நல்ல காதல். அந்த நபர் சதீஷ் உண்மையாகவே சத்யாவை காதலித்து இருந்தால், ரெயில் முன் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து உடனே தப்பியோடியிருக்கமாட்டார்.
தள்ளிவிட்டது மட்டுமின்றி, காதலி இறந்து கிடப்பது பற்றி கொஞ்சமும்கூட இரக்கம் இல்லாமல் ஓடியிருக்கிறார். இருவருமே பின்விளைவுகளைப் பற்றி சரியாக சிந்திக்காமல் ஒரு உணர்ச்சி வேகத்தில் ஒருவரையொருவர் விரும்பியிருக்கிறார்களே தவிர, இருவருக்கும் இடையே உண்மையான காதலுக்கான சரியான புரிதல் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
சத்யாவும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட பெண் என்று தெரிகிறது. சதீசை காதலிக்கும்போதும் சரி, குடும்பத்தினர் வேண்டாம் என்று அவரை விட்டு விலக சொன்னபோதும் சரி, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுத்திருக்கிறாரே தவிர, ஒரு வலுவான எண்ணம் கொண்டவராக தெரியவில்லை. காதலுக்கு கண் இல்லை என்பது, கண்மூடித்தனமாக புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. தான் காதலித்த பையனை திடீரென வேண்டாம் என்று கூறுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து சத்யாவும் யோசிக்கவில்லை.
பொதுவாக அனைவரும் எல்லா விஷயத்திலும், ஒரு தலையாக உணர்வுப்பூர்வமாக மட்டும் சிந்திக்கக்கூடாது. கருத்தியல் ரீதியாகவும், பின்விளைவுகள் குறித்தும் யோசித்து முடிவு எடுக்கவேண்டும். அதன்படிதான் தொடரவேண்டும். நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு சிறுவயதில் இருந்தே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பழக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.