கலாசாரத்தை பறைசாற்றும் 'கலை திருவிழாக்கள்'


கலாசாரத்தை பறைசாற்றும் கலை திருவிழாக்கள்
x

வண்ணமயமான திருவிழாக்கள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய உடைகள், சடங்குகள் உள்ளிட்ட மாறுபட்ட வரலாற்று சிறப்பம்சங்கள் இந்தியாவை உலக அரங்கில் தனித்துவமாக காண்பிக்கச் செய்கின்றன.

உள்ளூர் கலைகள், அங்கு தயார் செய்யப்படும் கைவினைப்பொருட்கள், பரிமாறப்படும் உணவு வகைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள அந்த பகுதியில் நடைபெறும் திருவிழாக்களை கண்டு களித்தாலே போதுமானது. ஒட்டுமொத்த கலாசாரத்தையும், பாரம்பரியங்களையும் அவை காட்சிப்படுத்திவிடும். அந்த வகையில் இந்தியா முழுவதும் கோடை காலங்களில் நடைபெறும் பிரபலமான திருவிழாக்களில் சிலவற்றை இங்கே காண்போம்.

யூரு கப்கியாத் திருவிழா, லே

பவுத்த திருவிழாவான இது இரண்டு நாட்கள் நடைபெறும். இது வரலாற்று சிறப்புமிக்க லமாயுரு மடாலயத்தில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பவுத்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.

ஹெமிஸ் திருவிழாவைப் போலவே, இந்த திருவிழாவிலும் முகமூடி நடனங்கள் இடம்பெறும். டிரம்ஸ் இசை, பக்கவாத்திய தாளங்களுக்கு இசைந்து கொடுத்து நடனத்தை அரங்கேற்றுவார்கள். வண்ணமயமான ஆடை அணிந்த புத்த துறவிகள் இந்த நடன நாடகத்தில் பங்கேற்பார்கள். புத்த மதத்தின் நுணுக்கங்கள் மற்றும் புத்தரின் போதனைகள் பற்றி எடுத்துரைக்கும் விதமாக இந்த திருவிழா அமைந்திருக்கும்.

நடைபெறும் தேதி: ஜூன் 26 - 27

எப்படி செல்வது: லமாயுருவிலிருந்து 125 கிமீ தொலைவில் லே விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 4 மணிநேர பயணத்தில் சென்றடைந்துவிடலாம்.

ஹெமிஸ் திருவிழா, லடாக்:

லடாக்கில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான ஹெமிஸ் திருவிழா ஆண்டுதோறும் திபெத்திய நாட்காட்டியின் சந்திர மாதத்தின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்திய பவுத்த ஆன்மிகவாதியான குரு பத்மசாம்பவாவின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாப்படும். 300 ஆண்டுகள் பழமையான ஹெமிஸ் மடாலயத்தில் இந்த திருவிழா அரங்கேறும். உள்ளூர்வாசிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, மடத்தின் முற்றத்தில் ஒன்று கூடி விழாவை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். சாம் எனப்படும் டிரம்ஸ் இசைத்து பக்கவாத்தியங்கள் முழங்க பாரம்பரிய ஆடைகளை உடுத்தி முகமுடி அணிந்து நடனமாடுவார்கள். அது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். துறவிகள் பாரம்பரிய நீண்ட கவுன்களை அணிவார்கள். நாடகங்களையும் அரங்கேற்றம் செய்வார்கள். அவர்கள் அணியும் ஒவ்வொரு முக முடியும் ஒரு சிறப்பம்சத்தை வெளிப்படுத்தும். வண்ணமயமான இந்த திருவிழாவின்போது அப்பகுதியின் பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் காட்சிப்படுத்துவார்கள்.

நடைபெறும் தேதி: ஜூன் 8 மற்றும் 9-ந் தேதி

எப்படி செல்வது: ஹெமிஸில் இருந்து 34 கிமீ தொலைவில் லே விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து டாக்சி மூலம் ஹெமிஸ் சென்றடையலாம். ரெயில் மார்க்கமாக பயணிப்பவர்கள் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து கார்கள் மூலம் செல்லலாம்.

கங்கா தசரா, உத்தரகாண்ட்:

கங்கா தேவியின் நினைவாக அனுசரிக்கப்படும் கங்கா தசரா, உத்தரகாண்ட் மாநிலத்தில் மே அல்லது ஜூன் மாதங்களில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். இது தசர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. ஹரித்வார், ரிஷிகேஷ், வாரணாசி, பிரயாக்ராஜ், கர்முக்தேஷ்வர் போன்ற பிரபலமான தலங்களின் வழியே ஓடும் கங்கை நதிக் கரையில் இந்த திருவிழா விமரிசையாக நடைபெறும். பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆரத்தி எடுத்து வழிபடுவார்கள். தாங்கள் செய்த பாவங்களை போக்க கங்கை நதியில் நீராடுவார்கள். பிறகு ஆற்றின் கரையில் தியானம் செய்வார்கள்.

விழா நடைபெறும் தேதி: ஜூன் 9

எப்படி செல்வது: ஹரித்வாரில் இருந்து கிட்டத்தட்ட 37 கிமீ தொலைவில் டேராடூன் விமான நிலையம் அமைந்திருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஹரித்துவாரை அடையலாம். வாரணாசி, டெல்லி, மும்பை போன்ற இடங்களுக்கு விமானம் மூலம் பயணித்து, அங்கிருந்தும் கங்கை நதிக்கரையோர நகரங்களை சென்றடையலாம்.


Next Story