குழந்தைகள் மனதில்... நல்லதை விதைக்கும் 'நல் உள்ளம்'


குழந்தைகள் மனதில்...  நல்லதை விதைக்கும் நல் உள்ளம்
x

பெண்களின் உடல்நலனை மேம்படுத்த, இலவச ஆன்லைன் யோகா பயற்சியும், பெண்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் பெண்மை சம்பந்தமான ஆலோசனை வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார் நீலகிரி மாலதி துரைராஜ்.

நிறைய குழந்தைகள், ஸ்மார்ட் போனுடன் உலா வருவதை பார்க்கிறோம். பொது இடங்களில், அவர்கள் ஸ்மார்ட் போன்களில் வீடியோ பார்ப்பதையும், விளையாடுவதையும் பார்த்துவிட்டு, எந்தவித சலனமும் இல்லாமல் நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். ஆனால் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மாலதி துரைராஜ், அப்படி இயல்பாக கடப்பதில்லை.

ஸ்மார்ட் போன்களுடன் ஐக்கியமாகி இருக்கும் குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம், அவர்களுடன் சில நிமிடம் செலவிட்டு பேசுகிறார். அவர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைப்பதற்காக, குட்டிக் கதைகளை சொல்லி மகிழ்விக்கிறார். கூடவே, ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக, தான் வாங்கி வைத்திருக்கும் சிறுசிறு விளையாட்டு பொருட்களை அவர்களுக்கு பரிசளித்து, அவர்களை ஸ்மார்ட்போன் பிடியில் இருந்து மீட்க முயற்சிக்கிறார்.

இதுமட்டுமல்ல, பெண்களின் உடல்நலனை மேம்படுத்த, இலவச ஆன்லைன் யோகா பயற்சியும், பெண்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் பெண்மை சம்பந்தமான ஆலோசனை வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார். இவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

* சமூக சேவைகளை தொடங்கியது எப்படி?

பள்ளி-கல்லூரி வாழ்க்கையிலேயே பல சமூக பணிகளில், ஈடுபட்டிருந்தாலும் இப்போதுதான் மனநிறைவான சமூக பணிகளை செய்ய முடிகிறது. ஆம்..! நான் பி.பி.ஏ. முடித்துவிட்டு, இப்போது ஒரு தனியார் மருத்துவமனையின் நிர்வாக பிரிவில் பணியாற்றுகிறேன். இங்குதான், பல்வேறு விதமான பொறுப்பான சமூக பணிகளை முன்னெடுக்க முடிந்தது.

* ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக குழந்தைகளுக்கு பரிசளிக்க தொடங்கியது எப்போது?

நான் மருத்துவமனையில் பணியாற்றுவதால், இங்கு ஒரு நாளில் நிறைய குழந்தைகளை சந்திக்க முடிந்தது. அவர்கள் பெற்றோர்களுடன், மருத்துவமனைக்கு வந்தாலும் அவர்களது கவனம் முழுக்க ஸ்மார்ட்போன்களில்தான் இருக்கும். அதில் வீடியோ பார்ப்பதிலும், வீடியோ கேம் விளையாடுவதிலுமே ஆர்வமாக இருந்தனர். நிஜ வாழ்க்கையின் அழகான தருணங்களை தவறவிட்டுவிட்டு, குழந்தைகள் செல்போனுக்குள் மூழ்கி கிடப்பதை தவிர்க்க நினைத்தேன். அப்படி உருவானதுதான், குழந்தைகளுக்கு பரிசளிக்கும் ஆசை.

கடந்த 8 மாதங்களாக, இந்த முயற்சியில் செயலாற்றி வருகிறேன். பேருந்து நிலையம், ஷாப்பிங் மால், பொது இடங்கள், பூங்காக்கள், மருத்துவமனை வளாகம்... இதுபோன்ற இடங்களில், செல்போனும் கையுமாக உலாவும் நிறைய குழந்தைகளுக்கு, என்னால் முடிந்த சிறுசிறு பரிசுகளை வழங்கி ஸ்மார்ட்போன்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்துகிறேன்.

