மகளிர் வாழ்வை உயர்த்துபவர்
பெண்கள் நலனுக்காகவும், பெண் குழந்தைகள் கல்விக்காகவும் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் பல நல்ல உள்ளங்களில், ஒருவராக மிளிர்கிறார், ஜெயந்தி.
சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவரான இவர், 2009-ம் ஆண்டு முதல் பெண்கள் நலனுக்காகவும், 2016-ம் ஆண்டு முதல் பெண் குழந்தைகள் கல்விக்காகவும் பல வழிகளில் உழைத்துக்கொண்டிருக்கிறார். அதற்காக, ஷைன் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பையும் நடத்துவதுடன், அதன் மூலம் பல விழிப்புணர்வு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகிறார்.
அதில் ஒன்றாக, பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் உரிமை என்ற கருத்தை முன்னிறுத்தி, 2023 கல்லூரி மாணவிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட லோகோ உருவத்தை உருவாக்கி இருக்கிறார்.
அவருடன் சிறு நேர்காணல்....
* பெண்களுக்காக சேவையாற்றும் எண்ணம் தோன்றியது எப்படி?
சிறு வயதிலேயே திருமணமாகி, விதியின் விளையாட்டால் கணவரை இழந்ததால், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உணர முடிந்தது. குறிப்பாக சமூகத்தில் தனி ஒருத்தியாக போராடிக்கொண்டிருக்கும் பெண்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட இளம்பெண்களுக்கு, என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன்.
சின்னதாக தொடங்கிய முயற்சிகள் பெரியதாக மாறியவுடன், அதை சட்டப்பூர்வ சேவை அமைப்பாக மாற்றி, பல உதவிகளை செய்ய ஆரம்பித்தேன்.
* என்னென்ன உதவிகளை செய்கிறீர்கள்?
ஆரம்பத்தில் பெண்கள் நலனில் மட்டுமே அக்கறை காட்டினேன். குறிப்பாக, முறையான தொழில்பயிற்சிகளை வழங்கி, வங்கி கடன் பெற்று அவர்களை சிறுசிறு குழுக்களாக மாற்றி, அதன் மூலம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கினோம். டெய்லரிங் பயிற்சி, உணவகம் மற்றும் வீடுகளுக்கு நறுக்கிய காய்கறிகளை கொண்டு சேர்ப்பது, தண்ணீர் கேன் விற்பனை, மெடிக்கல் உருவாக்கம், வாகனப்பயிற்சி, அழகுக்கலை... இப்படி பலவிதமான தொழில்முயற்சிகளை மேற்கொண்டோம்.
2009-ம் ஆண்டு தொடங்கிய முயற்சி, இப்போது 750-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுக்களாக வளர்ந்திருக்கிறது.
* பெண்களோடு, குழந்தைகளுக்கான உதவிகளை செய்ய ஆரம்பித்தது எப்போது? ஏன்?
2016-ம் ஆண்டிற்கு பிறகுதான், ஏழை குழந்தைகளுக்கான கல்விச் சேவைகளை வழங்க ஆரம்பித்தோம்.
கொத்தடிமை தொழிலாளர்கள், அவர்கள் குழந்தைகள் நலன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான், குழந்தைகளுக்கான கல்விச் சேவைகளை தொடங்கினோம். எங்களது முயற்சிகளுக்கு, ஐ.டி. நிறுவனங்களின் உதவியும் கிடைத்ததால், நிறைய ஏழை குழந்தைகள் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர். இதுவரை, 500 குழந்தைகள் எங்களது முயற்சியினால் கல்வி பயின்று வருகிறார்கள். மேலும் சென்னையில் ஏரிக்கரைகளில் வாழும் குழந்தைகளுக்கு, ஐ.டி. நிறுவனங்களின் உதவியுடன் கணினி பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இரவு உணவு மற்றும் பேரிடர்கால உதவிகளையும் செய்கிறோம்.
* பெண்கள் தினத்திற்காக மேற்கொண்ட முயற்சி பற்றி கூறுங்கள்?
பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் உரிமையை நிலைநாட்டும் கருத்தை வலியுறுத்தி, பிரமாண்ட இலச்சினையை (லோகோ) உருவாக்க முயற்சியினை மேற்கொண்டோம். சென்னை பெரம்பூரில் உள்ள கல்லூரி மாணவிகளை ஒருங்கிணைத்து, உமன் எம்பவர்மெண்ட் லோகோவை, 2023 கல்லூரி பெண்களை கொண்டு உருவாக்கினோம்.
பெண்கள் தினத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றாலும், இதன் கருத்து ஒன்றுதான். அது பெண்களை அவர்களது வழியிலேயே சுதந்திரமாக செயல்பட வழிகாட்டுவதாகும்.
* உங்களது அடுத்தக்கட்ட முயற்சி என்ன?
பெண்கள் முன்னேற்றத்திற்காகவே, பிரத்யேக வங்கி தொடங்கும் ஆசை இருக்கிறது. அதற்காகவே பல காலங்களாக முயன்று வருகிறேன். அது முழுக்க முழுக்க பெண் களுக்கான வங்கியாக செயல்படும். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை முன்னேற்றும் நோக்கிலும், அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தி விடும் வகையிலும் செயல்படும்.