சதுரங்க ராணி..!


சதுரங்க ராணி..!
x

7 வயதே நிரம்பப்பெற்ற சர்வாணிகா, பல சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்ற அந்த கிராண்ட் மாஸ்டரை வெகு சுலபமாக வீழ்த்தினார்.

'சர்வாணிகா' என்ற பெயரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆம்..! மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றபோது, பார்வையாளராக போட்டி அரங்குக்குள் சென்று, தன்னுடைய குறும்புத்தனத்தால், பலரது கவனத்தை ஈர்த்தவர் அவர். அப்படி சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஒருவர், விளையாட்டாக சர்வாணிகாவை சதுரங்க போட்டி விளையாட அழைப்பு விடுக்க, அதை ஏற்று அவருடன் விளையாடினார் இந்த 7 வயது சிறுமி. அந்த ஆட்டம், எதிர்பார்த்தபடியே வெகுவிரைவாக முடிந்தது. ஆனால் முடிவு மட்டும், எதிர்பாராத விதமாய் அமைந்தது.

ஆம்...! 7 வயதே நிரம்பப்பெற்ற சர்வாணிகா, பல சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்ற அந்த கிராண்ட் மாஸ்டரை வெகு சுலபமாக வீழ்த்தினார். இது அந்நாளின் மிக முக்கிய செய்தியானது.

இந்த செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள், மாநில, தேசிய, ஆசிய போட்டிகளில் பல சாதனைகளை படைத்து, அடிக்கடி 'வைரல்' ஆக வலம் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்கூட, இலங்கையில் ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில், கலந்து கொண்ட 23 போட்டிகளிலும் 23 வெற்றிகளை பதிவு செய்து, 6 தங்கப் பதக்கம், 6 கோப்பைகளை வென்று, பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இதுமட்டுமா...? கடந்த ஒரு வருடத்தில் இருமுறை தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஆசிய சதுரங்க போட்டியில் தங்கமும் வென்று புதிய சாதனை படைத்தார்.

சதுரங்க உலகில், குட்டி ராணியாக உலா வரும் சர்வாணிகாவை நேரில் சந்தித்து பேசினோம்.

படபட பதில்களாலும், துறுதுறு செயல்களாலும், நமக்கு 'செக்' வைத்துக்கொண்டே இருந்தார். அவை இதோ...

* பாப்பாவிற்கு எந்த ஊர்?

அரியலூர் மாவட்டம், ஜெமீன் உடையார் பாளையம் தாலுகா எங்க சொந்த ஊர். அப்பா சரவணன், நெசவு வேலை செய்கிறார். அம்மா அன்புரோஜா, குடும்ப தலைவியாக குடும்பத்தையும், எங்களையும் கவனித்து கொள்கிறார். நான், அருகில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் (உடையார்பாளையம் மேற்கு) 2-ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு, ரட்ஷிகா என்ற அக்கா உண்டு. அவர், 10-ம் வகுப்பு படிக்கிறார்.

* குட்டி பாப்பாவிற்கு, சதுரங்கம் எப்படி அறிமுகமானது?

என்னுடைய அக்கா ரட்ஷிகாதான், சதுரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். பள்ளியில் அவர் கற்றுக்கொண்ட சதுரங்க விளையாட்டை, வீட்டில் என்னுடன் விளையாட தொடங்கினார். அப்படி 4 வயதிலேயே நான் சதுரங்கம் விளையாட கற்றுக்கொண்டேன். அக்காவிடம் கற்றுக்கொண்டதுபோக, விளையாட்டு விளக்க புத்தகம் மூலமாகவும், சதுரங்கம் பற்றி படிச்சி தெரிந்து கொண்டேன்.

* சதுரங்கம் விளையாட பிடித்திருக்கிறதா?

இப்போ, எனக்கு 7 வயதாகிறது. நான் 4 வயசுல இருந்தே, 'செஸ்' மட்டும்தான் விளையாடுறேன். மற்றபடி, வேற விளையாட்டுகளில் 'இன்ட்ரெஸ்ட்' வரலை. மற்ற விளையாட்டுகள் விளையாடவும் தெரியாது. நானும், சதுரங்கமும் அந்தளவிற்கு நெருக்கம்.

* செஸ் ஒலிம்பியாடில், கலக்கினீர்களாமே?

ஆமாம். கிராண்ட் மாஸ்டர்களின் விளையாட்டை பார்ப்பதற்காக சென்றபோதுதான், டிங் வெய்ன் என்ற கிராண்ட் மாஸ்டருடன், 'பிரெண்ட்லி மேட்ச்' விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் ஜாலியாக விளையாடி, அந்த மேட்சை ஜெயித்துவிட்டேன்.

* உங்களுடைய லட்சியம் என்ன?

மிக குறைந்த வயதிலேயே, 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம்' பெறுவதுதான், என்னுடைய லட்சியம். அதற்காகத்தான் உழைத்து வருகிறேன்.

* வேறு என்ன ஆசை இருக்கிறது?

நிறைய சதுரங்க போட்டிகளில் வென்று, எங்களுடைய வீட்டை, 'கான்கிரீட்' தளம் கொண்ட மாடி வீடாக மாற்ற வேண்டும். மாடியில் நின்று கொண்டு, ஊரின் அழகை ரசிக்க வேண்டும். கூடவே சொந்த கார் வாங்கி, அப்பா-அம்மா-அக்காவோடு ஜாலியாக உலா வர வேண்டும். இவ்வளவுதான், என்னுடைய ஆசைகள். இன்று இல்லையென்றாலும், என்றாவது ஒருநாள் இதை நிறைவேற்றிக் காட்டுவேன்.

