10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுமார் 11 ஆயிரம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள்


10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுமார் 11 ஆயிரம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
x

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்விற்கு தயாராவது குறித்து அனைத்து தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது.

ஸ்டாப் செலக்சன் கமிஷன், பல் நோக்கு பணியாளர் (Multi-Tasking (Non-Technical Staff) மற்றும் ஹவில்தார் பணிக்காலி இடங்களுக்குரிய தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 11,409 பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக, இந்தப்போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இப்பணிக்காலியிடத்திற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும்.

வயது வரம்பினைப் பொறுத்தவரை, 1.1.2023 அன்றுள்ளபடி, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதாவது 1.1.2005-க்கு பிறகு பிறந்தவராக இருக்கக்கூடாது. அதிகபட்ச வயது 25. ஹவில்தார் பணிக்காலியிடத்திற்கு அதிகபட்ச வயது 27 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும், பகிரங்க போட்டியாளர்களுக்கு (open competition) 10 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. விதவைகள், விவாகரத்தான பெண்களுக்கு உச்சபட்ச வயது வரம்பு 35 ஆகும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.2.2023.

இணையதளத்தின் வாயிலாகவே அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி: http://ssc.nic.in.

கடைசி தேதி வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்கும் போது சிரமம் ஏற்படும். தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஓ.பி.சி, ஓ.சி. மற்றும் ஓ.சி. பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் (OC-EWS) வகுப்பைச் சார்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100/- (நூறு ரூபாய் மட்டும்) செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தமிழில் தேர்வு

இந்தத்தேர்வு கணினி வழியில் தமிழில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஹவில்தார் பணியிடத்திற்கு மட்டும் எழுத்து தேர்வுடன் உடற்தகுதி தேர்வும் நடைபெறும். எழுத்துத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும்.

வினாக்கள் எண்ணிக்கை மதிப்பெண்கள் கால அளவு

கணிதத்திறன்-20 60 45 நிமிடங்கள்

ரீசனிங் பகுதி-20 60

கணிதம் மற்றும் ரீசனிங் உள்ளடக்கிய இப்பகுதிக்கு நெகடிவ் மதிப்பெண் கிடையாது.

இரண்டாம் அமர்வு

வினாக்கள் எண்ணிக்கை மதிப்பெண்கள் கால அளவு

பொது அறிவு-25 75 45 நிமிடங்கள்

ஆங்கிலம்-25 75

இப்பகுதிக்கு நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. தவறாக விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

முதல் அமர்வில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே, இரண்டாம் அமர்விற்குரிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். முதல் அமர்வில் பெறவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

ஓ.சி. பிரிவினர்-36 மதிப்பெண்களும், ஓ.பி.சி/பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் - 30 மதிப்பெண்களும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விதவைகள் போன்ற பிரிவினர் 24 மதிப்பெண்களும் குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாம் அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். ஹவில்தார் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகிய இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். ஒருவர் ஹவில்தார் பணியிடத்திற்கு, இரண்டாம் அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஹவில்தார் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற ஒருவர், பல்நோக்கு பணியாளர் தேர்வு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை எனில், பல்நோக்கு பணியாளர் தேர்வு பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருப்பதால் பல்நோக்கு பணியாளர் பணியில் சேரலாம்.

நேரடி பயிற்சி வகுப்புகள்

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்விற்கு தயாராவது குறித்து அனைத்து தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது. தேவையான புத்தகங்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்களில் உள்ளன. இத்தேர்விற்கு தேவையான பாடக்குறிப்புகள், மாதிரித் தேர்வுகள் போன்றவை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்திலும், இந்த இணையதளத்தின் யூ டியூப் சேனலிலும் எவ்வித கட்டணமும் இன்றி கிடைக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

சென்னையிலுள்ள தமிழ்நாடு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி (Anna Administrative Staff College) இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை யூ டியூப் சேனல் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்துகிறது. மேலும் பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான 4 பாடப்பகுதிகளுக்குமான வகுப்புகள் பதிவாகியுள்ள சுமார் 100 வீடியோக்கள் உள்ளன. மேலும், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

எனவே, நம்பிக்கையுடன் விண்ணப்பியுங்கள். இரண்டரை மாதம் கடுமையாக உழையுங்கள். நிச்சயம் வேலை கிடைக்கும்.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Next Story