தேனீக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதுமை தோட்டம்
மாடித்தோட்டம் அமைப்பவர்கள் மொட்டை மாடியில் திறந்த வெளியில் வளர்க்கப்படும் செடிகளுக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியமானதாகிறது. இல்லாவிட்டால் நேரடி சூரிய ஒளியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் செடிகள் பாதிப்படைந்துவிடும்.
மாடித் தோட்ட செடிகளை பாதுகாக்க மாற்று வழிமுறைகளை யோசித்தவர் பேஷன் புரூட் செடியை வளர்த்து, அதனை தேனீக்களுக்கு புகலிடமாகவும் மாற்றிவிட்டார். இதனால் மகரந்த சேர்க்கை துரிதமாக நடைபெற்று பேஷன் பழங் களின் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு மற்ற செடிகளும் அபரித விளைச்சலை கொடுத்துள்ளன.
இந்த மாடி தோட்ட மாற்று முறை திட்டத்தை செயல்படுத்தி இருப்பவர் சேத்தன் சூரன்ஜி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் தோட்டக்கலை ஆர்வலர். வீட்டில் மாடித்தோட்டம் அமைத்திருப்பவர், அதிக சூரிய ஒளிக்கதிர் வீச்சு களில் இருந்து செடிகளை பாதுகாக்க முடிவு செய்தார். மாடியின் நான்கு புறமும் இரும்பு கம்பிகளை நிறுவி தகர கூரை பொருத்துவதுதான் அவருடைய முதல் திட்டமாக இருந்தது. எனினும் அதில் அவருக்கு விருப்பம் இல்லை.
மாற்று தீர்வை நாடியவருக்கு படர் செடிகளை வளர்க்கும் யோசனை உதித்தது. அந்த செடிகளை பசுமை போர்வையாக படரும்படி வளர்த்து மற்ற செடிகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க முடிவு செய்தார். படர் செடி வகைகளில் எந்த செடியை தேர்ந்தெடுப்பது என்பதிலும் சேத்தன் சூரன்ஜிக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த செடியும் சூரிய வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதால் தீவிரமாக கள ஆய்வு செய்தார்.
இறுதியில் பேஷன் புரூட் செடி வளர்வதற்கு வெப்பமான கால நிலை தேவை என்பதை அறிந்தார். அதனை மாடி தோட்டத்தில் படர் கொடி வகை செடியாக வளர்ப்பதற்கு பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து வளர்க்க தொடங்கினார். அதற்கு தக்க பலன் கிடைத்துள்ளது. பேஷன் புரூட் செடி நெருக்கமாக படர்ந்து மாடி தோட்டத்தையே பசுமை சூழலுக்கு மாற்றி விட்டது. இவரது வீட்டு மாடி தோட்டத்திற்குள் நுழைந்தால் குளிர்ச்சியான நந்தவனத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு எழுவதாக அருகில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.
சேத்தன் மாடி தோட்டத்தின் ஒரு பகுதியில் தேனீ வளர்ப்பு பெட்டிகளையும் பராமரித்து வருகிறார். 2017-ம் ஆண்டு முதல் தேனீ பெட்டியை அமைத்தார். அதில் வளர்க்கப்பட்ட தேனீக்கள் பேஷன் புரூட் செடியில் பூத்த பூக்களில் தேன் சேகரிப்பில் ஈடுபட்டன. அதனால் மகரந்த சேர்க்கை எளிதாக நடைபெற்றது. பேஷன் பழங் களின் உற்பத்தியும் அதிகரித்தது.
மற்ற செடிகளிலும் மகரந்த சேர்க்கை எளிதாக நடைபெற்றதால் மகசூல் அதிகரித்தது. இதையடுத்து மாடி தோட்டத்தில் தேனீ வளர்ப்புக்கு தனி இடத்தை ஒதுக்கி இருக்கிறார். அங்கு தேனீக்கள் பாதுகாப்பான சூழலில் உலா வருவதோடு தேன் சேகரிப்பை சுலபமாக மேற்கொள்கின்றன. அவற்றின் உதவியால் மாடித்தோட்ட செடிகளில் விளைச்சலும் பெருகியுள்ளது.
"பொதுவாக இந்தியாவில் அனைத்து பழ மரங்களும் கோடை மற்றும் குளிர்காலத்தில் பூக்கும். அந்த சமயத்தில் தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு ஏதுவான சூழல் நிலவும். பேஷன் பழம் மழைக்காலத்தில் செழிப்பாக வளரும் தன்மை கொண்டது.
அதனால் மழைக்காலத்திலும் தேனீக்கள் சிரமமின்றி தங்கள் வேலையை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகிறது. தேனீக்கள் பேஷன் பழத்தின் உற்பத்தியை மட்டும் அதிகரிக்கவில்லை. தோட்டத்தில் விளையும் பிற பொருட்களின் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது'' என்கிறார்.
சேத்தனின் மாடித்தோட்டம்-பேஷன் பழம்-தேனீ வளர்ப்பு பார்முலாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குஜராத்தின் துதர்கேட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சேத்தனின் ஆலோசனையை பின்பற்றி செடி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.