நீண்ட வேலை நேரம் ஏற்படுத்தும் பாதிப்புகள்


நீண்ட வேலை நேரம் ஏற்படுத்தும் பாதிப்புகள்
x

ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது.

காலையில் தேநீர் தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுப்பது முதல் இரவில் உணவு சமைத்து பரிமாறுவது வரை ஓய்வில்லாமல் உழைக்கும் சுபாவம் பெண் களுக்கு உண்டு. அப்படி அதிக நேரம் வேலை செய்யும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். சற்று நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் பெண்கள் தங்கள் உடல் நலனையும், மன நலனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

சோர்வு:

உணவை தவிர்ப்பது, போதுமான தூக்கம் இல் லாதது, தண்ணீர் குடிக்காதது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் சோர்வு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து பிஸியாக இருந்தாலோ, நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருந்தாலோ ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குறைவான நேரமே தூங்குகிறார்கள். முழு உடல் ஆற்றலையும் தங்களின் வேலை களுக்கு செலவிடுகிறார்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலத்தில் அலட்சியம் கொள்வது நீரிழிவு நோய், தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் பிரச்சினைகள்:

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. மாதவிடாய் காலங்களில், கடுமையான தசை பிடிப்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் பி.சி.ஓ.டி. எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் மாதவிடாய் சுழற்சியின்போது முகப்பரு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

மன அழுத்தம்:

நீண்ட நேரம் வேலை செய்யும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை கையாளும் திறன் தன்னிடம் இல்லை என்பதை மூளை உணரும்போது, மன உளைச்சலை அனுபவிக்க வேண்டி யிருக்கும்.

இருப்பினும் நிதி சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும் திடீர் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பலவீனம்:

பொதுவாக பெண்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளாதபோது பலவீனத்தை எதிர்கொள்கின்றனர். இது ரத்த அழுத்தம், குறிக்கோள் மீது ஆர்வமின்மை, வேலையில் செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சமச்சீரான உணவு பழக்கத்தை கையாள்வது பற்றி உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது பல வீனத்தை குறைக்க உதவும்.

செரிமான பிரச்சினைகள்:

உணவுப்பழக்கம், பாக்டீரியா தொற்றுகள், உட்கொள்ளும் சில மருந்துகள் போன்றவற்றால் திடீர் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு பெண்ணும் தினமும் மூன்று வேளையும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடலாம்.

நீண்ட வேலை நேரத்தால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல்நல பிரச் சினைகளை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினமும் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். அதன் மூலம் வெளியாகும் எண்டோர்பின்கள் மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியையும் தக்க வைக்க உதவும். ஓய்வுக்கு போதிய நேரம் ஒதுக்குவதன் மூலமும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.


Next Story