கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - பிரமாண்ட தலைநகரும், கோவிலும், ஏரியும்
இன்று தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று செழிப்பாக இருக்கின்றன என்றால் அதற்கு மூல காரணம், சோழ மன்னர்களே.
அவர்கள் காலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வீராணம் ஏரி உள்பட ஏராளமான ஏரிகளும், குளங்களும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களாக விளங்கிக் கொண்டு இருக்கின்றன.
பாய்ந்து வரும் காவிரி ஆறு, வீணாகக் கடலில் கலந்துவிடுவதைத் தடுக்கும் வகையில், அந்த ஆற்றின் குறுக்கே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் கல்லணையைக் கட்டியதும் சோழப் பரம்பரையில் வந்த மன்னர் கரிகாலனே. அதிசய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கல்லணை, இன்றளவும் செயல்பாட்டில் இருக்கிறது.
தொலைநோக்குப் பார்வையுடன் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய இதுபோன்ற நீர்ப்பாசன திட்டங்கள் வியக்க வைக்கின்றன. சோழர்கள் காலத்திற்குப் பிறகு தற்போதுவரை தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரி, குளங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நீர்ப்பாசன திட்டத்தில் அதிக அக்கறை செலுத்திய சோழ மன்னர்களின் பரம்பரையில் வந்த மன்னர் ராஜேந்திர சோழன், தஞ்சைக்குப் பதிலாகப் புதிய தலைநகரை உருவாக்க நினைத்தபோது, அவருக்கு இருந்த ஒரே சிக்கல், தலைநகருக்காகத் தேந்தெடுக்கப்பட்ட புதிய இடம், வறண்ட பூமி என்பதுதான்.
புதிதாக உருவாக்கப்படும் தலைநகரில் வசிக்க இருப்பவர்களுக்கும், அங்கு விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கும், படைகளின் பயன்பாட்டுக்கும் அதிக அளவு நீர் தேவை. ஆனால், தேர்வு செய்யப்பட்ட இடம் வானம் பார்த்த பூமி. இந்த ஒரு குறையைச் சரி செய்ய மன்னர் ராஜேந்திரன் திட்டம் தீட்டினார். புதிதாக உருவாக்க இருக்கும் தலைநகருக்கு மேற்கேயும் அதிக நிலப்பரப்பு, பயன்படாமல் இருந்தது.அந்த இடத்தில் மிகப்பெரிய ஏரியை அமைத்தால், அங்கு இருந்து, வாய்க்கால்கள் மூலம் நகருக்குப் போதுமான தண்ணீரைக் கொண்டுவர முடியும் என்பதை மன்னர் ராஜேந்திரன் அறிந்தார்.
ஏரியை வெட்டினால் மட்டும் போதுமா? மழையை மட்டுமே நம்பியுள்ள பகுதியில் அமையும் அந்த ஏரிக்கு எவ்வாறு நீர் ஆதாரத்தை ஏற்படுத்துவது? அந்த இடத்தில் இருந்து 60 மைல் தொலைவில் கொள்ளிடம் ஆறு, வற்றாமல் ஓடிக்கொண்டு இருந்தது.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து 60 மைல் நீளம் அளவுக்குக் கால்வாய் வெட்டி, அதன் வழியாகத் தண்ணீர், புதிய ஏரிக்குக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்வதுதான் ஒரே வழி என்று ராஜேந்திரன் திட்டமிட்டார்.ஆனால், அந்தத் திட்டத்திலும் ஒரு சிக்கல் இருந்தது. ஏரி அமைய இருக்கும் பகுதி, கொள்ளிடம் ஆற்றைவிட மேடான இடம் ஆகும். கொள்ளிடத்தில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவது என்றால், கீழான பகுதியில் இருந்து மேடான பகுதிக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும்.இந்தச் சிக்கலை, தனது ஆட்சியில் உள்ள நிபுணர்களின் உதவியோடு தீர்த்து, கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் வரும் வகையில் கால்வாயை அமைத்தார், ராஜேந்திரன்.
புதிய தலைநகருக்கான இடத்தைத் தேர்வு செய்ததும், அங்கே மிகப் பெரிய அளவிலும், அனைத்து வசதிகளையும் கொண்ட தலைநகரை நிர்மாணிப்பதில் ராஜேந்திரன் தீவிர கவனம் செலுத்தினார்.தான் உருவாக்கும் தலைநகரில், தஞ்சைப் பெரிய கோவிலுக்கு இணையான மாபெரும் கோவிலைக் கட்ட வேண்டும் என்பதும் ராஜேந்திரனின் திட்டமாக இருந்தது.
புதிய தலைநகரையும், பிரமாண்டமான கோவிலையும், ஏரியையும் அமைக்க வேண்டும் என்பதில் ராஜேந்திரன் தீவிரம் காட்டிய சமயத்தில், சோழப்படைகள், சாளுக்கிய தேசத்தை வென்று, அங்கு இருந்து வட நாடு நோக்கிச் சென்று கொண்டு இருந்தன.
வடநாட்டுப் படையெடுப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் படைகள், நாட்டின் வடக்கே ஓடும் வற்றாத, புண்ணிய நதியான கங்கை வரை செல்ல வேண்டும் என்றும், அந்தப் படை வீரர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சோழ தேசத்திற்கு எடுத்து வர வேண்டும் என்றும் மன்னர் ராஜேந்திரன் விரும்பினார்.
புதிதாக அமைக்க இருக்கும் தலைநகர், அங்கே கட்டப்படும் சிவன் கோவில், தோண்டப்படும் புதிய ஏரி ஆகியவற்றில் கங்கை நீரைத் தெளித்து அந்த இடங்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பது மன்னர் ராஜேந்திர சோழனின் விருப்பமாக இருந்தது.மன்னரின் எண்ணத்தை அறிந்த சோழப்படைகள், வட நாட்டில் பல மன்னர்களை வென்று கங்கையை நோக்கிச் சென்றன.இதற்கிடையே தஞ்சையில் இருந்த வீரர்கள், சிற்பிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள், அங்கு இருந்து வரவழைக்கப்பட்டு புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நகரின் நீளம், அகலம் எவ்வாறு இருக்க வேண்டும்?, மன்னரின் அரண்மனை எந்தப் பகுதியில் அமைக்கப்பட வேண்டும்?, நகரின் எந்தப்பகுதியில் கோவில் கட்டப்பட வேண்டும்?, வணிகர்களுக்கான இடம், மக்கள் வசிக்கும் இடம், போர் வீரர்களுக்கான முகாம்கள், ஆயுத தயாரிப்புக் கூடங்கள் ஆகியவை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரத்தில் தேர்ந்தவர்கள் ஆராய்ந்து புதிய தலைநகரை உருவாக்கும் வேலையை மேற்கொண்டார்கள்.
அந்தக் காலகட்டத்தில், தஞ்சையில் ராஜேந்திரனின் தந்தை மன்னர் ராஜராஜன் கட்டிய ராஜராஜீஸ்வரம் என்ற பெரிய கோவில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துவிட்டது என்றாலும், கோவில் விமானத்தின் இரண்டாம் தளத்தில் 108 கரணச் சிற்பங்களைச் செதுக்கும் பணியும் மற்றும் சில சிற்ப வேலைகளும் முடிவடையாமல் இருந்தன.
அவற்றில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சிற்பிகள், அந்த வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு, புதிய தலைநகரில் கட்டப்படும் கோவில் சிற்பப் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
(இதன் காரணமாக தஞ்சைப் பெரிய கோவிலில் பல சிற்ப வேலைப்பாடுகள் முடிவடையாமல் இருப்பதை இப்போதும் பார்க்கலாம்)
புதிதாக அமைய இருக்கும் தலைநகருக்கு மேற்கே, 16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்ட, இதுவரை எங்கும் காணாத அளவிலான மிகப் பெரிய ஏரியை வெட்டும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றது. இந்தப் பணியை படை வீரர்களும் தொழிலாளர்களும் மேற்கொண்டனர்.
புதிய தலைநகரில், அரண்மனை உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்கள், மிகப்பெரிய கோவிலைக் கட்டுவது, 6 மைல் நீளம், 3 மைல் அகலம் கொண்ட பிரமாண்ட ஏரியைத் தோண்டி வாய்க்கால்கள் அமைப்பது ஆகிய அனைத்துப் பணிகளும் கி.பி.1029-ம் ஆண்டு நிறைவேற்றி முடிக்கப்பட்டன.
அப்போது சோழப்படைகள் கங்கையில் இருந்து புனித நீரைக் கொண்டு வந்தன. வடநாட்டில் வெற்றி கொண்ட மன்னர்களின் தலை மீது பொற்குடங்களில் கங்கை நீர் எடுத்து வரப்பட்டதாக செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட கங்கையின் புனித நீர், வேத மந்திரங்கள் முழங்க புதிதாகக் கட்டப்பட்ட கோவில் மீது ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தக் கோவில், "கங்கை கொண்ட சோழீச்சரம்" என்ற பெயரைப் பெற்றது.
கங்கை நீரின் மற்றொரு பகுதி, புதிய தலைநகர் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதனால் அந்த நகரம், "கங்கை கொண்ட சோழபுரம்" என்று ஆனது.
புதிதாகத் தோண்டப்பட்ட ஏரியில் கங்கை நீர் ஊற்றப்பட்டது. கங்கை நீரால் அங்கே வெற்றித் தூண் அமைக்கப்பட்டது என்பதைச் சூசகமாகக் குறிக்கும் வகையில், அந்த ஏரியில் ஜலஸ்தம்பம் நாட்டப்பட்டதாகத் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் கூறப்பட்டு இருக்கிறது. கங்கை நீர் ஊற்றப்பட்டதால் அந்த ஏரி, "சோழகங்கம்" என அழைக்கப்பட்டது.
மன்னர் ராஜேந்திர சோழன் பார்த்துப் பார்த்துக் கட்டிய புதிய தலைநகரம், கோவில், பிரமாண்ட ஏரி ஆகியவை எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டன? இதற்காக என்னென்ன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன? என்பவை வியப்பான தகவல்கள் ஆகும்.
வியப்பான வினோதம்...
தற்போதைய உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியை காஹடவால என்ற வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த நாட்டின் மன்னர் கோவிந்த சந்திரன் என்பவர், முதலாம் குலோத்துங்க சோழன் பற்றியும் கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் சிறப்பையும் கேள்விப்பட்டு, 1111-ம் ஆண்டு அங்கு இருந்து புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தார்.
மன்னர் கோவிந்த சந்திரனின் கல்வெட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சேதம் அடைந்த நிலையில் இருப்பதால், அதில் குறிப்பிடப்பட்ட அவரது வருகைக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
காஹடவால வம்சத்தினர் சூரிய வழிபாடு நடத்துபவர்கள். எனவே இந்த மன்னர் திருவிடைமருதூரில் உள்ள சூரியனார் கோவிலுக்கும் சென்றதாகத் தெரிகிறது.
வட இந்திய மன்னர் ஒருவரின் வருகைக்காக, சிறிய அளவில் இருந்த சூரியனார் கோவிலை மன்னர் குலோத்துங்க சோழன் விரிவுபடுத்திக் கட்டினார் என்பது வியப்பை அளிக்கிறது.
அவற்றைத் தொடர்ந்து பார்க்கலாம்.