கங்கை கொண்ட ேசாழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: கஜினி முகமதுடன் சோழப்படை மோதியதா?
கஜினி முகமது இந்தியா மீது படையெடுத்து வந்தபோது உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவைத் தாக்கி ஏராளமான பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து வாரிச் சுருட்டிச் சென்றார்.
காரணம் கஜினி முகமது இந்தியா மீது ஒன்றல்ல இரண்டல்ல அடுத்தடுத்து 17 முறை படையெடுத்து வந்து இங்குள்ள பல கோவில்களைச் சூறையாடி கோடிக்கணக்கான செல்வங்களை அள்ளிச்சென்றார் என்கிறது வரலாறு.
தற்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகருக்குத் தெற்கே உள்ள நகரம் கஜினி. அதன் மன்னராக கி.பி.998 முதல் 1130-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் மகுமூது இப்னு சபுக்தசின். 'கஜினி' என்ற பகுதியின் மன்னர் என்பதால் அவர் 'கஜினி முகமது' என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள பல கோவில்களில் ஏராளமான தங்க நகைகளும் வைரங்களும் வைடூரியங்களும் பாதுகாப்பு இல்லாமல் குவிந்து கிடக்கின்றன என்பதை அறிந்த கஜினி முகமது அந்தச் செல்வங்களைக் கைப்பற்றவும் தனது நாட்டை இந்தியா வரை விரிவுபடுத்தவும் ஆசைப்பட்டு இந்தியாவுக்குப் படைகளுடன் புறப்பட்டு வந்தார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
இந்தியா மீது அவர் கி.பி.1001-ம் ஆண்டு முதல் 1026-ம் ஆண்டு வரை 17 முறை படையெடுத்தார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற முதல் போரிலேயே அவருக்கு ஏராளமான செல்வம் கிடைத்தது. இதனால் மேலும் ஆசைப்பட்ட கஜினி முகமது அடுத்தடுத்து பல முறை இந்தியா மீது போர் தொடுத்தார்.
ஒவ்வொரு முறையும் குதிரைப் படைகளுடன் வந்த கஜினி முகமது இந்தியாவில் ஒற்றுமை இல்லாமல் இருந்த மன்னர்களைப் போரில் வென்றார். அந்த நாடுகளில் இருந்த பொருள்களைக் கைப்பற்றி மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்றார்.
கஜினி முகமதுவின் தாக்குதல்கள் அனைத்தும் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் நடைபெற்றன.
அவர் இறுதியாக இந்தியா மீது படையெடுத்து வந்தது 1024-ம் ஆண்டு. அதே காலகட்டத்தில்தான் மன்னர் ராஜேந்திர சோழனின் படை கங்கையை நோக்கிச் சென்றது.
கஜினி முகமது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்திய அதே நேரம் சோழப்படைகள் இந்தியாவின் கிழக்குப் பகுதி கரையோரம் உள்ள நாடுகளை வென்று கங்கையை நோக்கிச் சென்று கொண்டு இருந்தன.
இரண்டு படைகளும் இந்தியாவின் வெவ்வேறு திசைகளில் ஒரே சமயம் பயணித்துக் கொண்டு இருந்தன என்றபோதிலும் அவர்கள் போர்க்களத்தில் சந்தித்துக் கொண்டார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.
அந்தக் கேள்விக்கு ஆதாரங்களுடன் கூடிய சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் இந்த இரண்டு படைகளிலும் உளவு பார்ப்பவர்கள் இருந்தார்கள்.
கஜினி முகமதுவின் படையில் இருந்த உளவாளிகள் "தென்னிந்தியாவில் இருந்து வந்த மிகப் பெரிய படை இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளை வென்று கங்கையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது" என்ற தகவலை கஜினியிடம் தெரிவித்து இருக்கலாம்.
அதேபோல இந்தியாவின் மேற்குப் பகுதியில் கஜினி முகமது செய்து வரும் தாக்குதல்கள் பற்றித் தங்கள் உளவாளிகள் மூலம் சோழப் படைகளும் அறிந்து இருக்க வாய்ப்பு உண்டு.
அப்படியான நேரத்தில் சோழப் படையுடன் மோத கஜினி முகமது விரும்பினாரா?
கஜினி முகமதின் படையெடுப்பை ஒடுக்க அவருடன் போர் செய்ய சோழப் படை முயற்சி செய்ததா?
இந்தக் கேள்விகளுக்கு வரலாற்றுப் பக்கங்களில் ஆதாரபூர்வமான விடை இல்லை.
கி.பி. 1018-1019-ம் ஆண்டில் கஜினி முகமது இந்தியா மீது படையெடுத்து வந்தபோது உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவைத் தாக்கி ஏராளமான பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து வாரிச் சுருட்டிச் சென்றார்.
அடுத்த முறை அவர் உத்தரபிரதேச மாநிலம் கன்னோசி மீது தாக்குதல் நடத்த வந்தார். அவரது வருகையைக் கேள்விப்பட்டதும் கூர்ச்சரப் பிரதிகார மன்னர் ராஜ்யபாலன் என்பவர் பயந்துபோய் நாட்டைவிட்டு ஓடிவிட்டார்.
மன்னர் இல்லாத தலைநகரை கஜினி முகமது படையினர் சூறையாடி அங்கு இருந்த செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.
இதை அறிந்த கன்னோசியின் அண்டை நாட்டு மன்னர்கள் அடுத்த முறை கஜினி முகமது படையெடுத்து வந்தால் அவரை அனைத்து மன்னர்களும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்பது என்று தீர்மானித்தார்கள்.
