மாற்றுத்திறனாளி குழந்தைகளை குஷிப்படுத்தும் 'விளையாட்டு பூங்கா'


மாற்றுத்திறனாளி குழந்தைகளை குஷிப்படுத்தும் விளையாட்டு பூங்கா
x

பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பிரமாண்டமாக பரந்து விரிந்திருக்கும் பூங்காக்கள் முதல் தெரு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பூங்காக்கள் வரை எல்லாவிதமான பூங்காக்களிலும் குழந்தைகளை கவரும் அம்சங்கள் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.

அதிலும் குழந்தைகள் விளையாடுவதற்கென்றே பிரத்யேக பகுதி அமைக்கப்பட்டிருக்கும். அங்கு ஊஞ்சல் முதல் சீசா வரை விதவிதமான விளையாட்டு சாதனங்கள் இடம் பிடித்திருக்கும். ஆனாலும் அவற்றை எல்லா குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகள், மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு சவுகரியமான அம்சங்கள் அதில் இருக்காது. அந்த குறையை போக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் முதல் முறையாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தை களுக்கான பிரத்யேக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மைய பகுதியில் பசுமையான மரங்கள் சூழ்ந்த அடர் வனமாக காட்சி அளிக்கும் கப்பன் பூங்காவில் சிறப்பு திறன், மாற்று திறன் கொண்ட குழந்தைகள் நலனுக்காக ரூ.3 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு பூங்கா பாதுகாப்பான பிசியோ தெரபிமையமாக செயல்படுவதுதான் சிறப்பம்சம். பல்வேறு வகையான குறைபாடு கொண்ட குழந்தைகள் இங்கு மகிழ்ச்சியாக விளையாடி பொழுதை போக்கலாம். அவர்களின் உடல் நலன் மட்டுமின்றி மன நலனையும் மீட்டெடுக்கும் வண்ணம் இங்குள்ள விளையாட்டு சாதனங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. குழந்தைகள் தங்களின் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத்துடன் தங்களை ஒன்றிணைக்கும் திறன் உள்ளிட்ட பன்முக அனுபவங்களை பெறலாம். ஆமை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா உடல், மனம் சார்ந்த தெரபி சிகிச்சைகள், ஓய்வு, தொடுதல் மற்றும் உணரும் செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த விளையாட்டு பூங்காவை நிர்வகிக்கும் அதிகாரிகள் கூறியதாவது, ''மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட சிறு முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த பிரத்யேக பூங்கா அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், தங்களை சுற்றியுள்ள உலகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதை உணர்வதற்கு ஒரு வாய்ப்பையும் வழங்கும்.

அவர்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், விளையாட்டு சாதனங்களை பக்குவமாக கையாளும் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டும். சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் குழந்தைப் பருவத்தை பாதுகாப்பான சூழலில் அனுபவிக்க உதவும். பூங்காவில் செலவிடும் நேரம் சிறப்புக் குழந்தை களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நகர மக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அனைத்து திறனாளிகளும் பயன்படுத்தினால் மட்டுமே அவை வெற்றி பெறும். இந்த பூங்கா மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவும். விளையாடுவது, அங்குள்ள சூழலை ஆராய்வது, நட்பை வளர்ப்பது போன்றவற்றை அனுபவிப்பது மட்டுமல்லாமல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், அவர்களின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும். அவர்களை சுற்றியுள்ளவர்கள் புதிய கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கும் வழிவகை செய்யும்'' என்கிறார்கள்.


Next Story