நடிகவேள் எம்.ஆர்.ராதா


நடிகவேள் எம்.ஆர்.ராதா
x

இன்று (செப்டம்பர் 17-ந்தேதி) நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவுநாள்.

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் கொடிகட்டி பறந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர். ராதாவின் முகத்தோற்றமும் அதில் மாறும் விதவிதமான முகபாவனைகளும் சட்டென்று ஏறிஇறங்கும் கரகரத்த குரலும், வளைந்து, நெளியும் உடல்மொழியும் அவருக்கான தனி அடையாளமாக இருந்தன.

ரத்தக்கண்ணீர்

அவர் உச்சரித்த வசனங்கள் அவரை வித்தியாசப்படுத்தி காட்டின. ரத்தக்கண்ணீர் படத்தில் அவர் பேசிய 'அடியே காந்தா'! என்ற வசனம் வெகு பிரபலம்.

எம்.ஆர்.ராதா சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ராஜகோபால் நாயுடு -ராஜாம்மாள் தம்பதிகளின் மகனாக 1907-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பிறந்தார். நாடகத்தின் மீது கொண்ட பற்று காரணமாக பல்வேறு நாடக குழுக்களில் 'நடித்தார்'. பின்னர் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கினார்.

ரத்தக்கண்ணீர், தூக்குமேடை, லட்சுமிகாந்த பம்பாய் மெயில், நியூஸ் பேப்பர் போர்வாள் போன்ற நாடகங்களை நடத்தினார். ரத்தக்கண்ணீர் நாடகம் மிகவும் புகழ் பெற்றது. 3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது. 1937-ம் ஆண்டில் திரையுலகில் அடி எடுத்து வைத்த எம்.ஆர்.ராதா ஐந்து படங்களில் நடித்த பின்பு சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். நாடகமே போதும் என்று மேடை ஏறினார்.

12 ஆண்டுகள் கழித்து சிவாஜி உள்பட பலரும் சினிமாவுக்கு வாங்கண்ணே என்று வலியுறுத்தினர். அதன் பிறகு மீண்டும் ராதா திரைக்கு வந்தார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். இதற்கு எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா பல நிபந்தனைகளை விதித்தார்.

நாடகம் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். நந்தனார் படத்தில் கே.பி.சுந்தராம்பாள் வாங்கிய ஒரு லட்சத்துக்கு மேல் ரூ.25 ஆயிரம் சேர்த்துக் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறினார். இதற்கு பெருமாள் முதலியார் சம்மதித்தார்.

ஊருக்கு ஒரு லீடர்

வெளிநாட்டில் சென்று படித்தாலும், நம் நாட்டு நாகரிகம் கலாசார பண்பாடுகளை விட்டுவிடக்கூடாது என்று படம் அறிவுறுத்தியது. மிகப்பெரிய பணக்காரராக மோகன் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். படம் முழுக்க நக்கலடித்து, நையாண்டி வார்த்தைகள் பேசி எம்.ஆர்.ராதா நடிப்பு ராட்சசனாக மாறி வெளுத்து வாங்கி இருந்தார். ரத்தக்கண்ணீர் படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. இதில் வரும் வசனங்கள் ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றன.

உதாரணத்துக்கு சில, ராதா பொதுக்கூட்ட மேடையில் பேசும் காட்சியில், ஊருக்கு ஒரு லீடர் அவனவனுக்கு ஒரு கொள்கை! அவனவனுக்கு ஒரு பட்டினி பட்டாளம்! நான்சென்ஸ்.!.


ஒரு காட்சியில் தாயாரிடம், 'எப்படி சொல்றது உன்னை தாயார்ன்னு? அட்லீஸ்ட்' ஒரு கவுனாவது போட்டிருக்கியா?

'ஏண்டா! நான் ஏன் கவுன் போடணும்?:

நான் பாரினில் படித்ததுக்கு நீ தான் கவுன்போட்டுக்கணும்'.. யார் வந்து கேட்டாலும் மோகன் சாப்பிடுறான். மோகன் தூங்குகிறான்ன்னு சொல்ற.

'பின்னே எப்படி சொல்லணும்?'

'துரை தூங்கறார். துரை சாப்பிடுறார்ன்னு சொல்லு'

ஒரு காட்சியில் எஸ்.எஸ்.ஆர். ராதாவிடம், 'நாங்கள் ஜீவகாருண்ய கட்சியிலே சேர்ந்திருக்கோம்'

ராதா ; 'அடிசக்கை' ! திங்கறதுக்குகூட கட்சி வைச்சிருக்காங்களா'?,

ஆமா ! ஜீவகாருண்ய கட்சின்னா, என்ன தம்பி அர்த்தம்?

