கேரம் விளையாட்டில் பதக்கங்கள் வெல்லும் மூதாட்டி
கேரம் விளையாட்டில் இளம் வயதினருடன் போட்டா போட்டி போட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கிறார், பாட்டிட் ஆஜி.
கேரம் போர்டு விளையாட்டில் இலக்குத்தான் முக்கியமானது. கைவிரல்களை லாவகமாக வைத்து காய்களை குழிக்குள் தள்ளுவதற்கு பிரத்யேக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி நேர்த்தியாக இலக்கை நோக்கி காய்களை தள்ளுவது இளம் வயதினருக்கே சவாலானது.
ஏனெனில் ஜெயித்தாக வேண்டும் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்போது காய்களை சாதுரியமாக கையாள்வது சவாலானது. கைவிரல்களில் நடுக்கம் குடிகொண்டால் காய்களை குழிக்குள் தள்ளுவது சிரமமாகிவிடும். இளம் வயதினருக்கே கைகளில் நடுக்கம் ஏற்படும் என்றால் வயதானவர்களை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.
அவர்களுக்கு கைகளில் நடுக்கம் ஏற்படுவது இயல்பானது. அதையும் பொருட்படுத்தாமல் கேரம் விளையாட்டில் இளம் வயதினருடன் போட்டா போட்டி போட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கிறார், பாட்டிட் ஆஜி.
83 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். வயதில் முதுமை வெளிப்பட்டாலும் கைகள் இளமை துடிப்புடன் கேரம் போர்டில் காய்களை நகர்த்துகின்றன. இளம் வயதினருடன் கேரம் போர்டு விளையாடும் வழக்கத்தை கொண்டவர், அவர்களை ஜெயித்து தன்னை தேர்ந்த கேரம் விளையாட்டு வீரராக அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டார்.
சமீபத்தில் புனேவில் நடந்த கேரம் போட்டி தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பங்கேற்று வெற்றிவாகை சூடி இருக்கிறார். அதுவும் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தி இருப்பதுதான் சிறப்பம்சம். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இளம் கேரம்போர்டு வீரர்களுடன் விளையாடி பயிற்சி பெற்றிருக்கிறார். அந்த பயிற்சி அவருக்கு போட்டியை எளிதாக வெல்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
பாட்டிட் ஆஜியின் பேரன், இவர் அபாரமாக கேரம் விளையாடும் காட்சியை சமூக வலைத்தளத்தில் பகிர, ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். 83 வயதிலும் கேரம் விளையாட்டில் உறுதியாகவும், நேர்த்தியாகவும் மூதாட்டி ஆஜி, காய்களை நகர்த்தி ஆச்சரியப்பட வைக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டுகிறார்கள்.
மூதாட்டி காய்களை கணிக்கும் முறையும், நகர்த்தும் முறையும் வியப்பை ஏற்படுத்துத்துவதாக சக போட்டியாளர்களும் கூறுகிறார்கள்.