குப்பை கிடங்குக்கு புது தோற்றம் கொடுக்கும் என்ஜினீயர் ஆனந்த் மல்லிகாவாட்


குப்பை கிடங்குக்கு புது தோற்றம் கொடுக்கும் என்ஜினீயர் ஆனந்த் மல்லிகாவாட்
x

குப்பை கொட்டும் பகுதிகளில் செடிகள் வளர்ந்து அந்த பகுதியையே அடர்ந்த காடாக மாற்றியுள்ளார், ஆனந்த் மல்லிகாவாட். கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த பேகூரில் வசிக்கும் இவர், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்.

இவருடைய முயற்சியால் பெங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கொட்டப்பட்டு பாழடைந்த நிலையில் இருந்த குவாரி புதுபொலிவு பெற்றிருக்கிறது. அந்த பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மல்லிகாவாட், ஏரிகள் மற்றும் நிலப்பரப்புகளுக்கு புத்துயிர் ஊட்டும் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். 2019-ம் ஆண்டு பணியில் இருந்து விலகியவர் அந்த பணி அனுபவத்தை கொண்டு குப்பை கொட்டும் பகுதிகளை அடர்ந்த காடு களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பெங்களூருவின் புறநகர் பகுதியான எஸ். பிங்கிபுரா என்ற இடத்தில் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. அதனால் அந்த இடம் மிகப்பெரிய குப்பை கிடங்காக மாறிப்போனது. அங்கு கொட்டப்படும் ரசாயனங்கள் மூலம் நச்சு வாயுக்கள் வெளியாகி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

அதனை தடுக்கும் நோக்கத்தில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரக்கன்றுகளை முன்னெடுத்தார். தினமும் 1,000 முதல் 2,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர் முயற்சியின் விளைவாக, சுமார் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக நிர்ணயித்து ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

மரக்கன்றுகளை பராமரிக்கவும், தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சவும் ஒரு குழுவும் பணியமர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆனந்த் மல்லிகாவாட் கூறுகையில், "சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, ஜப்பானின் மியாவாக்கி வன மாதிரியாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம். மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க ஆட்களை நியமித்துள்ளோம். இந்த இடத்தை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாது என்பதால், இதை காடாக மாற்றி, பெங்களூரு தெற்கில் பசுமை சூழ்ந்த இடமாகவும், சுத்தமான காற்றை வழங்கி நுரையீரலை பாதுகாக்கும் பகுதியாகவும் மாற்றுவதற்காக மக்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறோம்'' என்கிறார்.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குவாரியில் மழைநீர் நிரம்பியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக ஆனந்திடம் கூறியுள்ளனர். பெங்களூரு நகரின் கழிவுகள் இங்கு கொட்டப்படுவது வழக்கம்.

இதனால் தண்ணீரில் பரவும் நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனந்த் மற்றும் அவரது குழுவினரின் முயற்சியால் அந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்த பகுதியின் நிலைமை மாறத்தொடங்கியுள்ளது.


Next Story