'உயிர்களை கொலை செய்யக்கூடாது'. 'நீங்க உயிர்களை கொல்றதே இல்லையா?' இல்லை.

'ஏம்பா !ராத்திரி மூட்டை பூச்சி கடிச்சா என்ன பண்ணுவீங்க'?

'உனக்கு உண்மையிலேயே கொழுப்பு தாம் பா!'

'இதெல்லாம் சொன்னா சோறு போடுறாங்களோ இல்லையோ எனக்கு வாய் சும்மா இருக்காது.

எஸ்.எஸ்.ஆர். ராதாவிடம், 'உனக்கு பார்த்திருக்கிற பெண் பெரிய இடமா?'

ராதா;ஆமா, 110 அடி உயரம்.'

மாமா.. மாப்பிளே

பெற்றால் தான் பிள்ளையா படத்தில், சரோஜாதேவியிடம், "நீ எல்லோரையும் பைத்தியமாக்குற;, நான் எல்லோரையும் முட்டாள் ஆக்குறேன் எப்படியோ நம்ம தொழில் நடக்குது''

பலே பாண்டியா படத்தில், எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் 'நீயே என்றும் உனக்கு நிகரானவன்' என்ற பாடல்பாடுவர். இருவரும் "மாமா...மாப்பிள்ளை.." என்றுபாடி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்..

எம்.ஆர்.ராதா எதற்கும் அஞ்சாதவர் ஒரு முறை அவர் நடத்திய நாடகத்துக்கு பெரியார் தலைமை தாங்கினார். இடைவேளை நேரத்தில் பெரியார் பேசினார். பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து இவர் பேச்சைக் கேட்க நாங்க காசு கொடுக்கவில்லை. நாடகத்தை போடு என்று கத்துகிறார். இதைக்கேட்டு மேக்கப் ரூமில் இருந்து வெளியே வந்த ராதா கத்தியவரைப் பார்த்து நாடகம் முடிந்து விட்டது. நீங்கள் போகலாம் இனி இவர் தான் பேசுவார் என்றாரே பார்க்கலாம். பெரியாரே அசந்துவிட்டார். ராதாவின் சில நாடகங்கள் தடை செய்யப்பட்டு இருந்தன தடையை மீறி நாடகத்தை நடத்தியதால் கைதானார்.

தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆருடன், இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். அவற்றில் பாகப்பிரிவினை, பாலும் பழமும், பலே பாண்டியா, தாய் சொல்லை தட்டாதே, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஒரே ஆண்டில் ராதா 22 படங்கள் நடித்து சாதனை புரிந்தார். மொத்தம் 120 படங்களில் நடித்தார். கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை எம்..ஆர்.ராதா தான் வழங்கினார். நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் என்று கலைஞர் புகழாரம் சூட்டியுள்ளார்.

விருது வாங்க மறுப்பு

எம்.ஆர். ராதா தான் நடித்த எந்த படத்தின் வெற்றி விழாக்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. காரணம் கேட்டால் வியாபார ரீதியாக வசூலை குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறது. தவிர நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவது இல்லையே என்றார்.

1966-ல் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதுக்கு எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாக இருந்தது. ஆனால் மொழி தெரியாத கவர்னர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே விருது வாங்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

புனித ஆடை

எம்.ஆர். ராதாவின் நாடகப்பணியை பாராட்டி, பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு புனித ஆடை போர்த்தி பாராட்டி பேசினார். அதற்கு பதில் அளித்த எம்.ஆர்.ராதா பேசும்போது, ஆடையில் புனிதமெல்லாம் கிடையாது என்பவன் நான். இருந்தாலும் இதை போர்த்துகிறவர் புனிதர். அதனால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறவும் பலத்த கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

எம்.ஜி.ஆரை சுட்டார்

1967 தேர்தலுக்கு முன் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த வழக்கில் இவருக்கு ஏழு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டு 1974-ல் விடுதலையானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். 17.9.1979 அன்று மஞ்சள் காமாலை நோயினால் திருச்சியில் காலமானார்.

எம்.ஆர்.ராதாவின் வாரிசுகள் ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.


Next Story