இந்தக் கூட்டணிக்கு சாந்தல நாட்டு மன்னர் வித்யாதரன் தலைமை தாங்கினார். அவருக்கு மாள்வா பகுதி மன்னரான போஜராஜன் சேதி நாட்டு மன்னரான காங்கேய வித்யா விக்கிரமாதித்தன் ஆகியோர் ஆதரவு அளித்தனர்.
அவர்கள் கோழைத்தனமாக நடந்து கொண்ட ராஜ்யபாலனைக் கொன்று அவரது மகனை மன்னராக நியமித்தார்கள்.
இந்திய மன்னர்கள் எதிர்பார்த்தது போலவே கஜினி முகமது மீண்டும் படையெடுத்து வந்தார்.
அப்போது மன்னர் வித்யாதரனுக்கு ஆதரவாக போஜராஜனும் போஜராஜனின் நண்பரான ராஜேந்திர சோழனின் படைகளும் காங்கேய வித்யா விக்கிரமாதித்தனும் கஜினி முகமதுவை எதிர்த்தார்கள் என்று 'தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்' என்ற நூலை எழுதிய வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை தெரிவித்து இருக்கிறார்.
குலேனூர் என்ற இடத்தில் உள்ள 1028-ம் ஆண்டு கல்வெட்டு போஜராஜனும் காங்கேய வித்யா விக்கிரமாதித்தனும் ராஜேந்திரனின் சோழப் படைகளுடன் சேர்ந்து ஒரு போரில் ஈடுபட்டதாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்டார்களா என்ற தகவல் இல்லை.
சோழப் படைகள் வடநாட்டு மன்னர்களுடன் சேர்ந்து கொண்டு தாக்குதல் நடத்திய காரணத்தால் கஜினி முகமது கன்னோசியைத் தாண்டி கங்கை சமவெளிக்குள் பிரவேசிக்க முடியாமல் குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்திற்குச் சென்று அந்த ஆலயத்தைக் கொள்ளையடித்து இடித்து சேதப்படுத்தினார் என்பது சிலரின் கருத்து.
இந்திய மன்னர்கள் அமைத்த கூட்டுப் படையின் ஆற்றல் காரணமாக கஜினி முகமது முன்னேற முடியவில்லை என்பது மட்டுமே வரலாறாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அந்தக் கூட்டுப் படையில் சோழப் படை வீரர்கள் இருந்தார்களா என்பதற்கு ஆதாரம் காணப்படவில்லை.
சோழர்கள் பற்றிய விரிவான வரலாற்றை எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் நூலிலும் வடநாட்டில் கஜினி முகமது படைகளுடன் சோழப் படைகள் மோதியதாக எந்தத் தகவலையும் காணமுடியவில்லை.
கஜினி முகமதுவின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பதுதான் என்றால் சோழப் படைகளை எதிர்கொண்டு தாக்குதல் நடத்துவதால் அவருக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. எனவே அவர் சோழப் படைகளுடன் மோத வேண்டும் என்று நினைத்து இருக்க வாய்ப்பு இல்லை.
சோழப் படைகளின் ஒரே லட்சியம் தங்கள் மன்னருக்காக கங்கை நீரைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்குப் பகுதிக்குச் சென்று கஜினி முகமதுவுடன் போர் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்று கருதப்படுகிறது.
ஆனாலும் கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலில் சோழர்களின் நண்பரான கன்னோசியைச் சார்ந்த காஹடவால அரசன் மதனபாலன் என்பவரின் கல்வெட்டு இடம்பெற்று இருப்பதால் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்னோசிக்கும் சோழப் படைகளுக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருந்தது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தினால் மட்டுமே சோழப் படை கஜினி முகமது படைகளுடன் போரில் ஈடுபட்டதா என்பதற்குப் பதில் கிடைக்கும். அதுவரை இது பற்றிய தகவல்கள் மர்மமாகவே நீடிக்கும்.
எப்படி இருந்தபோதிலும் ராஜேந்திர சோழன் படைகளின் கங்கைப் படையெடுப்பு முழு வெற்றி பெற்றது என்பதும் அவர்கள் கங்கை புனித நீரை தங்கக் குடங்களில் சேகரித்து மன்னர் ராஜேந்திரன் அமைத்த புதிய தலைநகருக்கு எடுத்து வந்தார்கள் என்பதும் பல ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
கங்கைப் படையெடுப்பின்போது பல நாடுகளை வென்றதற்கு மன்னர் ராஜேந்திர சோழனின் தரைப் படை ஆற்றலே முக்கிய காரணமாக அமைந்தது.
அதுபோல வங்கக் கடலில் நெடுந்தொலைவில் உள்ள கீழ்த்திசை நாடுகளின் மீது மன்னர் ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்றபோது அங்கே அவருக்குக் கிடைத்த மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது அப்போதைய மாபெரும் கப்பல் படை ஆகும்.
எனவே கீழ்த்திசை நாடுகள் மீது நடைபெற்ற போரைப் பார்க்கும் முன்னர் ராஜேந்திர சோழர் காலத்தில் கப்பல் படை எவ்வாறு இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
(வரலாறு வளரும்)
சோழப் படைகளின் ஒரே லட்சியம்
தங்கள் மன்னருக்காக கங்கை நீரைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்குப் பகுதிக்குச் சென்று கஜினி முகமதுவுடன் போர் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு.