அழகு தரும் 'டாட்டூ கலை'
அழகு டாட்டூக்களைவிட, சரும பிரச்சினைகளுக்கான டாட்டூக்கள்தான் மனநிறைவாக இருக்கின்றன. பலரும் புது வாழ்க்கை கிடைத்ததை போல உணர்கிறார்கள். டாட்டூ மூலம் சரும பாதிப்பில் இருந்து மீண்ட பல பெண்கள், திருமண பத்திரிகைகளுடன் வந்து நிற்பது, மகிழ்ச்சியான மனநிலையை கொடுக்கிறது.
டாட்டூ என்பது அழகு கலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்த அழகு கலையை, சிலருக்கான அத்தியாவசிய கலையாக மாற்றியிருக்கிறார், செந்தில் குமார் . திருச்சியை சேர்ந்தவரான இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. இருப்பினும் டாட்டூ அழகு கலையால் ஈர்க்கப்பட்டு, அதில் பல புதுமைகளை படைத்திருக்கிறார். ஆம்...! எல்லோரும் டாட்டூ கலையை அழகு கலையாக பார்க்க, இவர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுகிறார்.
தீக்காயம், சரும பிரச்சினைகளால் ஏற்படும் நிற வேற்றுமைகளுக்கு தனக்கு தெரிந்த டாட்டூ கலை மூலம் தீர்வு காண்கிறார். இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கும் டாட்டூ மோகத்தை விரிவாக தெரிந்து கொள்ளவும், 'டாட்டூ' கலையில் மேம்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ளவும், இவரது புத்தாக்க முயற்சி பற்றி தெரிந்து கொள்ளவும் சந்தித்தோம். பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
டாட்டூ வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
என்னுடைய குடும்பத்திற்கும், ஓவிய மற்றும் அழகு கலைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதால், என்னால் வெகு சுலபமாக டாட்டூக்களுடன் ஐக்கியமாக முடிந்தது. அந்த கலையை எப்படி டிரெண்டாக மேம்படுத்தலாம் என்ற யோசனையில்தான், எம்.பி.ஏ. படித்திருந்தும் கூட, சிறப்பு பயிற்சிகள் வாயிலாக, டாட்டூ கலைஞராக மாறினேன்.
சமீபகாலமாக டாட்டூ மீதான மோகம், அதிகரித்திருப்பது ஏன்?
அந்த காலத்தில் டாட்டூ என்பதை அங்கீகாரமாகவும், அடையாளமாகவும் பார்த்தனர். வெற்றியாளரை குறிக்க, ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்த, திருடர்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க... என டாட்டூ கலை பலவிதமான அடையாளங்களாக திகழ்ந்திருக்கிறது. அதற்கு பிறகு, 19-ம் நூற்றாண்டில், பெயர்களை பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் பிரபலமாக இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர், பேஷன் உலகில் தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள, டாட்டூ வரைகிறார்கள்.
அதன் வெளிப்பாடாகவே, டாட்டூ கலாசாரம் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்திருக்கிறது. மேலும், இளைஞர்கள்-இளம் பெண்களின் ஹீரோவாக திகழும் நடிகர்-நடிைககள், கிரிக்கெட் பிரபலங்கள்... போன்றோரும், டாட்டூ கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, உடல் முழுக்க டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தாக்கத்தினாலும், டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
டாட்டூ அழகு கலையை, நீங்கள் எப்படி மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து அவசியமான கலையாக மாற்றினீர்கள்?
உலக நாடுகளில், இந்த டிரெண்ட் இருக்கிறது. அதாவது உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள், பிரசவத்தின்போது உண்டான தையல் தழும்புகள், முகத்தில் தோன்றும் வெண் குஷ்ட புள்ளிகளை டாட்டூ கலை மூலம், அழகான அதே சமயம் ரசிக்கக்கூடிய ஓவியங்களாக மாற்றுவார்கள். அந்த இன்ஸ்பிரேஷன் தான் என்னையும் தொற்றிக்கொண்டது. எல்லோரும் அழகிற்காக டாட்டூ வரைந்துகொண்டிருக்க, நான் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து காஸ்மெட்டிக் டாட்டூ எனப்படும் சரும சீராய்வு டாட்டூக்களை வரைய ஆரம்பித்தேன்.
இந்த கலைக்கு வரவேற்பு இருக்கிறதா?
நம் இந்தியாவில், நிறைய நபர்களுக்கு வெண் குஷ்ட பாதிப்பு இருக்கிறது. சிலருக்கு சிறு சிறு புள்ளிகளாகவும், சிலருக்கு வாய், கண், கை பகுதிகளிலும், சிலருக்கு உடல் முழுக்கவும் அதன் பாதிப்பு இருக்கிறது. இந்த பாதிப்பினால் பல இளம் பெண்களுக்கு திருமணம் என்பது பகல் கனவாகவே இருக்கிறது. அதேபோல, தீக்காயம், வெந்நீர் தெறித்து கொப்பளங்களால் தோல் நிறம் மாறுபடுவது, இதர சரும பிரச்சினைகளால் மாறுபடும் நிற வேற்றுமைகளை சீராக்குவது போன்ற பலவற்றுக்கு, டாட்டூ மூலம் அழகு படுத்துவதால், வரவேற்பு இருக்கிறது.
