60 வயதில் அரங்கேறிய ஆனந்த நிகழ்வு


60 வயதில் அரங்கேறிய ஆனந்த நிகழ்வு
x

குழந்தைகளின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. பிறந்தநாள் விஷயத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வயதில் மூத்தவர்களுக்கு கொடுப்பதில்லை.

தங்கள் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு வயதானவர்கள் பலரும் விரும்புவதுமில்லை. அப்படியே பிறந்தநாளை கொண்டாடினாலும் அது எளிமையாகவே நடைபெறும். வீட்டில் உள்ளவர்களுடன் கேக் வெட்டி சில நிமிடங்களில் பிறந்தநாள் விழாவை முடித்துவிடுவார்கள். ஒரு சில இடங்களில் குழந்தைகளுக்கு நிகராக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு.

அது தங்கள் வாழ்நாளில் என்றென்றும் நினைவில் நீங்காத மகிழ்ச்சியான நிகழ்வாகவும் மாறிவிடும். அப்படியொரு பிறந்தநாள் கொண்டாட்டம் உலகளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. 60-வது பிறந்தநாளை கொண்டாடும் நபர் ஒருவரின் வீடியோதான் வைரலாகி பலருடைய பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அந்த நபரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு குடும்பத்தினர் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தனது பிறந்தநாளை குடும்பத்தினர் விமரிசையாக நடத்துவதற்கு முன்வந்திருப்பதை பார்த்து ஆனந்தம் அடைந்தார். ஆனால் அவரே எதிர்பாராத நிகழ்வு ஒன்று அரங்கேறியது. அவருடன் பிறந்தவர்கள் 10 பேர். அதில் இவர்தான் கடைக்குட்டி.

அவருடன் பிறந்த 9 பேரையும் குடும்பத்துடன் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தார்கள். இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடன் பிறந்த 9 பேரும் ஒரே இடத்தில் கூடி இருப்பதை பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார். சகோதர-சகோதரிகள் ஒவ்வொருவரையும் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

சகோதர பாசத்தையும், குடும்ப உறவுகளின் மேன்மையையும் காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகிவிட்டது. பிறந்தநாள் கொண்டாடிய நபர் யார்? அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது பற்றிய தகவல் குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்த வீடியோ ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

''இந்த மனிதன் தனது 60-வது பிறந்தநாளில் உடன்பிறந்தவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டான். மனம் நெகிழ்ந்து போனான். அவர்களை விட இவன் 10 வயது இளையவன்!'' என்று வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

''இது மிகவும் இனிமையான நிகழ்வு. என்ன ஒரு அழகான குடும்பம்'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். வீடியோவை பாராட்டி பலரும் பதிவிட்டிருக்கிறார்கள்.


Next Story