* உங்களுடைய பரிசு, எப்படி குழந்தைகளின் மனநலனை மாற்றும்?

குழந்தைகளை நீங்கள் பிசியாக வைத்து கொண்டால் போதும், அவர்கள் ஸ்மார்ட்போன்களை தேடமாட்டார்கள். இதுதான், என்னுடைய பரிசளிப்பு முயற்சியின் அடிப்படை. குழந்தைகள் விளையாடும் கிளே பொருட்கள் (களிமண்), வரைந்து வண்ணம் தீட்டும் கிரையான்ஸ், கதை புத்தகங்கள், வண்ணம் தீட்டக்கூடிய ஓவிய புத்தகங்கள்... இப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான விஷயங்களை பரிசளிப்பதால், அவர்கள் ஸ்மார்ட்போன் உலகில் இருந்து கொஞ்சம் வெளிவருகிறார்கள். ஏதோ..! என்னால் முடிந்த சிறு முயற்சி.

* பொது இடங்களில், குழந்தைகளை சந்தித்து பேசுகிறீர்கள். பரிசு கொடுக்கிறீர்கள். இதை பெற்றோர் வரவேற்கின்றனரா? இல்லை எதிர்கிறார்களா?

எல்லோரது மனநிலையும் ஒன்றுபோலவே இருக்காது. சில பெற்றோர், மகிழ்ச்சியுடன் என்னுடைய கருத்துக்களை உள்வாங்கி கொள்வர். சிலர் எதிர்பார்ப்பார்கள். சிலர், ஸ்மார்ட்போன் இல்லை என்றால் குழந்தையை சமாளிப்பது கடினம். அவன் சாப்பிடமாட்டான். தூங்கமாட்டான்... இப்படி நமக்கே 'அட்வைஸ்' கொடுப்பார்கள். அதனால், கேட்பவர்களிடம் அழுத்தமாக சொல்வேன். கேட்காதவர்களிடம், தன்மையாக பேச முயற்சிப்பேன். முடியாதபட்சத்தில், கிளம்பிவிடுவேன்.

* வேறு என்னென்னெ முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

எனக்கு பெண்களின் உடல்நலனில் அதீத அக்கறை உண்டு. குறிப்பாக, குடும்ப தலைவிகளின் உடல்நலனை பாதுகாக்க ஆசைப்படுவேன். அதை மையப்படுத்தி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய அலுவலகத்தில் நிறைய மருத்துவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், அவர்களை சில நல்ல காரியங்களுக்காக ஒருங்கிணைக்கிறேன். கடந்த 6 மாதத்தில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இலவச யோகா பயிற்சியினால் பலனடைந்திருக்கிறார்கள்.

* உங்களுடைய ஆசை என்ன?

பெண்களுக்கு சமீபகாலமாக, உடல்நலம் சார்ந்த பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் பருமன், முறையற்ற மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பை கட்டி... இப்படி பெண்மை சார்ந்த பிரச்சினைகள், நிறைய பெண்களுக்கு ஏற்படுகிறது. இதுசார்ந்த ஆலோசனைகளை வாட்ஸ் ஆப்பில் வழங்கவும், அவர்களை மனதளவில் தேற்றவும் நான் தயாராகி வருகிறேன்.

* குழந்தைகளை, செல்போனில் இருந்து மீட்க வேறு என்ன செய்கிறீர்கள்?

பரிசுகள் ஒருபக்கம் என்றாலும், அவர்களோடு பேசி மகிழ்விப்பது மறுபக்கம் நடக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளை சொல்வேன். குட்டி ஜோக் சொல்வேன். ரைம்ஸ் பாடுவேன். அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதன் மூலமாகவே அவர்களை உற்சாகப்படுத்துவேன்.


Next Story