ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள 1000 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இடத்தின் வரலாறு!
எலிசபெத் மகாராணியின் உடல் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் கீழ் உள்ள அரச பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
லண்டன்,
இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், தன்னுடைய 96-வது வயதில் கடந்த 8ம் தேதி காலமானார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.
ராணியின் இறுதி சடங்கு, லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே(மடாலயத்தில்) இன்று நடக்கிறது. அதன்பின், மடாலயத்தில் அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே ராணி எலிசபெத்தின் உடல் புதைக்கப்பட உள்ளது.
ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரண்மனையில் உள்ள மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 6:30 மணியளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிவடைகிறது. அதன் பின் இறுதிச்சடங்குகள் நிகழ்வு தொடங்கி, சுமார் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் என தெரிகிறது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின், லண்டனில் அரசு மரியாதையுடன் நடைபெறும் முக்கியமான இறுதிச் சடங்கு இதுவாகும்.இந்திய நேரப்படி மாலை 3:30 மணியளவில் இந்த சடங்குகள் தொடங்கும்.
லண்டன் மாநகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
முன்னதாக ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டன் மாநகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வழியாக பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டப்பட்ட வண்டியில் எடுத்து செல்லப்படும்.இறுதியாக ராணியின் உடல், வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கு பிரார்த்தனை முடிந்தவுடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, வெஸ்ட்மின்ஸ்டர் கோட்டையில் தரைக்கு கீழே உள்ள அறையில் இறக்கப்படும். இறுதியாக அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் பிரார்த்தனை அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடைபெறும்.
வெஸ்ட்மின்ஸ்டர் மடாலய வரலாறு:
ஏறக்குறைய 1,000 ஆண்டுகளாக, பிரிட்டிஷ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் நடந்து வருகின்றன.
கி.பி 960இல் பெனடிக்டைன் மடாலயம் லண்டனில் நிறுவப்பட்டது. அதன்பின் அரசர் எட்வர்ட் தி கன்பெஸர் 1040இல் ஒரு கல் தேவாலயத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த தளத்தை கணிசமாக விரிவுபடுத்தினார்.
அரசர்களின் முடிசூட்டு விழா மற்றும் அடக்கம் செய்வதற்கான இடமாக கோதிக் அபே உருவாக்கப்பட்டது.1066இல், இந்த மடாலயத்தில் முடிசூட்டப்பட்ட முதல் மன்னர் ஆனார் வில்லியம்-1.
தொடர்ந்து 1245இல், அரசர் ஹென்றி-3 மிகப்பெரிய கோதிக் அபேயின் ஆரம்ப கட்டுமானம் மேற்கொள்ள உரிய வழிமுறைகளை வழங்கினார். 38 ஆண்ட மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள் அங்கு நடந்துள்ளன. இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட ஆண்டில், 1947இல், இதே மடாலயத்தில் ராணி எலிசபெத் பிலிப் மவுண்ட்பேட்டனை மணந்தார்.
அரசர் எட்வர்ட் தி கன்பெஸர் தொடங்கி, 30 மன்னர்கள் மற்றும் ராணிகள் இந்த மடாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 3,330 கல்லறைகள் உள்ளன.அவற்றில் எட்டு பிரதமர்களின் கல்லறைகளும் உள்ளன.
ராணியின் கணவரான இளவரசர் பிலிப் ஏப்ரல் 2021இல், இதே வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் கீழ் உள்ள ராயல் வால்ட்டில், நல்லடக்கம் செய்யப்பட்டார். எலிசபெத் மகாராணியின் உடலும் இளவரசர் பிலிப்புடன் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
ராணியின் பெற்றோரும் விண்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள சிறிய தேவாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டனர். 1649இல் சார்லஸ்-1 மற்றும் 1547இல் மறைந்த ஹென்றி-VIII உட்பட அரச குடும்பத்தினர் பெரும்பாலானோர் வெஸ்ட்மின்ஸ்டர் கோட்டையில் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.