ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் அசத்தும் நூற்றாண்டு பாரம்பரிய பள்ளி..!


ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் அசத்தும் நூற்றாண்டு பாரம்பரிய பள்ளி..!
x

இந்து நடுநிலைப் பள்ளி, நூற்றாண்டு கடந்த பள்ளி என்பதும், டிஜிட்டல் வசதிகள் நிரம்ப பெற்ற பள்ளி என்பதும், இந்த பள்ளி மீதான கவனத்தை அதிகமாக ஈர்க்க செய்கிறது.

நகர்புற மாணவர்களுக்கு கிடைக்கும் அத்தனை வசதிகளும், கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இயங்குகிறது, இந்து நடுநிலைப் பள்ளி. திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் இருக்கும் அரிகேசவநல்லூர் கிராமத்தில்தான் இந்த பள்ளி அமைந்திருக்கிறது. நூற்றாண்டு கடந்த பள்ளி என்பதும், டிஜிட்டல் வசதிகள் நிரம்ப பெற்ற பள்ளி என்பதும், இந்த பள்ளி மீதான கவனத்தை அதிகமாக ஈர்க்க செய்கிறது.

அது தொடர்பாக, இந்து நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்சந்தரிடம் பேசினோம். அவர் பள்ளியின் சிறப்புகளை விளக்கினார்.

''இது 1922-23 கல்வி ஆண்டிலேயே தொடங்கப்பட்ட பள்ளி. அந்தவகையில் இந்த வருடம், இதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு உதவிப்பெறும் பள்ளியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பள்ளியை நேரில் பார்த்தவர்கள், இது அரசு உதவிப்பெறும் பள்ளியா? அல்லது தனியார் பள்ளியா என்று ஆச்சரியத்தில் வியக்கும் அளவிற்கு, பள்ளியை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி இருக்கிறோம்.

3 கட்டிடங்கள், 8 கணினிகள், 4 ஸ்மார்ட் வகுப்பறைகள், 4 ஆண்ட்ராய்டு டி.வி., இணையதள வசதி, பள்ளி வளாகம் முழுவதும் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் என சுற்றுவட்டார பகுதிகளுக்கு, எங்களுடைய பள்ளி மாடல் பள்ளியாக திகழ்கிறது'' என்பவர், கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக செயல்படுகிறார்.

ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு செயல்திட்டங்களை வகுத்து, அதற்கு ஏற்ப செயல்பட்டு பள்ளியை மேம்படுத்தி வருகிறார்.

''சமூக ஊடகங்களை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக நினைக்கிறோம். ஆம், சமூக ஊடகங்கள் வாயிலாகவே முன்னாள் பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்கள் மூலமாகவே பள்ளியை மேம்படுத்தி வருகிறோம். இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும், அவர்களின் பங்கிற்கு சிறப்பான பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். அதனால்தான், ரூ.60 லட்சம் செலவில், 3 கட்டிடங்களை பள்ளி வளாகத்திற்குள் கட்ட முடிந்தது. மேலும், டிஜிட்டல் வகுப்பறையில் அங்கம் வகிக்கும் எல்லா டிஜிட்டல் பொருட்களும், முன்னாள் மாணவர்களின் பங்களிப்புதான்'' என்பவர், பல முன்னாள் பள்ளி மாணவர்களை நிரந்தர நன்கொடையாளர்களாக பெற்று நிறைய முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

''பள்ளி வகுப்பறைகள் மட்டுமல்ல, பள்ளி நிர்வாகமும் டிஜிட்டல் முறையில்தான் இயக்கப்படுகிறது. எங்களது பள்ளிக்கு என பிரத்யேகமாக அப்ளிகேஷன் இருக்கிறது. இதில்தான் வருகை பதிவேடு, வீட்டுப்பாட அறிவிப் புகள், ஆன்லைன் வகுப்புகள், கலந்தாய்வு கூட்டம் போன்றவை ஒருங்கிணைக்கப்படுகிறது.

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பள்ளிக்கு வராத குழந்தையின் பெற்றோருக்கு காலை 9.30 மணிக்குள்ளாகவே, தானியங்கி முறையில் செல்போன் அழைப்பு சென்றுவிடும். இந்த முறையை அமல்படுத்திய பிறகு, மாணவர்களின் விடுமுறை விகிதம் வெகுவாகவே குறைந்துவிட்டது. மேலும், அவர்களுக்கான வீட்டுப்பாட விவரங்களும், இந்த அப்ளிகேஷன் வழியாக, பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்றவர், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எந்தளவிற்கு பயன்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு பயன்படுத்தி பிரமிக்க வைக்கிறார்கள். கூடவே, அரசு பள்ளி மாணவர்களை டிஜிட்டல் தொழில்நுட்ப கலையில் கைதேர்ந்தவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

''இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி தேடலில், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. பள்ளிக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் வசதிகளை, கட்டுப்பாடின்றி சுதந்திரமாக பயன்படுத்தலாம். கணினி, ஸ்மார்ட் டி.வி.களை வெறும் காட்சி பொருளாக மட்டுமே பயன்படுத்தாமல், அதை பள்ளி மாணவர்கள் சுயமாகவே இயக்கி பார்க்கவும், அதன் பயன்பாட்டை முழுமையாக உணரவும், நாங்கள் அனுமதிக்கிறோம். இணையதள வசதியையும் அப்படிதான், உபயோகிக்கிறார்கள்.

முன்னாள் மாணவர்களின் 'ஸ்பான்ஸர்ஷிப்' கிடைக்கிறது. அதனால் பள்ளியை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தலாம் என்பதை தாண்டி, நகர்புற மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையான கற்றல் உணர்வை, எங்கள் பள்ளி மாணவர்களும் உணர வழிவகை செய்து கொடுக்கிறோம்'' என்பவர், பள்ளியில் மரபு வழி விளையாட்டுகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்.

''டிஜிட்டல் பள்ளியாக செயல்பாட்டாலும், எங்களது பள்ளி மாணவர்களிடம் மரபு வழி பழக்க வழக்கங்களையும், பாரம்பரிய விளையாட்டுகளையும் அதிகமாக காணமுடியும். டிஜிட்டல் கற்றலுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் வழங்கி வருகிறோம்.

கோலிக்குண்டு, பம்பரம், குச்சிக்கம்பு, பனங்காய் மற்றும் டயர் வண்டி உருட்டு, கயிறு இழுத்தல், பச்சக்குதிரை, எறிபந்து, பாண்டி, நொண்டி, கிச்சிகிச்சி தாம்பூலம், பல்லாங்குழி, தாயம்... இப்படி மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளை, எங்களது பள்ளி மாணவர்கள் மூலமாக உயிர்ப்போடு வைத்திருக்கிறோம். இத்தகைய பாரம்பரிய விளையாட்டுகளை, எங்களுடைய பள்ளி மாணவர்கள், பல அரசு நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட தமிழர் மரபு விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினர். பொருநை மாநாட்டிலும், மரபு வழி விளையாட்டுகளையும், கலைகளையும் நிகழ்த்தி காட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது'' என்பவர், மரபு வழி விளையாட்டுகளுடன், டேக்வாண்டோ, வில் வித்தை, யோகா போன்ற விளையாட்டு பயிற்சிகளையும், திறமையான பயிற்சியாளர்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட-மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்று அசத்தியிருக்கிறார்கள்.

''எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களும் 'ஸ்மார்ட்' ஆனவர்கள். அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களும் ரொம்பவே 'ஸ்மார்ட்' ஆனவர்கள். என்னுடைய முயற்சிகள் அத்தனைக்கும் உறுதுணையாக இருப்பதுடன், உற்சாகமாக செயல்பட வழிகாட்டுகிறார்கள். அதேபோல பள்ளியின் செயலாளர் டி.வி.சுப்பிரமணியனின் ஆதரவும் சிறப்பாக இருக்கிறது.

அதேபோல எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மனப்பாடம் செய்வதற்கு எதிரானவர்கள். மாணவர்கள் புரிந்துகொள்ளும்படியாக பாடம் நடத்துவதுடன், புரியாத மாணவர்களுக்காக கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு, பாடம் கற்றுக்கொடுக்கிறார்கள்'' என்று உற்சாகமாக பேசும் ராம்சந்தர், 2021-ம் ஆண்டின் நல்லாசிரியர் விருதை பெற்றிருக்கிறார். அதோடு தனியார் அமைப்புகளின் பல அங்கீகாரம் மற்றும் விருதுகளையும் வென்று அசத்தி வருகிறார். இவர் மட்டுமின்றி, இதே பள்ளியில் பணியாற்றும் சு.முத்துச்செல்வி என்ற ஆசிரியையும், 2019-ம் ஆண்டிற்கான புதுமை ஆசிரியர் விருதை வென்றிருக்கிறார்.

''எங்களுக்கு என பிரத்யேக யூ-டியூப் சேனல் இருக்கிறது. பேஸ்புக் பக்கம், இணையதளம், வாட்ஸ் ஆப் குழு... இப்படி டிஜிட்டல் உலகை எப்படியெல்லாம் பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியுமோ, நாங்கள் முறையாக பயன்படுத்தி கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வருகிறோம். இனியும் வழங்குவோம்'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.


Next Story