ஆளுமை திறன் வளர்க்கும் இளம்பெண்
‘பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட்’ எனப்படும் ஆளுமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார், அபிநயா.
'பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட்' எனப்படும் ஆளுமை திறன் வளர்ப்பு பெரியவர்கள்-சிறியவர்கள் பாகுபாடின்றி, இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. பள்ளி-கல்லூரியில் தனித்துவமாக விளங்க, நேர்காணலில் பிரகாசமாக ஜொலிக்க, அலுவலகத்தில் முதன்மையானவராக திகழ, ஆளுமை திறன் வளர்ச்சி அவசியம். இதை முன்னிறுத்தி, பலவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார், அபிநயா.
திருச்சியை சேர்ந்தவரான இவர், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருக்கிறார். அத்துடன் விமான பணிப்பெண் பயிற்சி, பேஷன் டிசைனிங், கைவினை கலை சம்பந்தமான படிப்புகளையும் முடித்திருக்கிறார். ஓவிய கலை, உடை வடிவமைப்பு, பரதநாட்டியம், மாடலிங் துறை... இப்படி பல துறைகளில் கவனம் செலுத்தினாலும், இவரது முழு கவனமும் ஆளுமைதிறன் வளர்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலேயே இருக்கிறது. அதுபற்றி அவர் பகிர்ந்து கொள்கிறார்.
''எனக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே, பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் விஷயங்களில் ஆர்வம் அதிகம். இருப்பினும், ஏரோநாட்டிக்கல் படிப்பை முடித்தபிறகு, ஆளுமை வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். நம்மை மெருகேற்றும் ஆளுமை வளர்ச்சிதான், சமூகத்தில் நமக்கான தனி அடையாளத்தை உண்டாக்கும். இதை உணர்ந்த பிறகு, ஆளுமை திறனை வளர்க்கும் அம்சங்களில், என்னை மெருக்கேற்ற தொடங்கினேன்'' என்பவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் சம்பந்தமான தகவல்களை இளைஞர்-இளம் பெண்களிடம் கொண்டு சேர்க்கிறார்.
''ஆளுமை வளர்ச்சி என்பது, வெறும் உடை நாகரிகத்துடன் நின்றுவிடாது. உடை, நடை, தோற்றப் பொலிவு, மற்ற நபர்களை அணுகும் விதம், மற்றவர்கள் முன்பு நாகரிகமாக நடந்து கொள்ளும் விதம்... இப்படி நிறைய இருக்கிறது. ஆனால் இக்கால இளைஞர்கள்-இளம் பெண்கள் இதில் கவனம் செலுத்துவது இல்லை. கிடைக்கும் வேலைகளில், தங்களை பொருத்திக்கொள்கிறார்களே தவிர தங்களுக்கு ஏற்ற வேலைகளை யாரும் தேடுவதில்லை. அப்படி உங்களுக்கு ஏற்ற வேலைகளை தேட, நிச்சயம் ஆளுமை வளர்ச்சி தேவைப்படும்'' என்பவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக, நிறைய பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். நேர்காணலுக்கு எப்படி தயாராவது, எந்த மாதிரியான உடை அணிவது, தேர்வாளர்களை எப்படி எதிர்கொள்வது, கைகுலுக்கும் முறைகள்... என எல்லா தகவல்களையும், இலவச குறிப்புகளாக வெளியிட்டு நிறைய ரசிகர்-ரசிகை பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
''ஆண்களை விட பெண்களுக்கு, ஆளுமை வளர்ச்சி மிக அவசியம். ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகில் எப்படி நாகரிகமாக உடை அணிவது, எத்தகைய பண்புகளுடன் நடந்து கொள்வது, பொது இடத்தில் ஆண்களுடன் எப்படி பேசி பழகுவது, சக ஊழியர்களுடனான நட்பு எப்படி இருக்க வேண்டும், 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் எதிர்பாலினத்தவர்கள் பற்றிய விஷயங்களை உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகம் உருவாகும்'' என்பவர், அப்படி ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பல முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
ஆளுமை திறனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆன்லைன் கலந்துரையாடல்கள்.... என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
''கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போது பள்ளிக்குழந்தைகளின் மனதில் 'ஆளுமை திறன்' வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை வளர்த்து வருகிறேன். அது அவர்களது வாழ்க்கை முறையாக மாறும்போது, இயல்பானவர்களை விட சிறப்பானவர்களாக தெரிவார்கள். இதற்காகவே, சிறு குழந்தைகளிடம், பெர்சனாலிட்டியை டெவலெப் செய்ய ஆசைப்படுகிறேன்'' என்றவர், பள்ளிகளின் துணையோடு, நிறைய இலவச வகுப்புகளை நடத்துகிறார். அதில் குழந்தைகளை மேடையில் ஏற்றிவிட்டு, சிறுவயதிலேயே மேடை பயத்தை விரட்ட, முயற்சித்திருக்கிறார்.
''எப்படி நடப்பது, எப்படி அமர்வது, எப்படி பேசுவது, எத்தகைய முகபாவனைகளை செய்வது, திரளான கூட்டத்திற்கு முன்பு எப்படி பயமின்றி பேசுவது, கூட்டத்தை எப்படி கையாள்வது போன்ற எல்லா விஷயங்களையும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதினால், அவர்கள் சமூகத்தையும், நேர்காணல் அணுகுமுறையையும் கையாள பயிற்சி பெறுகிறார்கள். இந்த பழக்கம், அவர்களது ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். அவர்களை திறமையானவர்களாக மாற்றும்'' என்றவர், சிறந்த கலைப்படைப்பாளியும் கூட. அதனால் ஆளுமை திறன் வளர்ச்சி பயிற்சிகளுடன், கலை ஆர்வம் நிறைந்த குழந்தைகளுக்கு பென்சில் ஆர்ட், பாட்டில் ஆர்ட், போர்ட்டரைட் ஓவியம் வரையும் பயிற்சிகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
''என்னுடைய இலக்கு ஒன்றுதான். பெண்களை, பெண் குழந்தைகளை திறமைசாலிகளாக மாற்றுவது. அவர்களை, சமூக பார்வையில் சிறப்பானவர்களாக மாற்றுவது. அதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறேன். புதுப்புது பயிற்சிகளை முடித்துக்கொண்டு என்னை நானே புதுப்பித்து கொள்கிறேன். என்னுடைய முயற்சிகளுக்கு பெற்றோர் பக்கபலமாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான், அவர்கள் எனக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தில்தான், எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன்'' என்றவர், மாநில அளவிலான விருது நிகழ்ச்சிகளில், பல விருதுகளை வென்றிருக்கிறார்.