பழைய பொருட்களில் உருவான 'பேட்டரி பைக்'


பழைய பொருட்களில் உருவான பேட்டரி பைக்
x

பழைய இரும்பு கடையில் கிடைத்த உதிரி பாகங்களைக் கொண்டு மின்சார பைக்கை நாகாலந்தைச் சேர்ந்த இருவர் உருவாக்கியுள்ளனர்.

பழைய இரும்பு கடையில் கிடைத்த உதிரி பாகங்களைக் கொண்டு மின்சார பைக்கை நாகாலந்தைச் சேர்ந்த இருவர் உருவாக்கியுள்ளனர். 250 வாட்ஸ் பேட்டரி தவிர, பழைய இரும்பு கடையில் கிடைத்த மற்ற உதிரிபாகங்களைக் கொண்டு 4.6 மீட்டர் நீளமும், 3.6 அடி உயரமும் கொண்ட மின்சார பைக்கில் 120 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும்.

இந்த பைக் உருவாக்கத்திற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) ஒருவரும் உறுதுணையாக இருக்கிறார். இவரது தூண்டுதலில்தான், எஸ்.பி. யின் ஓட்டுநர் குமிங் மற்றும் பைக் மெக்கானிக் துமாங் ஆகியோர் இந்த பேட்டரி பைக்கை உருவாக்கியுள்ளனர்.



இந்த பைக் குறித்து மாவட்ட எஸ்.பி., பிரித்பால் கவுர், "இருவரும் சிறந்த உழைப்பாளிகள். குமிங் என்னிடம் ஓட்டுநராக பணியாற்றுகிறார். துமாங் சிறந்த பைக் மெக்கானிக்" என்றார்.

இருவரும் மின்சார வாகனம் குறித்து கூறுகையில், "எங்கள் கனவு நினைவாகியிருக்கிறது. இந்த பைக் எங்கள் தேவைக்குப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சிக்கு பிறகு, மற்றொரு கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். இங்கிருக்கும் விவசாயிகள் ஏலக்காயை உலர்த்த விறகுகளை எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புகை வெளியாகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போலவே, ஏலக்காயை உலர்த்துவதற்கும் இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். குறைந்த விலையில் கிடைக்கும் இந்த இயந்திரம் மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது" என்றனர்.

மெக்கானிக் துமாங், "மின்சார பைக்கை தயாரிக்க முடியுமா என சில மாதங்களுக்கு முன்பு எஸ்.பி. என்னிடம் கேட்டார். நான் முயல்கிறேன் என்றேன். ஆனால், எனக்கு உதவியாளர் உள்ளிட்ட சில வசதிகள் தேவை என்றேன். எனக்கு வெல்டிங் மெஷினை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது ஓட்டுநரை உதவிக்கு அனுப்பினார். எங்கள் முயற்சி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

குமிங், "இந்த திட்டத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு மின்சார பைக்கை உருவாக்கியது புதிய அனுபவமாக இருந்தது" என்றார்.


Next Story