இதைத் தாண்டி, அழகுக் கலைக்கான டாட்டூம் வரைவீர்களா?
ஆம்..! ஆனால் அழகு டாட்டூக்களைவிட, சரும பிரச்சினைகளுக்கான டாட்டூக்கள்தான் மனநிறைவாக இருக்கின்றன. பலரும் புது வாழ்க்கை கிடைத்ததை போல உணர்கிறார்கள். டாட்டூ மூலம் சரும பாதிப்பில் இருந்து மீண்ட பல பெண்கள், திருமண பத்திரிகைகளுடன் வந்து நிற்பது, மகிழ்ச்சியான மனநிலையை கொடுக்கிறது.
இந்தியாவில் டாட்டூ மோகம் எந்த அளவிற்கு இருக்கிறது?
நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 65 சதவீத மக்கள் டாட்டூ வரைந்துகொண்டிருக்கிறார்கள்.
டாட்டூ, அன்றும், இன்றும் எப்படி மாறுபடுகிறது?
டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது. பச்சை நிறத்தில் மட்டுமல்ல, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில், 'டாட்டூ' வரைந்து கொள்வதற்கு ஏற்ப அதன் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது. உலக நாடுகளில், வண்ண மைகளில் டாட்டூ வரைய அதிக வரவேற்பு இருக்கிறது. நம் இந்தியாவின், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு பகுதிகளிலும், வண்ண மைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அதேபோல, தற்போது பயன்படுத்தப்படும் டாட்டூ மை, பாதுகாப்பானது.
மேலும் டாட்டூ வரைய உதவும் கருவிகளும் டிஜிட்டல் முறையில் முன்னேறிவிட்டன. டாட்டூ கலைஞர்களுக்கு சவுகரியமான வகையில் கையடக்கமான பல கருவிகள், மார்க்கெட்டில் இருக்கின்றன. இவை, முன்பு போல இல்லாமல், அதிகம் வலியில்லாமல் டாட்டூ வரைய வழிகாட்டுகின்றன.
முன்பெல்லாம் பெயர்களை பச்சை குத்துவது டிரெண்டாக இருந்தது. இப்போது என்ன டிரெண்டாக இருக்கிறது?
பெற்றோர்களின் பெயர்கள், கணவன்-மனைவி பெயர்கள், குழந்தைகளின் பெயர்களை டாட்டூ போடுவது, எவர்கிரீன் டிரெண்ட். அதேபோல, பிறந்த தேதி, திருமண தேதி, காதலை வெளிப்படுத்திய தேதி, குழந்தை பிறந்த தேதி, பெற்றோரின் ஓவியம் ஆகியவற்றை டாட்டூ போடும் பழக்கமும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் பேஷன் துறையில் இருப்பவர்கள், உடல் முழுக்க ஓவியங்களை வரைந்து கொள்வார்கள். அதில் தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களின் ஓவியங்கள் தொடங்கி, அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஓவிய காட்சிகளை வரையச் சொல்வார்கள். ஒரு சிலர், பழங்குடியின அடையாளங்களை, டாட்டூவாக உடலில் வரைந்து கொள்வதுண்டு.
டாட்டூ, அழகு என்பதை தாண்டி வேறு எதாவது வகையிலும் பயன்படுகிறதா?
ஆம்..! விபத்துகளில் சிக்கியவர்களின் உடலில் மறையாமல் இருக்கும் வடுக்களை, டாட்டூ மூலமாக மறைப்பது உண்டு. அதேபோல, வெண் குஷ்டம் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் கூட, டாட்டூ மூலமாக தங்கள் அழகை மெருகேற்றுகிறார்கள்.
டாட்டூ மோகம் யாரிடம் அதிகமாக இருக்கிறது?
இளம் வயதினர், டாட்டு போடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.
டாட்டூ வரைந்த பிறகு அழிக்க முடியுமா?
முடியும். ஆனால், அதற்கு காஸ்மெட்டாலஜி மருத்துவரை அணுக வேண்டியிருக்கும். அவர் மூலமாகத்தான், லேசர் முறையில் டாட்டூக்களை அகற்ற வேண்டும். அவை, நிறமிழக்க சில காலங்கள் தேவைப்படும்.
டாட்டூ வரைய நினைப்பவர்கள், எந்தெந்த விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்?
சுத்தமான, முன் அனுபவம் உள்ள ஸ்டூடியோக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. டாட்டூ வரைய உதவும் ஊசிகளை மாற்றுகிறார்களா, ரத்த சிதறல்கள் தெறிக்காமல் இருக்க பிளாஸ்டிக் ஷீட் மூலம் 'ராப்' செய்கிறார்களா... போன்றவற்றை எல்லாம் சோதித்த பிறகே, டாட்டூ போட வேண்டும்.