* செஸ் விளையாட்டில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். உங்களுடைய ஸ்டைல் எது?

ஆட்டத்தை, வெகு விரைவாக முடிப்பவர்களும் உண்டு. அதேபோல, 'ஸ்டாட்டர்ஜி' எனப்படும் வியூகம் அமைத்து, வெகுநேரம் விளையாடுபவர்களும் உண்டு. இதில் நான் இரண்டாவது ரகம். எனக்கு, சதுரங்க விளையாட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் அனுபவித்து விளையாட பிடிக்கும். வெகுவிரைவாக ஆட்டத்தை முடிக்க ஆசைப்படுவதில்லை.

* நிறைய வெற்றிகளை பதிவு செய்திருக்கிறீர்கள். இதில் சுவாரசியமானது எது?

சமீபத்தில், இலங்கையில் நடந்து முடிந்த ஆசிய போட்டியில், 8 மற்றும் 9-வது ரவுண்ட் போட்டிகள் மிகவும் கடினமாக ஆரம்பித்தன. அந்த போட்டி, மிக கடினமாகவும், வெகுநேரம் நீடிக்கும் எனவும் நினைத்தேன். ஆனால் பாதியிலேயே ஆட்டம் என் வசமானது. ரொம்ப சுலபமாக வெற்றி பெற்றேன்.

* யாரிடம் பயிற்சி பெறுகிறீர்கள்?

ஆரம்பத்தில் அரியலூரில் இருக்கும் சசிகுமார் என்ற மாஸ்டரிடம் பயிற்சி பெற்றேன். அவரை தொடர்ந்து, மதுரை கோல்டன் நைட்ஸ் அகாடெமியின் உமாமகேஷ்வரன் மற்றும் எஸ்.எஸ்.மணிகண்டன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றேன். இப்போது சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் இருக்கும் ஹட்சன் அகாடெமியில் விஷ்ணு பிரசன்னா மற்றும் கணேஷ் ஆகியோரிடம் சதுரங்க பயிற்சி பெறுகிறேன். இவர்களது சிறப்பான வழிகாட்டுதலால், நிறைய போட்டிகளை புதுப்புது சாதனைகளுடன் வென்றிருக்கிறேன்.

* உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள் பற்றி கூறுங்கள்?

ஆசிய பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் இலங்கையில் நடைபெற்றதால், இலங்கை பிரதமரிடம் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பெற்றேன். சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் என்னை கொண்டாடி மகிழ்ந்தனர். எங்க ஊருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தபோது, என்னை பற்றி பெருமையாக பேசி பாராட்டினார். இவர்களுக்கு அடுத்தபடியாக, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியின் பாராட்டுகளும், ஊக்கமும் எனக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. ஊர் மக்களும், ஒருசில அறக்கட்டளைகளும் உதவுகிறார்கள்.

* வெற்றிகளை தவறவிட்டு, வருத்தப்பட்டது உண்டா?

இல்லை. ஆனால் பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தும், அதில் பங்கேற்க முடியாமல் அம்மாவிடம் கோபித்து கொண்டிருக்கிறேன்.

அம்மாவும், அப்பாவும் பல சிரமங்களுக்கு மத்தியில்தான், பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து செல்கிறார்கள். பலமுறை, போட்டிக்கு செல்வதே, ரொம்பவும் சஸ்பென்ஸாக இருக்கும். விமான டிக்கெட் செலவு, ஓட்டல் தங்கும் செலவு... இப்படி பல விஷயங்களுக்கு பணம் இருக்காது. கடைசி நேரத்தில்தான், நாங்கள் கிளம்புவோம். அதுவும் யாராவது உதவினால் மட்டுமே பங்கேற்போம்.

பலமுறை, போட்டிக்கு செல்வதே, ரொம்பவும் சஸ்பென்ஸாக இருக்கும். விமான டிக்கெட் செலவு, ஓட்டல் தங்கும் செலவு... இப்படி பல விஷயங்களுக்கு பணம் இருக்காது. கடைசி நேரத்தில்தான், நாங்கள் கிளம்புவோம்.

சதுரங்க ராணியின் வெற்றி படிகள்..!

* '4 வயதில்' முதல் போட்டி

சோழமண்டல அளவிலான இந்த போட்டி 7 வயதிற்கு உட்பட்டோருக்கானது.

3-ம் பரிசு

* '6 வயதில்' மாநில போட்டி

சென்னை தாம்பரம் பகுதியில் நடந்தது. இது 8 வயதிற்குட்பட்டோருக்கானது.

இதில் 2-ம் பரிசு வென்றார்.

* 6 வயதில் 'தேசிய அளவிலான போட்டி'யில் பங்கேற்பு

ஆந்திராவில் நடந்த போட்டியில் தேசிய அளவில் 4-ம் இடம் பிடித்தார். 8 வயதிற்கு உட்பட்ட போட்டி.

* 7 வயதில் 'ஆசிய போட்டி'

இலங்கையில் நடந்த பிலிட்ஸ், ராபிட் மற்றும் ஸ்டாண்டர்ட் பிரிவிலான 23 போட்டிகளிலும் 23 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். இப்படி ஒருவர், 100 சதவிகித வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதேபோல, மூன்று பிரிவிலும், முதல் இடம் பிடித்து ஹாட்ரிக் தங்கம் வென்றதும், புதிய சாதனையாக பதிவாகி இருக்கிறது. வருங்காலத்தில், இப்படி ஒரு நிகழ்வு நடப்பது அரிது என்கிறார்கள்.


Next Story