பறவைகள் பலவிதம்..! ஒவ்வொன்றும் தனிரகம்..!


பறவைகள் பலவிதம்..! ஒவ்வொன்றும் தனிரகம்..!
x

பறவைகளில் மிக சுவாரசியமான 5 பறவைகளை பற்றி தெரிந்து கொள்வோமா...? இவை ஒவ்வொன்றும் தங்களுக்கு என தனி சிறப்புகளை கொண்டிருக்கின்றன.

ஹரியால்

இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் ஹரியால் என்ற பறவையை அதிகமாக காண முடியும். அதுவும் எங்கு தெரியுமா..? மர உச்சியில்தான். ஆம்..! இந்த பறவைகள் தரையில் தடம்பதிப்பதை காண்பது அரிதிலும் அரிது. எப்போதும் உயரமான மரங்களிலும், மலை உச்சிகளிலும் வாழ்வதையே இவை விரும்புகின்றன. இவை இந்தியா மட்டுமல்லாது இலங்கை, பர்மா, சீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளிலும் உலவுகின்றன. பச்சை நிறத்தில் காணப்படும் இதை, மஞ்சள் கால் பச்சை புறா என்றும் அழைக்கிறார்கள்.

கூக புர்ரா

மனிதர்களைப்போலவே பேசும் கிளிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் மனிதர்களை போலவே சிரிப்பு சத்தம் எழுப்பும் பறவையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?, அந்த பறவையின் பெயர் 'கூக புர்ரா'. இதன் சிரிப்பு சத்தமும், மனிதர்களின் சிரிப்பு சத்தமும் அச்சு அசலாக இருக்குமாம்.

பூங்கொத்தி

மரங்கொத்தி பறவையைப் போலவே பூங்கொத்தி என்ற ஒரு பறவை உள்ளது. இது தேன்சிட்டு போலவே இருக்கும். ஆனால் தேன்சிட்டிற்கு அலகு பூக்களிலுள்ள தேன்களை குடிப்பதற்கு ஏற்ப நீளமாக இருக்கும். இந்த பூங்கொத்திக்கு அலகு குட்டையாக இருக்கும். இதிலும் பலவகையான பூங்கொத்தி இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

நாரை

பறவைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாய் ஒலி எழுப்பி அசத்தக்கூடியவை. ஆனால் குரல் ஒலியே எழுப்பாமல் உயிர் வாழும் பறவை இனங்கள் உள்ளன. அந்த பட்டியலில், கூழைக்கடா மற்றும் நாரை முதல் இடம் பிடிப்பதோடு, சில வகை கழுகுகளும் இடம்பிடிக்கின்றன. அதேசமயம் ஒருசில நாரை இனங்கள் ஒலி எழுப்பினால், 3 கி.மீ. தொலைவு தாண்டியும், அதன் சத்தம் கேட்குமாம்.

புறா

புறாவின் இரு இறகுகளின் எடையானது, அதன் உடலில் இருக்கும் மொத்த எலும்புகளின் எடையைவிட அதிகமாம்.


Next Story